ஏ.சி. வேண்டாம்! மின்விசிறி போதும்!

கோடையை சமாளிக்க பெரும்பாலாக நகரங்களில் மக்கள், இப்போது மின்விசிறிகளுக்குப் பதிலாக குளிரூட்டி(ஏ.சி)யை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது
ஏ.சி. வேண்டாம்! மின்விசிறி போதும்!

கோடை வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் வழக்கத்தைவிட  வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. 

இதனால் கோடையை சமாளிக்க பெரும்பாலாக நகரங்களில் மக்கள், இப்போது மின்விசிறிகளுக்குப் பதிலாக குளிரூட்டி(ஏ.சி)யை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில், ஒரு சிலர் வீட்டில் மட்டுமே ஏசி இருந்த நிலையில், இன்று இந்தியாவில் 13% பேர் ஏசியைப் பயன்படுத்துகின்றனர். 2040 ஆம் ஆண்டு இது 69% ஆக அதிகரிக்கும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. 

ஏசி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் வாகனப் பெருக்கத்தினாலும் இன்று வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது. மின் சாதனங்களில் இருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவது இன்றைய காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம். 

அந்தவகையில் ஏசி, அறையின் உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி வெப்பநிலையைக் குறைக்கிறது. ஆனால், இதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

ஏசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் விளைவுகளும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. 

♦ ஏசியின் அதிக பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். சரும வறட்சி ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது. 

♦ ஏசிக்கு நேர் எதிரே அமர்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமர்ந்தால் மூக்கடைப்பு, சளி உள்ளிட்ட சைனஸ் பிரச்னைகள் ஏற்படலாம். 

♦ சரும மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் ஏசியில் இருந்தால் பாதிப்பு அதிகமாகலாம். 

♦ சிலருக்கு தலைவலி, நுரையீரல் தொற்று போன்றவை ஏற்படலாம்.

♦ இவற்றை ஓரளவு தவிர்க்க ஏசியையும் ஏசி அறையையும் அவ்வப்போது சுத்தம் செய்வது கட்டாயம். 

♦ சிலர் நாள் முழுவதும் ஏசியை பயன்படுத்துவர். அப்படி இல்லாமல் அவ்வப்போது மட்டுமே ஏசியைப் பயன்படுத்துவது பாதிப்புகளைக் குறைக்கும். 

♦ ஏசி அறையில் இருப்பதால் விளைவுகள் ஏற்படும் என்பதையும் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

இந்த சூழ்நிலையில்தான் ஏசியை விட மின்விசிறி(ஃபேன்) பயன்படுத்துவதுதான் சரியான தேர்வு என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வின்படி, நிலையான, குளிர்ந்த காற்றோட்டத்திற்கு ஏசியைவிட மின்விசிறி சிறந்ததாக இருக்கும் என்று கூறுகிறது. 

நெதர்லாந்தின் 'தி லான்செட் பிளானட்டரி ஹெல்த்' என்ற இதழின் மூலமாக சிட்னி பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழுவுடன் மோனாஷ் பல்கலைக்கழகம், நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் ராட்பவுட் பல்கலைக்கழக மருத்துவ மையம் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. 

அதில், எதிர்கால சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் நோக்கிலும் தனிப்பட்ட உடல்நிலையைக் கருத்தில்கொண்டும் மக்கள் ஏசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது ஏசி பயன்பட்டால் உடலியல் பிரச்னைகள் ஏற்படுவதும் உறுதியாகியுள்ளது. எனவே, அவ்வப்போது மின்விசிறிகளைப் பயன்படுத்தி ஏசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

தற்போது ஏசி வெப்பநிலையை சிலர் மிகவும் குறைத்து பயன்படுத்துகின்றனர். 18 டிகிரிக்கும் குறைவாகப் பயன்படுத்துவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அதனால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் என பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். 

பதிலாக, வெப்பநிலையைக் குறைக்க கூடுதலாக மின்விசிறியைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது கூடுதல் மின்விசிறிகளைப் பயன்படுத்தும்போதும் சரி, மின்விசிறியின் வேகத்தைக் கூட்டும்போதும் அறையின் வெப்பநிலை குறைகிறது, தேவையான காற்று கிடைக்கிறது. மேலும் மின்விசிறிகள் பயன்படுத்துவதால் உடல் வெப்பநிலையும் சீராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசி அறையில் இருந்துவிட்டு நீங்கள் வெளியே செல்லும்போது வெளிப்புற வெப்பநிலைக்கு உங்கள் உடல் ஒத்துழைக்காது. இதனாலே பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதுவே மின்விசிறி பயன்படுத்தும்போது உங்கள் உடல் ஒரே வெப்பநிலையில் இருக்க முடியும். மனித உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையைவிட குறைவான அல்லது அதிகமான வெப்பநிலையை உடல் தங்கும்போது விளைவுகள் வரும். இதனால் சில நேரங்களில் உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. 

மேலும், உடலில் உள்ள நச்சுகள் வியர்வை மூலமாக வெளியேறுகிறது. ஏசியில் இருக்கும்போது வியர்வை சுரப்பதில்லை. இதனால் நச்சுகள் உடலிலேயே தேங்கி விடுகின்றன. 

இவ்வாறு ஏசியைப்பயன்படுத்துவது வெளி உலகுக்கும் தனிப்பட்ட மனிதனுக்கும் பல பாதிப்புகள் இருக்கின்றன. சில இடங்களில் அவசியம் பயன்படுத்த வேண்டிய இடங்களில் அவ்வப்போது பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பயன்படுத்தலாம். 

எனினும் முடிந்தவரை சுற்றுச்சூழலைக் காக்கவும் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் ஏசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com