'கஷ்டத்திலும் மனிதாபிமானம்' - தெரு நாய்களுக்கு இடமளித்த சென்னைவாசிகள்!

நிவர் புயல் பாதிப்புக்கு மத்தியில் தங்குவதற்கு இடமின்றி சாலையோரம் திரிந்த நாய்களுக்கு சென்னைவாசிகள் இடமளித்து அதற்கு உணவும் அளித்துள்ளனர்.
கனமழையால் விக்னேஷ் சுகுமாரின் வீட்டில் தஞ்சம் புகுந்த நாய்கள்
கனமழையால் விக்னேஷ் சுகுமாரின் வீட்டில் தஞ்சம் புகுந்த நாய்கள்

நிவர் புயல் பாதிப்புக்கு மத்தியில் தங்குவதற்கு இடமின்றி சாலையோரம் திரிந்த நாய்களுக்கு சென்னைவாசிகள் இடமளித்து அதற்கு உணவும் அளித்துள்ளனர். 

நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 

இந்நிலையில், மழை காரணமாக தங்குமிடம் இல்லாமல் தெருவில், சாலையோரங்களில் இருந்த நாய்களுக்கு சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் இடமளித்துள்ளனர். 

திருவேற்காட்டில் வசிக்கும் விக்னேஷ் சுகுமார், தன் வீட்டின் அருகில் இரு மாதங்களுக்கு முன்பு 13 குட்டிகளை ஈன்ற நாய்க்கு வீட்டின் முன்வாசலில் இடமளித்துள்ளார். புயல் குறித்து அறிந்ததும் உடனடியாக நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகத் தெரிவிக்கிறார். 

மேலும் ஆறு நாய்கள் தன் வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கும் அவர், அவை மிகவும் பயங்கரமான நாய்களாகவும், அவற்றில் ஒரு சில நாய்கள் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். 

அதேபோல ஆவடியில் வசிக்கும் யோகா லட்சுமி தன்னுடைய வீட்டில் 3 நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இதுபோன்ற புயல் காலங்களில் நாய்கள் தங்குமிடம் இடம் இல்லாமல் இருப்பது அவற்றின் உயிருக்கு ஆபத்து  என்று கூறியதுடன், அனைவரும் நமக்கு அருகில் உள்ள வாயில்லா ஜீவன்களை பாதுகாப்பதில் உதவ வேண்டும் என்றார். 

மேலும், மழைக்கு ஒதுங்கும் நாய் உள்ளிட்டவைகளை கடைக்காரர்களும், குடியிருப்பாளர்கள் பலரும் விரட்டுகின்றனர். இம்மாதிரியான நேரத்தில் மரத்தின் அடியில் தங்குவதும் விலங்குகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றார்.

லாரி பழுது பார்க்கும் பட்டறை வைத்திருக்கும் எம் மகேஷ், அக்கம் பக்கத்திலுள்ள சுமார் 10 தெரு நாய்கள் தனது பட்டறையில் தஞ்சம் புகுந்ததாகக் கூறினார். 

அவைகளுக்கு தற்காலிமாகவே தங்குமிடம் தேவைப்படுகிறது, அவை நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடப்போவதில்லை. வானிலை சரியானபின்னர் அவை தானாகவே சென்றுவிடும். எனவே, மழைக்காலங்களில் அவைகளுக்கு இடமளியுங்கள் என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com