சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வருமா?

சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வருமா?
Published on
Updated on
2 min read

சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

உணவில் சைவம், அசைவம் என இரு வகைகள் இருந்தாலும் இரண்டிலும் சத்துகள் நிறைந்துள்ளன. எனினும் இரண்டில் எது நல்லது என்பது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு சாப்பிடும் பெங்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33% அதிகம் என்று தெரிய வந்துள்ளது. 

26,000 க்கும் மேற்பட்ட நடுத்தர வயது பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'பிஎம்சி மெடிசின்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஆய்வில் பங்கேற்ற 26,318 பெண்களில், 822 பேருக்கு(3%) அடுத்த 20 ஆண்டுகளில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. வயது, புகைப்பிடித்தல் ஆகிய காரணிகளை தவிர்த்துப் பார்த்தால் சைவ உணவு உண்பவர்கள் அதிகம் இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தைக் கொண்டவர்களாக இருந்தது அறியப்பட்டது. 

சைவ உணவு ஆரோக்கியமானதா?

சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அதிகம் ஏற்படுவது குறித்து சரியான காரணங்களைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகளின் அவசியத்தை விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 

எனினும் 'சைவ உணவுகளிலும் சத்துமிக்க, சத்து குறைந்த உணவுகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் உணவு மாறுபடும். எனவே, சைவ உணவுகளைக் கைவிட வேண்டும் என்று அவசியமில்லை. தாவரங்களில் உள்ள புரதம், கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துகளைவிட விலங்குகளின் இறைச்சிகளில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. சீரான ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார்' ஆய்வாளர் ஜேம்ஸ் வெப்ஸ்டர். 

சைவ விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆனால், இங்கிலாந்தில் சமீபமாக சைவ உணவுகள் பிரபலமடைந்துள்ளன. 2021 கணக்கெடுப்பின்படி, சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 5-7% அதிகரித்துள்ளது. மேலும், ​​நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்க சைவ உணவுகள் பயன்படுகின்றன. 

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க இறைச்சிகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் தான் இப்படி ஓர் ஆய்வின் முடிவு வந்துள்ளது. எலும்புகளுக்கு வலு சேர்ப்பது அசைவ உணவுகள்தான் என்பதும் வேறு சில ஆய்வுகளில் உறுதி செய்யபட்டுள்ளது என்பதால் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் பெற வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. 

எனினும், சைவ உணவு உண்பவர்கள் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்க கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர். 

பி.எம்.ஐ. 

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைக் குறிக்கும் பி.எம்.ஐ., சைவ விரும்பிகளிடையே குறைந்திருந்ததும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அசைவ உணவு சாப்பிடுபவர்களின் பி.எம்.ஐ., சைவ உணவு சாப்பிடுபவர்களின் பி.எம்.ஐ. யை விட அதிகரித்து காணப்பட்டது. 

பி.எம்.ஐ. குறைவாக இருப்பதன்(under weight) காரணமாகவும் சைவ விரும்பிகளுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படலாம் என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் மேலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com