பகல் நேரத்தில் தூங்குபவரா நீங்கள்?
By DIN | Published On : 03rd March 2020 11:14 AM | Last Updated : 03rd March 2020 11:14 AM | அ+அ அ- |

இரவில் போதுமான அளவு தூக்கத்திற்குப் பிறகும் பகல் நேரத்தில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் ஆகியவை உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்குவது 'ஹைப்பர்சோம்னலன்ஸ்' (hypersomnolence) என அழைக்கப்படுகிறது. இரவு நேரம் தவிர, பகல் நேரத்திலும் தூங்கினால் ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியம் செயலிழக்கும். நம் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற 10,930 பங்கேற்பாளர்களில் சுமார் 34 சதவீதம் பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். சுமார் 3 வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பகல் நேர தூக்கம் அல்லது தூக்கமின்மை இந்த இரு பிரச்னைகளாலும் வயதானவர்களுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்களும் சரியான தூக்க நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.
பகல் நேரத்தில் தூங்குபவர்களைக் காட்டிலும், தூக்கமின்மை கொண்டவர்களுக்கு 2.3 மடங்கு அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு புற்றுநோய், இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் இரு மடங்கு அதிகம் இருந்தது.
எனவே, முடிந்தவரை பகல் நேர தூக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...