
முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் பெண்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இதற்காக பெண்கள் பலரும் அழகு சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர்.
முகப்பருக்கள் ஏன் ஏற்படுகிறது?
பருவநிலை மாற்றம், ஹார்மோன் பிரச்னைகளால் உடலில் மாற்றம், உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது.
இவற்றுள் சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று, ஹார்மோன் சுரப்பு உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகும்.
என்ன செய்யலாம்?
சிலர் முகப்பருக்களை கைகளைக் கொண்டு அடிக்கடி தொடுவார்கள். மேலும் அவற்றை கிள்ளி எறிந்துவிடுவார்கள்.
அவ்வாறு செய்தால் முகப்பருக்கள் சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடும். எனவே, முகப்பருக்களின் மீது கை வைக்கக் கூடாது.
சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று வந்த பிறகு கண்டிப்பாக முகத்தைக் கழுவ வேண்டும்.
சருமத்தில் எண்ணெய் பசையின்றி பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை கழுவ வேண்டும்.
சோப்பு, க்ரீம் கொண்டோ அல்லது அவ்வப்போது வெறும் தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தைத் துடைக்க சுத்தமான துணியை பயன்படுத்த வேண்டும்.
வெயிலில் சென்றால் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்தலாம். தேவையற்ற ரசாயன க்ரீம்களை பயன்படுத்தக்கூடாது.
உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு சோப்பு, பேஸ்வாஷ் அல்லது க்ரீம்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் உடைகள், குறிப்பாக தலையணை, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
முகப்பருக்களை விரட்ட..
வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பிலையை அரைத்து முகத்தில் பேக் போடலாம்.
அடுத்ததாக, முகப்பருக்களை விரட்ட மஞ்சள் மிகச்சிறந்த பொருள். தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் முகத்தில் மஞ்சள் தடவிவிட்டு குறிப்பாக பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
முகத்தைக் கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரை தடவி வர பருக்கள் இன்றி முகம் பொலிவுடன் இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.
சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. உடல் வெப்பநிலை காரணமாகவும் பருக்கள் வரலாம். எனவே, முகத்தில் சந்தனத்தை அப்ளை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை சருமத்திற்கு மிகவும் நல்லது. இது சருமத்திற்கு குளிர்ச்சியைத் தருவதுடன் முகப்பருக்களை சரிசெய்யக் கூடியது.
இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றியும் முகப்பருக்கள் குறையவில்லை எனில் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
உணவுகள்
முகப்பருக்களை விரட்ட குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக்கொண்டால் போதுமானது.
சருமத்திற்கு பொலிவு தரும் காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும்.
தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு தம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. கொய்யா, பப்பாளி, மாதுளை உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய ஒமேகா 3 அமிலங்களை கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் ஒரு கேரட் அல்லது ஒரு தம்ளர் கேரட் ஜூஸ் சாப்பிடலாம்.
கீரை, முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை காய்கறியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் சூடாக இருப்பதால்தான் முகப்பருக்கள் வருகிறது. எனவே. உடல் சூட்டைத் தணிக்கக்கூடிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இளநீர், மோர் ஆகிய நீர் ஆகாரங்களை குடித்து வரவும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளையும், எண்ணெய் பொருள்கள், எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.