திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் வாய் கொப்புளிக்காதீர்கள்!

திருமண மண்டபங்களில், ஹோட்டல்களில் சாப்பிட்டவுடன் வாய் கொப்புளிக்கும் பழக்கம் இன்று பலருக்கும் உண்டு. இது சரியானதுதானா?
கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்றைய காலகட்டத்தில் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்கள் அதிகரித்து வருகின்றன. மாறி வரும் வாழ்க்கை முறைகளால் பெரும்பாலானோருக்கு மிகவும் எளிதாக தொற்றுகள் ஏற்பட்டு விடுகின்றன. இதனாலே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இன்று அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

தொற்று பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.  

ஆனால், சுத்தம், சுகாதாரம் குறித்து பேசும் பலரும் பொது இடங்களில் அதுகுறித்து பெரிதாக கண்டுகொள்வதில்லை. 

சத்தியமங்கலங்கலத்தைச் சேர்ந்த வாசகர் மூர்த்தி என்பவர் முகநூலில் இட்டுள்ள ஒரு பதிவு இதைத்தான் உணர்த்துகிறது. 

அவரது முகநூல் பதிவு:

_"நேற்று மாலை திருமண வரவேற்பு ஒன்றில், கலந்து கொண்டு, விருந்தை முடித்துக் கொண்டு, கை கழுவதற்காக வாஷ்பேஷனுக்கு சென்றேன்.*
எனக்கு அருகில் இருந்த டாக்டர் நண்பர் ஒருவர், 
"ஸார் கையை மட்டும் கழுவுங்க. வாயை கொப்புளிக்காதீங்க" என்று சொன்னார்.
நான் குழப்பத்தோடு "ஏன்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர் "ஸார் பெரும்பாலான கல்யாண மண்டபங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படாமே இருக்கலாம். பொதுவா கல்யாண மண்டபங்கள் தினசரி உபயோகத்தில் இருக்காது. அதன் காரணமா தொட்டியில் தேங்கி நிக்கிற, தண்ணியில் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் பல்கி பெருகி இருக்கும்.

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கிறவங்க, அந்த தண்ணியில் வாயைக் கொப்புளிக்கும்போது அந்த வைரஸ்கள், பாக்டீரியாக்கள் தொண்டைக்குள்ளே போய் "த்ரோட் இன்ஃபெக்ஷன்" (Throat Infection) ஏற்பட வாய்ப்பு அதிகம்."
"அப்படீன்னா வாய் கொப்புளிக்க என்ன பண்றது டாக்டர்?"
"கொப்புளிக்கணும்ன்னா  நாம் உட்கார்ந்து சாப்பிடும் போது குடிக்கிறதுக்காக, தண்ணீர் பாட்டிலை வைப்பாங்க இல்லையா? அந்த பாட்டிலை கையோடு எடுத்துகிட்டு வந்துடணும். அந்த தண்ணியில் வாயை கொப்புளிக்கிறது நல்லது." என்று சொல்லிவிட்டு தன் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை உபயோகித்து வாயை கொப்புளிக்க ஆரம்பித்தார்.

வாழ்க்கையில் யாராவது ஒருவர், ஏதாவது ஒரு பாடத்தை, நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

திருமண மண்டபங்களில் மட்டுமல்ல, இன்று ஹோட்டல்களுக்குச் செல்லும் பலரும் அங்கு சாப்பிட்டுவிட்டு கைகளைக் கழுவும்போது வாய் கொப்புளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பற்களின் இடுக்குகளை சுத்தம் செய்ய வாய் துர்நாற்றத்தைப் போக்க வாய் கொப்புளிக்கிறோம். ஆனால், திருமண மண்டபங்களில், ஹோட்டல்களில் குழாய்களில் வரும் நீர் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும் என்று தெரியாது. தண்ணீர் தொட்டிகளை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியாது. அப்படி இருக்க, அதில் வாய் கொப்புளிக்கும்போதும் தொற்றுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. 

அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற பொது இடங்களில் வாய் கொப்புளிப்பதைத் தவிர்க்க வேண்டும் அல்லது சுத்தமான தண்ணீரில் வாய் கொப்புளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com