'மாரத்தான், டிரையத்லானில் பங்கேற்பது திடீர் இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும்'
By DIN | Published On : 27th February 2020 01:01 PM | Last Updated : 28th February 2020 11:02 AM | அ+அ அ- |

ஏரோபிக் உடற்பயிற்சி பொதுவாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், மாரத்தான் மற்றும் டிரையத்லான் போன்ற தீவிர உடற்பயிற்சிகள், திடீர் இதயக்கோளாறு ஏற்பட வழிவகுக்கும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு.
வழக்கமாக நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதே நேரத்தில் நீண்ட தூர நடைப்பயிற்சி மாரடைப்பு மற்றும் திடீர் இதயக் கோளாறு இறப்புகளுக்கு 50 சதவீதம் வரை காரணமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மிதமான உடற்பயிற்சி என்பது ஒட்டுமொத்த உடல் செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், மருத்துவத்தைப் போலவே உடற்பயிற்சியும் அதிகம் மேற்கொள்வது சிறந்தது அல்ல. அதையும் மீறி, தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் தகுதியை பரிசோதனை செய்தபின்னர் மேற்கொள்வது நல்லது.
அமெரிக்காவின் ஓக்லாண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாரி ஏ பிராங்க்ளின் இவ்வாறு கூறுகிறார்.
மேலும் அவர், 'மாரத்தான், டிரையத்லான் போன்ற தீவிரமான உடற்பயிற்சி ஒருபக்கம் நன்மைகளை அளித்தாலும், மற்றொரு பக்கம் சில அபாயங்களையும் ஏற்படுத்தும்.
உடனடியாக இல்லாவிட்டாலும், காலப்போக்கில், தீவிர உடற்பயிற்சி செய்யும் ஆண்களிடையே மாரடைப்பு அல்லது அதனால் திடீர் மரணம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. திடீர் இதயக் கோளாறு மரணம், ஆண்களை விட பெண்களுக்கு 3.5 மடங்கு குறைவாக உள்ளது.
டிரையத்லான், மாரத்தான்களில் முறையான பயிற்சி எடுத்துக்கொள்ளாமல் ஈடுபடுவது இம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், இதுபோன்ற பங்கேற்புகளில் ஆரம்பத்தில் இருந்தே நிலையான வேகத்தில் செயல்பட வேண்டும் உள்ளிட்ட சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார்.
எனவே, உடற்பயிற்சி செய்யும்போது உங்களது உடலுக்கு ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது, உடற்பயிற்சி வல்லுநர்களின் அறிவுரைப்படி சரியான முறைகளில் பயிற்சி எடுத்துக்கொள்வது சிறந்தது என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.