கர்ப்பிணிகளுக்கு பல் சொத்தையால் பிரச்னை ஏற்படுமா?

கர்ப்பிணிகளுக்கு பல் சொத்தை பிரச்னை இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்ப்பிணிகளுக்கு பல் மற்றும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. காரணம், கருவுறுதலை வாய் ஆரோக்கியம் மாற்றுகிறது அல்லது வாய் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றம் கருவுறுதலை பாதிக்கலாம் என்பதே.

ஏறக்குறைய 70 சதவீத பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுகிறது, இரைப்பையிலிருந்து உணவுடன் வெளியேறும் போது, அதனுடன் வெளியேறும் அமிலங்களால், பற்களில் அரிப்பு ஏற்படும். ஆனால், சோடியம் பைகார்பனேட் கொண்டு வாய்கொப்பளித்தால் இந்த பிரச்னை தவிர்க்கப்படும்.

அதற்காக, குமட்டல் ஏற்பட்ட உடனேயே பல் துலக்கக் கூடாது. இது மேலும் பற்களை பலவீனமாக்கிவிடலாம்

அதாவது, கர்ப்பிணிகளுக்கு கருவுற்றிருப்பதால் ஏற்படும் சில அசௌகரியங்கள் நேரடியாகவே பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதாவது, காலையில் எழுந்ததும் பசி காரணமாக எதையாவது சாப்பிடுவது, பிடித்ததை சாப்பிடுகிறேன் என்று பற்களை பதம்பார்க்கும் ஜங்க் உணவுகளை சாப்பிடுவது, பல முறை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பது போன்றவையும் பற்களில் சொத்தை ஏற்படுவது அல்லது பல் சிதைவுக்கு வழிகோலும்.

இதனைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை உணவு உண்ட பிறகும் வாய்க்கொப்பளிப்பது சரியான தீர்வாக பலருக்கும் அமையலாம்.

சில பெண்களுக்கு ஈறுகளில் பிரச்னை இருந்தால், இதுபோன்ற காரணங்களால் அது இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களில் பெரிதாகி, சிலருக்கு நிறை மாதத்தில் தீவிரமாகக் கூட மாறுகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகலாம்.

வீட்டிலேயே பல் மற்றும் வாய் பராமரிப்பை நன்கு மேற்கொள்வது மற்றும் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் போன்றவை இந்த பிரச்னைகளைக் குறைக்க உதவும்.

கர்ப்பகால பல் பிரச்னைகள் சில வேளைகளில் குறைப்பிரசவம், பிறந்த குழந்தையின் எடைகுறைவு போன்றவற்றுக்குக் நேரடியாகக் காரணமாக இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

வாய்வழி ஆரோக்கியம் பொது உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் கர்ப்பக் காலத்தில் இது இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதிப்பை அளிக்கலாம். கர்ப்ப காலத்தில் வாய் மற்றும் பல் ஆரோக்கியத்தை புறக்கணிப்பது பல் சொத்தை மற்றும் பல் இழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மேற்சொன்ன பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று பலருக்கும் விழிப்புணர்வு இல்லாத நிலையே இன்றுவரை நீடிக்கிறது.

ஒருவேளை, பல் பிரச்னை இருப்பின் முதல் 14 மற்றும் 20 வது வாரங்கள் கர்ப்பிணிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கும் வலியைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் வழங்கப்படுகிறது. வலி மற்றும் வீக்கம் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு கர்ப்பிணிகள் விரைவில் சிகிச்சைப்பெற வேண்டும். தள்ளிப்போடக் கூடாது. ஒருவேளை சிகிச்சை எடுக்க தாமதித்தால், அதனால் கர்ப்பிணிக்கும் கருவுக்கும் கூட பிரச்னை ஏற்படலாம். இது சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பை விடவும் பெரியதாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரு சில சிகிச்சைமுறைகள் மட்டும் பிரசவ காலத்துக்குப் பிறகு தள்ளிப்போடப்படுகிறது. அதுவும் தற்காலிக தீர்வுக்குப் பிறகே.

நினைவில் கொள்ளவேண்டியவை

ஈறு நோய்களுக்கு சிகிச்சை: பல் ஈறு நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களில் பாதுகாப்பாக சிகிச்சை பெறலாம்.

முன்னெச்சரிக்கை: ஃபுளூரைடு கலந்த பற்பசையை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தி பல் துலக்குவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தை மேற்கொள்ளலாம். பல் மருத்துவரிடம் பல் பரிசோதனை செய்துகொள்வது பல் சிதைவு ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கலாம்.

உணவு: சர்க்கரையை குறைத்து புதிதாக வாங்கிய பழங்கள் மற்றும் அதிகளவில் காய்கறிகளை சாப்பிடலாம்.

பல் மற்றும் ஈறுகளில் எந்தப் பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரை நாடலாம். கர்ப்பிணிகள் என்பதால் சிகிச்சை அளிக்கப்படாது என்று தள்ளிப்போடாமல் உரிய ஆலோசனையைப் பெறவேண்டும் என்பதே பெரும்பாலான மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com