நகம் அடிக்கடி உடைகிறதா? அதற்குக் காரணம் இதுதான்!
By DIN | Published On : 05th June 2023 05:41 PM | Last Updated : 05th June 2023 05:54 PM | அ+அ அ- |

பெரும்பாலான பெண்கள் தங்கள் கைவிரல்களை அழகாக வைத்துக்கொள்வதிலும், நகங்களைப் பாதுகாப்பதிலும் தனிக்கவனம் செலுத்துவார்கள்.
ஒரு சிலருக்கு சின்ன சின்ன வேலைகளைச் செய்தாலும் நகங்கள் அடிக்கடி உடைந்துவிடும். இதனால், அழகாக பெரியதாக நகங்களை வளர்த்து நெயில் பாலீஷ் போடவேண்டும் என்று நினைப்பவருக்கு மனவருத்தம் தான் மிஞ்சும். நகங்கள் உடைந்து போவதற்கு ஒருசில காரணங்கள் உண்டு. ஒரு சிலருக்கு தன்னை அறியாமலேயே நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும். ஒருசிலர் நகங்களை வெட்டி பராமரிக்க போதிய நேரம் ஒதுக்காமல் இருப்பர்.
நகங்கள் அடிக்கடி உடைவதற்கும், சரியான வளர்ச்சி இல்லாததற்கும் அதற்கு தேவையான சரியான ஊட்டம் இல்லாததே காரணம். பொதுவாக நமது நகங்கள் புரதத்தினால் ஆனவை. நமது தலைமுடியில் இருக்கும் கரோட்டின் எனப்படும் புரதம் தான் நகங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது.
ஆரோக்கியமான நகங்களை பெற சில டிப்ஸ்...
1. எலுமிச்சை சாறு
வைட்டமின் சி நகங்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொண்டு, அதை கை மற்றும் கால் நகங்களில் ஒரு நாளுக்கு ஒருமுறை தேய்த்து ஊறவைக்க வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இவ்வாறு செய்வதால் நகங்கள் நன்கு வளருவதோடு, அவற்றை சுத்தமாகவும், பாக்டீரியாக்கள் இல்லாமலும் பாதுகாக்கிறது.
2. தேங்காய் எண்ணெய்
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு உங்கள் நகங்களை மசாஜ் செய்வதும் நக வளர்ச்சியைத் தூண்டும். தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது. தினமும் இரவில் தூங்கும் முன் உங்கள் கை, கால் நகங்களை தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்யவும். சில நாள்களிலேயே நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள்.
3. ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு கொலாஜன் நக வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. நகங்களுக்கு உயிரோட்டம் தருவது ஆரஞ்சு. ஒரு கிண்ணத்தில் சிறிது ஆரஞ்சு சாறு எடுத்துக்கொண்டு நகங்களில் தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் சுத்தப்படுத்தவும். ஒருநாளுக்கு ஒருமுறை இதைச் செய்யலாம்.
படிக்க: கோடைக்காலத்தில் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய 5 காய்கறிகள்!
4. ஆலிவ் எண்ணெய்
சேதமடைந்த மற்றும் அடிக்கடி உடையும் தன்மை கொண்ட நகங்களுக்கு ஆலிவ் எண்ணெய் மிகவும் சிறந்தது. இயற்கையிலேயே இது எளிதில் ஊடுருவக்கூடிய தன்மை கொண்டது. நகங்களின் உட்சென்று வறட்சியைக் குணப்படுத்துவதோடு, நகங்களை மிருதுவாக்கும். தினமும் ஆலிவ் எண்ணெய் கொண்டு கை மற்றும் கால் விரல்களுக்கு மசாஜ் கொடுக்கலாம்.
5. ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்களைத் தவிர்க்கலாம்..
நெயில் ஆர்ட், ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் ஆனால் இதுபோன்ற செயற்கை பயன்பாடுகள் உங்கள் நகங்களின் வளர்ச்சியைத் தடுக்கும். எப்போதாவது ஒருமுறை தங்களை அழகுபடுத்திக்கொள்ள இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து செய்வது நகங்களுக்கு நல்லதல்ல.
6. பயோட்டின்
பயோட்டின் நகங்கள் மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டும் சக்தி கொண்டது. மஞ்சள் நிறப்பழங்கள், அவகோடா போன்ற பயோட்டின் நிறைந்த உணவை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளலாம். பயோட்டின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன், மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெறவும்.
7. கீரைகள்
கீரையில் அதிகளவில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி9 சத்து நிறைந்துள்ளது. இது நகங்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிவதுடன், நகங்களை வலுவாக்கவும் பயன்படுகிறது.
8. முட்டை ஓடுகள்
முட்டை ஓடுகளில் கூடுதல் கால்சியம் உள்ளது. நகங்களை வலுப்படுத்த இது உதவுகிறது. முட்டை ஓடுகளைச் சுத்தம் செய்து அரைத்து அந்த பேஸ்ட்டை நகங்களில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தப்படுத்தலாம்.
9. தேன்
பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது தேன். இது நகங்களை ஊட்டமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். எலுமிச்சை சாற்றுடன் 2 தேக்கரண்டி தேனைக் கலந்து கால் விரல்களில் தடவி மஜாஜ் செய்யலாம்.
10. பூண்டு எண்ணெய்
பூண்டில் செலினியம் நிறைந்துள்ளது. இது நகங்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட பூண்டு துண்டுகள் அல்லது பூண்டு பேஸ்ட் நகங்களில் தேய்க்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.
மேற்கண்ட டிப்ஸ்களை எல்லாம் சரியாகப் பின்பற்றினீர்கள் எனில் உங்களது நகங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். அதில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...