பிராஸ்டேட் வீக்கம்: ஏன், எப்படி? ஆண்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆண்களுக்கு பிராஸ்டேட் ஹைப்பர்பிளாசியா ஏற்படுவதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும் பற்றி...
Benign Prostatic Hyperplasia: Hydrate more during the day, less at night
கோப்புப் படம்ENS
Updated on
3 min read

அஃபான் அப்துல் காதர்

பிராஸ்டேட் என்பது ஆண்களுக்கு சிறுநீர்ப்பைக்கு கீழே உள்ள சுரப்பி. விந்தணு வெளியேற்றத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள செல்களின் அதிகப்படியான வளர்ச்சியினால் இந்த சுரப்பி பெரிதாவது அல்லது வீங்குவதற்கு பெயர்தான் பிராஸ்டேட் ஹைப்பர்பிளாசியா(BPH). ஆனால், இது புற்றுநோய் கட்டிகள் போன்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னையை ஏற்படுத்தும்.

உணவுப்பழக்கவழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலமாக இந்த பாதிப்பு வராமல் தடுக்க முடியும் என்று கூறும் கோழிக்கோடு மலபார் மருத்துவமனை சிறுநீரகவியல் துறையின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் வினீத் அதியோடி, பொதுவாகவே அனைவரும் பகலில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மாலை, இரவு நேரங்களில் தண்ணீர் உள்ளிட்ட திரவங்கள் எடுத்துக்கொள்வதைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

கேள்விகளும் பதில்களும்...

பிராஸ்டேட் ஹைப்பர்பிளாசியா அறிகுறிகள் என்ன?

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, குறிப்பாக இரவில் 2, 3 முறை அல்லது அதற்கு மேல் சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது, சிறுநீர் கழிக்கத் தொடங்குவதற்கு அதிக நேரம் ஆவது, சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகாத உணர்வு, அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, சிறுநீர் கழித்த முடிவில் சொட்டுச்சொட்டாகச் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்க கடினமாக இருத்தல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். இது வயது அதிகமாவதால் ஏற்படும் சிறுநீர்ப்பை பலவீனம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது வயது காரணமின்றி பெரும்பாலும் பிராஸ்டேட் வீக்கத்தால் ஏற்படுகிறது.

யாருக்கு ஆபத்து அதிகம்?

வயது என்பது ஒரு வலுவான ஆபத்துக் காரணிதான். ஏனெனில் வயதுக்கு ஏற்ப இதன் தீவிரத்தன்மை அதிகமாகிறது. வயதான ஆண்களுக்கு பிராஸ்டேட் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கீழ் சிறுநீர்ப் பாதை அறிகுறிகள் (LUTS) அதிகமாக இருப்பது, நோய் முற்றிய நிலைக்குச் செல்லும் ஆபத்து, வயதான ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது

அடுத்து குடும்ப வரலாறு ஒரு காரணமாக இருக்கலாம். மரபியல்ரீதியாக பாதிப்பு ஏற்படலாம்.

வளர்சிதை மாற்றக் கோளாறுகளான இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன், ரத்தத்தில் கொழுப்பு அதிகமிருக்கும் டிஸ்லிபிடெமியா இருந்தால் பாதிப்பு ஏற்படலாம்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ளவர்களும் அதாவது ஆண்களுக்கு ஆன்ட்ரோஜன்கள் (குறிப்பாக டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன்) ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் இந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். பிராஸ்டேட் திசுக்களில் ஏற்படும் நாள்பட்ட தொற்று அல்லது அழற்சி இருந்தாலும் கவனம் தேவை.

வாழ்க்கை முறை: மோசமான உணவுப்பழக்கவழக்கம், அதிக கொழுப்பு உடலில் இருப்பது, ஊட்டச்சத்து குறைவு உள்ளிட்டவை, புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்டவையும் பிராஸ்டேட் வீக்கத்தை ஏற்படுத்தும்.

பிராஸ்டேட் ஹைப்பர்பிளாசியாவுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால் பாதிப்புகள் என்ன?

பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தங்கிவிடும். இதனால் திடீரென சிறுநீர் கழிக்க இயலாமை, மீண்டும் மீண்டும் சிறுநீர் தொற்று, சிறுநீர்ப்பை பாதிப்பு, சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகுதல், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படுவது உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.

வாழ்க்கை முறை காரணிகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறதா?

வாழ்க்கை முறை காரணிகள் பிராஸ்டேட் ஹைப்பர்பிளாசியாவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகப்படியான காஃபின் (டீ/காபி), மது அருந்துதல், உடல் செயல்பாடு குறைவது, அதிக கலோரி மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் பாதிப்பு வரும் அபாயம் உள்ளது.

மேலும் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் தண்ணீர் குடிப்பதும் இந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பகலில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மாலை 6 மணிக்குப் பிறகு காபி/டீ ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி உள்ளிட்ட உடல் செயல்பாடுகள் மூலமாக உடல் எடையைக் குறைப்பது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் உடல்நிலையைக் கட்டுக்குள் வைப்பது இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

சிகிச்சைகள் என்ன? அதற்கு ஆகும் செலவு என்ன?

மருந்துகள் மூலமாக குணப்படுத்துவது, அறுவைச் சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்துவது என இரண்டு வாய்ப்புகளும் உள்ளன.

சிறுநீர் ஓட்டத்தை மேம்படுத்தவும் பாதிப்பு அறிகுறிகளைக் குறைக்கவும் ஆல்பா - தடுப்பான்கள்,

பிராஸ்டேட் சுரப்பி சுருங்குவதற்கு 5 - ஆல்பா தடுப்பான்கள் உள்ளிட்ட மருந்துகள் உள்ளன.

மருந்துகள் மற்றும் இந்த சிகிச்சைக்கான செலவு மாதத்திற்கு ரூ. 700 முதல் ரூ. 1,300 வரை ஆகலாம். பெரும்பாலும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படலாம்.

அறுவைச் சிகிச்சையைப் பொருத்தவரை பிராஸ்டேட் டிரான்ஸ்யூரெத்ரல் ரிசக்.ஷன் (டியுஆர்பி), லேசர் பிராஸ்டேட் அறுவை சிகிச்சை (குறைவான ரத்தப்போக்கு, விரைவாக குணமாவது),

யூரோலிப்ட் (சிறுநீர்ப்பையில் இருந்து பிராஸ்டேட் திசுக்களை உயர்த்த சிறிய ஸ்டன்ட் போன்ற பொருளை வைப்பது,

ரீசம் (Rezum) - அதிகப்படியான திசுக்களை சுருக்க நீராவியைப் பயன்படுத்துதல், பெரிய அல்லது மிதமான அளவில் உள்ள பிராஸ்டேட் சுரப்பிகளுக்குத் தீர்வாக இருக்கும்.

பிராஸ்டேட் அளவு, அறிகுறிகள் மற்றும் உடனடி நிவாரண சிகிச்சை அல்லது படிப்படியான நிவாரணம் ஆகியவற்றைப் பொருத்து சிகிச்சைகள் தேர்வு செய்யப்படும்.

அறுவைச் சிகிச்சைகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.60,000 முதல் ரூ.1.8 லட்சம் வரை செலவாகும் என்று டாக்டர் வினீத் அதியோடி தெரிவித்தார்.

Summary

Benign Prostatic Hyperplasia: Hydrate more during the day, less at night

Benign Prostatic Hyperplasia: Hydrate more during the day, less at night
குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம்! காரணம் என்ன? பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com