முருங்கைக் கீரையும், மகத்துவமும்!

முருங்கைக் கீரையில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன
முருங்கைக் கீரையும், மகத்துவமும்!

முருங்கை மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை, பிசின் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. முருங்கைக் கீரையில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்துவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது.

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது. முருங்கைக் கீரையை வாரத்தில் இரண்டு நாள்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்று சொல்லலாம். முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற எந்த தாவர உணவிலும் முருங்கையில் இருப்பது போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் இல்லை.

முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட, முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும். 

தயிரில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சி சத்தும் இந்த கீரையில் உள்ளது.

என்னென்ன சத்துக்கள் உள்ளன...

முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மன்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணங்கள்..

முருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது. 

முருங்கை இலை துளிரையும் வேப்ப இலை துளிரையும் சேர்த்து அரைத்து சாப்பிட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

முருங்கைக் கீரை சாறுடன் தேன் கலந்து சாப்பிட சுகப் பிரசவம் உண்டாகும்..

முருங்கைக் கீரையுடன் பூண்டு சேர்த்து உண்டு வரப் பால் சுரப்பு அதிகரிப்பதுடன் பலத்தைக் கொடுக்கும்.

முருங்கை இலைகளை நீக்கிவிட்டு, ஈர்க்கை மட்டும் எடுத்து மிளகு, சீரகம் சேர்த்து இடித்து ரசம் வைத்து சாப்பிட முதுகுவலி, உடல் வலி குணமாகும்.

வாரத்தில் இரு நாள்கள் முருங்கைக் கீரையையும், முருங்கைக்காயையும் சமையலில் சேர்த்துகொள்ள மாலைக்கண் நோய் குணமாகும்.

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைச் சரி செய்யும்.

பச்சைப்பயிருடன் முருங்கைப் பூ சேர்த்து கூட்டு செய்து சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்.

கீரையுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட மலமிளக்கியாக இருப்பதோடு, வயிற்றுப்புண் குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com