ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!

ஆக,  இளையராஜா இசையில் முதன்முதல் சினிமாவுக்குப் பாடல் எழுதியவன் என்ற பெருமை எனக்கு உண்டு அல்லது என்னுடைய பாடலுக்குத்தான் அவர் முதன்முதல் இசையமைத்தார் என்றும் சொல்லலாம்.
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!
Published on
Updated on
3 min read

திரைப்படத்திற்குப் பாடல் எழுதாமல் ஊர் திரும்புவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஆறாண்டுகள் முயற்சி செய்தபோதும், பாடல் எழுதுவதற்காக பாலமுருகனைத் தவிர வேறு யாரையும் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை.

ஊரில் இருந்து வரும்போது ஒரு நண்பர் கதாசிரியர் டி.என்.பாலுவுக்குக் கடிதம் கொடுத்திருந்தார். அவரிடம் பழகிய பிறகுதான் தெரிந்தது; அவருக்கும் உண்மைக்கும் உள்ள தூரம் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என்பது. அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிவிட்டேன்.

இலக்கிய உலகில் என் கவிதைப் பூக்கள் மலர்வதற்கு என் சிந்தனை மரத்திற்கு நீர்வார்த்த மழை மேகம் முரசொலி. அப்போதுதான் பல கவியரங்கங்களில் நான் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றேன். அதில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அண்ணா கவியரங்கம் குறிப்பிடத்தக்கது. அவர் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய பிறகுதான் கவியரங்கத்திற்குப் பெரும் வரவேற்பும் எழுச்சியும் தமிழ்நாட்டில் ஏற்பட்டது.

கவியரங்கில் கலைஞர் என்னை ஒவ்வொரு முறையும் அறிமுகப்படுத்தும்போது "என் வீடகத்துத் தம்பி மாறன் முரசொலியில் ஏடெடுத்து எழுதுகின்ற இளம்புலவர் முத்துலிங்கம் பாட வருகின்றார் தேனாகப் பாடு தம்பி இருக்கின்றோம் நாங்கள் தும்பி'' என்று அறிமுகப்படுத்துவார். அந்தப் பாராட்டு என்னால் அப்போது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. கவியரங்கக் கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டது கவிக்கோ அப்துல் ரகுமானிடம்தான். அந்தவகையில் எனக்கு முன்னோடி, வழிகாட்டி அவர்தான். இந்த ஆண்டு "கவிக்கோ'விருது ரூபாய் ஒரு லட்சம் எனக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சாகித்ய அகாதெமி விருதை விட உயர்வாகக் கருதுகிறேன்.  

ஒருநாள் கதாசிரியர் பாலமுருகனிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. ""டைரக்டர் மாதவனுக்குச் சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் சார்பில் ""பொண்ணுக்குத் தங்கமனசு'' என்றொரு படம் எடுக்கிறார்கள். அதற்குப் பாடல் எழுத வேண்டும் என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடவில்லை. காரணம் இதற்கு முன் இவர் இப்படிக் கூறி நான் பாடல் எழுதி பாடல் ஒலிப்பதிவாகாமலே நின்றுவிட்டது. அவர் கதை வசனம் எழுதிய "நிலவே நீ சாட்சி' என்ற படத்திற்கு ஓர் காட்சியைச் சொல்லி அதற்குப் பாடல் எழுதச் சொன்னார். ""காவேரி நதிக்கும் கரையுண்டு - நம் காதலுக்கும் ஒரு கதையுண்டு'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினேன். ""நன்றாக இருக்கிறது. முழுப்பாடலையும் நீங்களே ஒரு சந்தத்தில் எழுதிவிடுங்கள்'' என்றார், எழுதினேன். அந்தப் பாடலை இயக்குநர் பி. மாதவனிடம் காட்ட நமது படத்தில் கண்ணதாசன்தானே எப்போதும் எழுதுவார். புதுக்கவிஞரை எப்படி அறிமுகப்படுத்துவது என்று மறுத்துவிட்டார்.
 அதன்பிறகு ""பட்டிக்காடா பட்டணமா'' என்ற படத்திற்கு ஒரு காட்சியைச் சொல்லி எழுதச் சொன்னார். அது சிவாஜி பாடும் பாடல் என்றார்.

"ஊரைக் காக்கும் மாரியம்மா
காளியம்மா நீயே உலகமெங்கும்
சஞ்சலங்கள் தீரவேணும் தாயே!
சூரன் குடலைக் கிழிச்சவளே
வீரபத்திர காளி - பகையைத்
தூசியாக மிதிப்பேன் நான்
வீர மறவன் ஜாதி!''

என்ற பாடலை எழுதினேன். இந்தப் பாடலுக்கும் அதே கதிதான். அதனால் பாலமுருகன் வார்த்தை எனக்குப் பரவசம் ஊட்டவில்லை. ஐயமே ஏற்பட்டது.
எந்தவிதச் சலனமும் இல்லாமல் நான் நிற்பதைப் பார்த்து, ""இந்தப் படத்தில் நீங்கள் நிச்சயம் எழுதுகிறீர்கள். உங்கள் பாடல் இல்லாமல் இப்படம் வெளிவராது'' என்று உறுதிபடக் கூறினார்.

"கங்கை, காவிரி, வைகை இம்மூன்று நதிகளுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் சண்டை வருவது போலவும் உழவன் அவர்களை அமைதிப்படுத்தி ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் ஓர்  பாடல் எழுதி வாருங்கள்'' என்றார்.

நான் எழுதிச் சென்றேன். பாடலைப் பார்த்த ஜி.கே. வெங்கடேஷ், ""பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லாம் ஒரே தாளத்தில் இருக்கிறது. மூன்று நான்கு பேர் பாடுவதாக வருவதால் மெட்டுக்கள் போட்டு அதற்கு எழுதினால்தான் கேட்க எடுப்பாக இருக்கும். ஆகவே மெட்டுப் போடுகிறோம். அதற்குப் பாடல் எழுதுங்கள்'' என்றார்.

இரண்டு நாள்கள் ஆகியும் பொருத்தமான மெட்டுக்கள் போடவில்லையே என்று டைரக்டர் மாதவன் இசையமைப்பாளரிடம் குறைபட்டுக் கொண்டார். உடனே ஜி.கே. வெங்கடேஷ், ""என் உதவியாளர் நிறைய மெட்டுக்கள் வைத்திருக்கிறார். அவரைப் பாடச் சொல்கிறேன். அந்த மெட்டு உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

அந்த உதவியாளர் பாடிக் காட்டினார். "நன்றாக இருக்கிறது. இந்த மெட்டுக்கே எழுதுங்கள்'' என்றார். அப்படி எழுதிய என் முதல் பாடல்,

"தஞ்சா வூருச் சீமையிலே - கண்ணு
தாவிவந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீரப் பூமியிலே - நான்
பாடிவந்த கன்னியம்மா''
- என்று தொடங்கும்.

என் பாட்டுக்கு மெட்டுக் கொடுத்த அந்த உதவியாளர் யார் என்றால் அவர்தான் உலகப்புகழ் பெற்ற இன்றைய இசைஞானி இளையராஜா. ஆனால் அந்தப் படத்தில் அவர் பெயர் வராது. இளையராஜாவும், கங்கை அமரனும் எனக்கு ஏற்கெனவே பழக்கமான நண்பர்கள். அதனால் நான் தங்கியிருந்த அறைக்கே வந்து அந்த மெட்டுக்களைப் பாடிக் காண்பித்து எழுத வைத்தார்கள்.

இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ். ஜானகி, சசிரேகா, பூரணி, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். நான் எழுதிய முதல் பாடலே மெட்டுக்கு எழுதியதுதான்.

ஆக,  இளையராஜா இசையில் முதன்முதல் சினிமாவுக்குப் பாடல் எழுதியவன் என்ற பெருமை எனக்கு உண்டு அல்லது என்னுடைய பாடலுக்குத்தான் அவர் முதன்முதல் இசையமைத்தார் என்றும் சொல்லலாம்.

எனது பல்லாண்டுகாலக் கனவு பாலமுருகனால் நிறைவேறியது. அந்தப் பாடலை அந்தக் காலகட்டத்தில் மதுரை ஸ்பெஷல் நாடகக் குழுவினரும் கரகாட்டக்காரர்களும் பாடிப் பாடலுக்கு விளம்பரம் கொடுத்தார்கள்.

இது எனக்கு மட்டும் முதற்படம் அல்ல. நடிகர் விஜயகுமார், டைரக்டர் தேவராஜ் மோகன் ஆகியோருக்கும் இதுதான் முதல் படம். நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடித்த முதல் படமும் இதுதான். அதற்குமுன் துணைக் கதாநாயகனாகத்தான் நடித்து வந்தார். இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1973.

இந்தப் பாடலைப் பாராட்டி நூற்றுக்கணக்கான கடிதங்கள் அலை ஓசை நாளிதழுக்கு வந்தன. அதைக்கண்ட அந்தப் பத்திரிகை நிறுவனரும் சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், வழக்குரைஞருமான வேலூர் நாராயணன் தனது பத்திரிகையில் பணியாற்றும் ஒருவர் இத்தனைபேர் பாராட்டத்தக்க பாடலை சினிமாவில் எழுதியிருக்கிறாரே என்று திரைப்படக் கலைஞர்கள் ஜெமினி கணேசன், நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு குணச்சித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா, ஆர்.எஸ். மனோகர், ஏவி.எம். ராஜன் போன்ற பல கலைஞர்களையும் அந்தப் படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களையும் அழைத்து சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் தன் சொந்தச் செலவில் எனக்குப் பாராட்டு விழா நடத்தினார். இத்தகைய உயர்ந்த குணம் எந்த முதலாளியிடம் இன்றைக்கு இருக்கிறது?

 (இன்னும் தவழும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com