ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வியக்கவைத்த வரதட்சணை நிபந்தனை! என்ன தெரியுமா?

நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வியக்கவைத்த வரதட்சணை நிபந்தனை! என்ன தெரியுமா?

நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தமிழ் வழிக் கல்வியில் பயின்று, தம் கடின உழைப்பால் ஐஏஎஸ் தேர்வில் தற்போது நெல்லை மாவட்டத்தின் உதவி ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

ஏற்கனவே சமூக சிந்தனையுள்ள இவர் டாக்டர் அப்துல் கலாம் பெயரில் கிராம இளைஞர்களை ஒருங்கிணைத்து தனது பகுதிகளுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக இவருக்கு திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர்கள் பெண் பார்த்து வந்த நிலையில், சிவகுரு தனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிற்கு நூதன வரதட்சணை நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள் அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவர் ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி தன்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாட்கள் தனது கிராமத்திற்கும், தனது பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே அவர் விதித்த நிபந்தனையாகும்.

இதை அடுத்து பலர் இதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், சென்னை நந்தனம் கல்லூரியில் கணிதப் பேராசிரியரின் மகளான டாக்டர் கிருஷ்ணா பாரதி இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மற்றும் நெல்லை மாவட்ட மக்களிடையே பிரபலமான சிவகுரு பிரபாகரனின் இந்த செயல் மேலும் அவரது நன்மதிப்பை கூட்டியுள்ளது. அவரது இந்த பொதுநல முயற்சிக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com