செயற்கை குளிர்பானங்கள் அதிகம் அருந்துவதற்கு காரணம் இதுதான்!
By DIN | Published On : 06th December 2021 01:51 PM | Last Updated : 16th December 2021 12:53 PM | அ+அ அ- |

இளநீர், சர்பத் என்று இயற்கை பானங்கள் மறைந்து 'சாப்ட் ட்ரிங்க்ஸ்' எனும் செயற்கை குளிர்பானங்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அதிகம் வந்துவிட்டன. குறிப்பாக 'எனர்ஜி ட்ரிங்க்' என்ற பெயரில் ஏராளமான பெயரில் குளிர்பானங்கள் சந்தைக்கு வந்து வெற்றிகரமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.
குளிர்பானங்கள் பருகுவதால் எடை அதிகரிப்பு, பற்சிதைவு, நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு, எலும்பு தேய்மானம் என உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், இந்த பாதிப்புகள் தெரிந்தும் சுவை ஒட்டிவிட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை தொடர்ந்து அருந்துகின்றனர்.
வயிற்றுப் பிரச்னைகள் இருந்தால்கூட குளிர்பானங்களை குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், உண்மையில் குளிர்பானங்கள் வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை என்ற விழிப்புணர்வு படித்த மக்களிடம்கூட இல்லை.
பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பாடு முடித்த பின்னும், அலுவலக சந்திப்புகளிலும் என நவீன பானமாக இந்த குளிர்பானங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
செயற்கை குளிர்பானங்களில் ரசாயனம், சர்க்கரை, தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு எந்தவித நன்மைகளும் இல்லை. அதில் கலக்கப்படும் ரசாயனங்களே தனிப்பட்ட சுவைக்குக் காரணம்.
குளிர்பானங்களை தொடர்ந்து அருந்துவதால் குறிப்பாக கல்லீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் கல்லீரலே பாதிக்கப்படுவதால், உடலில் கொழுப்புகள், நச்சுகள் சேர்ந்து பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அடுத்ததாக பற்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆய்வு
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலிய ஆராய்ச்சி கவுன்சில் டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியாக, குளிர்பானங்கள் அதிகம் அருந்துவதற்கான காரணங்களை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை 'ஆப்பெடைட் ஜர்னல்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
120-க்கும் மேற்பட்ட இளங்கலை பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் 40-50%பெரியவர்கள் வாரத்திற்கு ஒரு குளிர்பானத்தை உட்கொள்கின்றனர். 17-25 வயதுக்குட்பட்டவர்கள் குளிர்பானங்களை அதிகம் அருந்துகின்றனர்.
குளிர்பான நுகர்வுக்கான காரணங்கள்
சூப்பர் மார்க்கெட்டுகள், அனைத்து பலசரக்கு கடைகள், ஆன்லைன் ஸ்டோர்கள், ஸ்டார் உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் என பெரும்பலாக மக்கள் செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் குளிர்பானங்கள் கிடைக்கும் என்ற அறிவிப்பு முக்கியமான காரணம்.
அடுத்ததாக குளிர்பானங்கள் அதிகளவில் மார்க்கெட்டிங் செய்யப்படுவதால் அனைத்து ஊடகத்தின் வாயிலாகவும் மக்களை சென்றடைகிறது. இது மக்களின் மனதில் நன்றாக பதிந்துவிடுகிறது. ஒருமுறை பயன்படுத்திப் பார்க்கலாம் என்று தொடங்கி பலரும் அடிமையாகிவிடுகின்றனர். வண்ண நிறங்களில் கிடைப்பது குழந்தைகளை கவர்கிறது.
மேலும், சந்தைப்படுத்தும்போது இளைஞர்களை கவரும் வகையில் 'நண்பர்களுடன் கொண்டாடுங்கள்', 'உற்சாகமாக இருங்கள்' என்று உணர்ச்சி ரீதியான வாசகங்கள் இடம்பெறுவதாலும் இளைஞர்களால் அதிகம் கவரப்படுகின்றன.
அடுத்ததாக குளிர்பானங்களை மீண்டும் மீண்டும் அருந்துவதற்கு அதில் உள்ள ஒரு ரசாயன போதைப் பொருள் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது குறிப்பிட்ட எந்தவொரு ரசாயனத்தின் சுவையே உங்களை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டுகிறது.
பெரியவர்களும் குழந்தைகளும் குளிர்பானங்களை அருந்துவதைக் குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள் குளிர்பானங்கள் அருந்துவதால் கல்வித் திறன் குறையும் என்றும் எச்சரிக்கின்றனர்.
எனவே, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குளிர்பானங்களை கொடுத்துப் பழக்க வேண்டாம், இளைஞர்களும் பெரியவர்களும் படிப்படியாக குளிர்பானங்களை அருந்துவதை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.