Resolutions You are Likely to take in 2026
கோப்புப் படம்DNS

சிறிய மாற்றமே பெரிய பலன்; 2026ல் நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்கள்!

2026 புத்தாண்டில் உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் பற்றி...
Published on

2026 புத்தாண்டு பிறந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும்போது நாம் சில தீர்மானங்களை அல்லது உறுதிமொழிகளை (Resolutions) எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். சிலர் அதைச் சரியாக பின்பற்றுவதுண்டு. சிலர் அப்படியே விட்டுவிடுவதுண்டு.

ஆனால் பின்பற்றியவர்களின் அனுபவத்தைக் கேட்டால் அவற்றின் பயன்கள் மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் சிறிய மாற்றங்களே, மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் அது.

புத்தாண்டுக்கு மிகப்பெரிய அளவில் உலகம் போற்றும் தீர்மானங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏற்றவாறு சிறிய எளிமையான தீர்மானங்களை எடுத்துக்கொள்ளலாம். அதை முடிந்தவரை பின்பற்றவும் வேண்டும். இதுவரை எப்படி இருந்தோமோ இந்த புத்தாண்டில் சில மாற்றங்களை முயற்சிப்போம். தீர்மானங்களில் சில...

IANS

உடல்நலம்

உடல்நலத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கலாம். உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் அதற்கு சிகிச்சை எடுப்பதுடன் உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்க உடற்பயிற்சி, நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிடுவது என தீர்மானங்கள் எடுக்கலாம், வேண்டுமெனில் மாதத்திற்கு ஒருமுறை வெளியில் ஹோட்டலில் சாப்பிடுவது என விதிவிலக்கு வைத்துக்கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பர்கர், பீட்ஸா, பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட மற்றும் பொரித்த உணவுகளுக்கு 'குட் பை' சொல்லிவிடுங்கள்.

ஸ்மார்ட்போன், டிவி கட்டுப்பாடு

உடல்நலம் கருதி ஸ்மார்ட்போன், டிவி பயன்பாட்டைக் குறைக்கலாம். ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட மணி நேரம் ஸ்மார்ட்போன், டிவி பயன்படுத்தக்கூடாது என்று தீர்மானம் எடுத்துக்கொண்டு அதை கண்டிப்பாக பின்பற்றவும் செய்யுங்கள்.

தவறான பழக்கங்கள்

புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதனை முற்றிலும் கைவிவிடுவது அல்லது அதனைக் குறைப்பது குறித்து சிந்திக்கலாம். இது மிகவும் கடினமானது என்றாலும் உங்களுக்கு மட்டுமின்றி உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் இது பாதுகாப்பானதாக உணர வைக்கும்.

உங்களுடைய குணாதிசயங்களைக் கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கேட்டு உங்களிடம் உள்ள தவறான பழக்கவழக்கங்களை மாற்ற முயற்சியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் அதிகமாக கோவப்படுவீர்கள் என்றால் அதனைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்து முடிந்தவரை முயற்சிக்கலாம்.

IANS

சேமிப்பு

சேமிப்பு எதிர்கால நிம்மதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. வங்கியிலோ அல்லது அஞ்சல் அலுவலகத்திலோ ஏதேனும் ஒரு சேமிப்புத் திட்டத்தில் இணையலாம், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றையும் முயற்சிக்கலாம். எவ்வளவு சம்பளம் வந்தாலும் செலவுதான் ஆகிறது என்று கூறினாலும் உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி புத்தாண்டில் சேமிப்பைத் தொடங்குங்கள். ஏற்கெனவே சேமிப்பு பழக்கத்தில் இருப்பவர்கள் அதனை விரிவுபடுத்துங்கள்.

செலவு கணக்கு

அதேபோல நீங்கள் செய்யும் செலவுகளை கண்டிப்பாக பட்டியலிட்டு ஒவ்வொரு மாத இறுதியிலும் பாருங்கள். பட்டியலிடும்போது மட்டுமே நீங்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்று தெரியும். அடுத்தடுத்த மாதங்களில் செலவைக் குறைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

குடும்பத்திற்கு முக்கியத்துவம்

சிலர் வேலை, வேலை என்று இருப்பார்கள். வாழ்க்கைக்கு வேலையும் அதனால் கிடைக்கும் பணமும் அவசியம்தான். ஆனால் குடும்பத்திற்காகத்தான் நீங்கள் ஓடுகிறீர்களா என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஆண்டுக்கு ஓரிருமுறை வெளியூர்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ பயணம் மேற்கொள்ளுங்கள். வாரம் ஒருநாள் உங்கள் குடும்பத்தினருடன் முழுவதுமாக நேரம் செலவழிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாக பழகுவது, குறிப்பாக கணவன் - மனைவி இடையே சண்டையில்லாமல் ஒருவரையொருவர் அன்பாக கவனித்துக்கொள்ள முயற்சிக்கும் தீர்மானங்களை எடுக்கலாம். தற்போது மன அழுத்தத்தால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் வரும் நிலையில் குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பு அதனை குறைக்கச் செய்யும்.

உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதனைச் செய்யுங்கள்.

ENS

புதிய கற்றல்

நீங்கள் வேலை செய்யும் துறை சார்ந்து புதிய படிப்புகளை படிக்கலாம், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

தொழில் செய்பவர்கள் அதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கலாம்.

உங்களுக்கு ஆர்வம் இருக்கும் நீச்சல், ஏதேனும் விளையாட்டு பயிற்சியைத் தொடங்கலாம். பெண்கள் வருமானத்திற்கு ஏற்ற உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொள்ளலாம், படிக்கலாம்.

உங்களுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களை இந்த புத்தாண்டில் தொடங்குங்கள்.

தவறுகளை மன்னியுங்கள், சிறிய முன்னேற்றங்களை, வெற்றிகளைக் கொண்டாடுங்கள், அன்பு செய்யுங்கள், மற்றவர்களுக்கு உதவுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

முன்புகூறியது போல சிறிய மாற்றங்களே மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் ஒரேநாளில் உருவாவது அல்ல. படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே அது கொண்டாடப்பட வேண்டியது. எவரொருவரும் 100% சரியானவராக இருக்க முடியாது. ஆனால் முடிந்தவரை சரியானவராக இருக்க, இந்த புத்தாண்டு முதல் முயற்சி செய்யுங்கள்.

புத்தாண்டு வாழ்த்துகள்!

Summary

Happy New Year 2026: Resolutions You are Likely to take in 2026

Resolutions You are Likely to take in 2026
நடங்கள், நடந்துகொண்டே இருங்கள்... 2026-ல் உடல்நலம் காக்க வேறென்ன செய்ய வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com