முகக்கவசம் அணியும்போது கவர்ச்சியானவர்கள் ஆண்களா?- ஆய்வு சொல்வது என்ன?

மருத்துவ முகக்கவசங்களை அணியும்போது ஆண்கள் கவர்ச்சியாகத் தெரிவதாக ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியும்போது கவர்ச்சியானவர்கள் ஆண்களா?- ஆய்வு சொல்வது என்ன?
Published on
Updated on
2 min read

மருத்துவ முகக்கவசங்களை அணியும்போது ஆண்கள் கவர்ச்சியாகத் தெரிவதாக ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது. 

முகக்கவசம்... கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசியப் பொருளாக இருந்து வருகிறது. கரோனா அலைகள் முடிவுக்கு வரும்வரை இதன் பயன்பாடு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

முதலில் முகக்கவசம் பயன்படுத்தும்போது அது எந்த அளவுக்கு வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது? எந்த வகை முகக்கவசம் அணிய வேண்டும்? எப்படி அணிய வேண்டும்? என்பன போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளும் வந்தன. 

அதன்படி, இரட்டை முகக்கவசம், என்95 முகக்கவசம், மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய மருத்துவ(சர்ஜிக்கல்) முகக்கவசம் ஆகியவை அதிக பயன்பாட்டில் இருக்கின்றன. துணியால் ஆன முகக்கவசம் வைரஸ் தொற்றில் இருந்து குறைந்த அளவே பாதுகாப்பு அளிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 

வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் முகக்கவசம் என்பதைத் தாண்டி இப்போது உடைக்கு பொருத்தமான முகக்கவசங்களும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அது ஒரு பேஷனாகவும் மாறிவிட்டது. 

இந்தவொரு சூழ்நிலையில்தான் முகக்கவசம் அணிவது கவர்ச்சியாக காட்டுவதாக புதிய ஆய்வொன்றில் கூறப்படுகிறது. 

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மருத்துவ முகக்கவசங்களை அணியும் ஆண்கள் கவர்ச்சியாக இருப்பதாக பெண்கள் கூறுவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கார்டிஃப் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் சைக்காலஜி ஆய்வாளர்கள், எந்த வகை முகக்கவசம், எந்த பாலினத்தவருக்கு கவர்ச்சியாக இருக்கிறது என மேற்கொண்ட ஆய்வில் இவை தெரியவந்துள்ளன. 

சைக்காலஜி படிக்கும் 43 மாணவிகளிடம், 160 ஆண்களின் முகம் கவர்ச்சி குறித்து மதிப்பிடக் கேட்கப்பட்டது. அதிலும், முகக்கவசம் எதுவும் அணியாமல், புத்தகத்தால் மறைத்த நிலையில். துணியால் ஆன முகக்கவசம் அணிந்த நிலையில், மருத்துவ முகக்கவசம் அணிந்த நிலையில்.. என நான்கு மதிப்பீடுகள் எடுக்கப்பட்டன. 

இதில், துணி முகக்கவசத்தை விட மருத்துவ முகக்கவசம் அணியும்போது ஆண்கள் கவர்ச்சியாகத் தெரிந்ததாகக் கூறியுள்ளனர். 

அதுபோல, முகக்கவசம் அணியாததை ஒப்பிடுகையில், துணி முகக்கவசம் அணியும்போது கவர்ச்சியாக இருந்ததாகக் கூறியுள்ளனர். 

கவர்ச்சியைத் தாண்டி, மருத்துவ முகக்கவசம் அணிவது வைரஸ் தொற்றில் இருந்து கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்றும் கூறினர்.

மேலும், 'முகக்கவசம் அணிவது முன்பெல்லாம் நோயாளிகள் என்ற  பிம்பத்தைக் காட்டும். இப்போதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டது. மக்களின் மனநிலை மாறியுள்ளது' என்றும் கூறினர். 

ஆண்களை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட ஆய்வானாலும், அனைவருமே முகக்கவசம் அணியும்போது கவர்ச்சியாகத் தெரிவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com