தீக்காயத்துடன் போராடிய சிறுமி அதே மருத்துவமனையில் இன்று மருத்துவர்

ஒரு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர்தான் பின்னாளில் அதே மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிவருகிறார்.
பிரேமா தன்ராஜ்
பிரேமா தன்ராஜ்


பெங்களூரு: சிறுமியாக இருந்தபோது தனது ரீங்காரக் குரலால் அறியப்பட்டவர், ஒரு விபத்தில் சிக்கியதற்குப் பிறகு, அவர் யாரையாவது தொலைபேசியில் அழைத்தால், அவர்கள் சொல்லுங்கள் சார் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஒரு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர்தான் பின்னாளில் அதே மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிவருகிறார்.

72 வயதாகும் பிரேமா தன்ராஜ், பிளாஸ்டிக் சர்ஜெனாக பலருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார். அவரது சிறப்பான பணியை பாராட்டி மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

டாக்டர் பிரேமாவின் பெற்றோர் இருவருமே பாடகர்கள் என்பதால் இளம் வயதிலிருந்தே பாடல்களைக் கற்றுக் கொண்டார்.

இது குறித்து பிரேமா கூறுகையில், எனக்கு எட்டு வயது. பள்ளியில் பாட்டுப்போட்டி நடைபெறவிருந்தது. அதற்காக தயாராகி வந்தேன். அப்போதுதான், என் வீட்டில் ஸ்டவ் வெடித்து எனக்கு தீக்காயம். எனது முகம் முழுக்க வெந்துவிட்டது. எனது உதடுகள் நெஞ்சுப்பகுதி வரை தொங்கிவிட்டது. கழுத்து முழுக்க முழுக்க சிதைந்துவிட்டது. முதலில் பெங்களூருவில் சிகிச்சை பெற்று பிறகு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

மூன்று அறுவைசிகிச்சைகளும் தோல்வியடைந்தது. கடைசியாக என் கழுத்துக்குள் குழாயை பொருத்தும் பணி முடிந்தது. 12 மணி நேரம் நடந்த அந்த அறுவைசிகிச்சையின்போதே, அந்த மருத்துவமனையிலேயே எனது தாய், என்னை அறுவைசிகிச்சை நிபுணராக்குவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டாராம். அதே மருத்துவமனையில் இன்று மருத்துவராக்கிவிட்டார் என்கிறார்.

மேலும், நான் எனது வீட்டுக்குத் திரும்பிய போதும், எனக்கு என்ன நடந்தது என்பதை நான் உணரவில்லை. காரணம், என் வீட்டில் ஒரு கண்ணாடி கூட இல்லாமல் பார்த்துக்கொண்டார் என் அம்மா. என்னைப் பார்ப்பவர்கள் பயந்து ஓடுவதைக் கூட நான் கவனித்ததில்லை. ஒருநாள் உடைந்த கண்ணாடித் துண்டில் எனது முகத்தைப் பார்த்தபோதுதான் அந்த உண்மை தெரிய வந்தது. அன்று அடக்கமுடியாமல் கதறி அழுதேன்.

அவரது சகோதர சகோதரிகள் அவரைப் பார்த்து தங்களுக்குள் அழுகையை புதைத்துக்கொண்டனர். ஆனால், உலகம் வெளிப்படையாக தங்களது வெறுப்பைக் காட்டியது. அதனை பிரேமா எந்த தடையும் இல்லாமல் அப்படியே ஏற்கும் நிலை இருந்தது.

நான் 5ஆம் வகுப்பில் பள்ளியிலிருந்து வெளியேறினேன். வீட்டிலிருந்தே படித்து தேர்வை மட்டும் எழுத அனுமதிக்கப்பட்டேன். பிறகு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றேன். இன்று சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். தனக்கு முதல் அறுவைசிகிச்சையைச் செய்த மருத்துவ இயக்குநரை மீண்டு பிரேமா சந்தித்தார். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரிக்கான பயிற்சியை பெற்று, எண்ணற்ற நோயாளிகளின் முகங்கள் மீண்டும் சீர்பெற உதவி வருகிறார்.

சிறு வயதில் நான் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போதெல்லாம் என் தாய், இந்த மருத்துவர் நாற்காலியில் நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம். இப்போது அந்த கனவு நனவாகியிருக்கிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டில், நான் எனது அரசு சாரா நிறுவனமான அக்னி ரக்ஷாவை நிறுவினேன், 1999 ஆம் ஆண்டில் நான் ஒரு இந்திய தீக்காய அறுவை சிகிச்சை நிபுணராக அமெரிக்காவிலிருந்து பெற்ற விருதைத் தொடர்ந்து, இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய பிறகு இந்த நாற்காலியில் அமர்ந்தேன். அக்னி ரக்ஷா தன்னார்வ தொண்டு நிறுவனம் இதுவரை 25,000 இலவச அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com