'கரோனாவால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றத்தை சரிசெய்வது சற்று கடினம்'

கரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தை உடற்பயிற்சியால் சரி செய்வது சற்று கடினம்தான் என ஆய்வொன்று கூறுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தை உடற்பயிற்சியால் சரி செய்வது சற்று கடினம்தான் என ஆய்வொன்று கூறுகிறது. 

சாதாரணமாக கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதில் உடற்பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. 

இருப்பினும், கரோனா வைரஸால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு உடற்பயிற்சி போதுமானதாக இருக்காது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இரட்டையர்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பரவலினால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் முதல் இரு வாரங்களில் மக்களின் உடல் செயல்பாடு குறையத் தொடங்கியது. அதேபோன்று வெளியில் செல்ல முடியாத காரணத்தால் பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

PLOS ONE என்ற இதழில் சமீபத்தில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 900க்கும் மேற்பட்ட ஒத்த மற்றும் ஒரே பாலின சகோதர, சகோதரிகளின் தரவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கரோனா காலம் தொடங்கிய இரு வாரத்தில் உடல் செயல்பாடு குறைந்து வருவதாகக் கூறியவர்கள், அதிக அளவு மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கொண்டிருந்தனர். ஆனால், சிலர் தங்களது உடல் செயல்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கினர். 

கரோனா காரணமாக உணரும் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் எதிர்கொள்ளும் ஒரு வழிமுறையாக அவர்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வதாக எல்சன் எஸ். ஃபிளாய்ட் கல்லூரியின் பேராசிரியர் முன்னணி எழுத்தாளர் கிளென் டங்கன் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பான கணக்கெடுப்புகளில், 42% பேர் கரோனா நெருக்கடி தொடங்கியதிலிருந்து உடல் செயல்பாடுகளின் அளவு குறைந்து வருவதாகவும், 27% பேர் தங்களது செயல்பாடுகளை அதிகரித்துள்ளதாகவும், மேலும் 31% பேர் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த ஆய்வில், உடல் செயல்பாடு மற்றும் மன அழுத்தத்திற்கு இடையிலான தொடர்பு, மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் குழப்பமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பெரும்பாலானோருக்கு நாளடைவில் உடல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மன அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படவில்லை. 

எனவே, சாதாரண பயிற்சிகள் இவ்வாறான மன அழுத்தத்தை சரிசெய்ய பயன்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கரோனாவால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்க கூடுதல் பயிற்சிகள், மனநல ஆலோசனைகள் தேவை என்றும் கூறுகின்றனர். கரோனா தாக்கம் குறைந்து ஒரு சில மாதங்களில் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com