மொழிமாற்றுப் படங்களுக்கு அதிக வரவேற்பு!

உலகத் திரைப்பட வரலாற்றில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ்சாதனையை முறியடித்து இமாலயச் சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ்
மொழிமாற்றுப் படங்களுக்கு அதிக வரவேற்பு!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-14​

உலகத் திரைப்பட வரலாற்றில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ்சாதனையை முறியடித்து இமாலயச் சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ்.  நூற்றுக்கணக்கான மொழி மாற்றுப் படங்களுக்கும் வசனம் எழுதியவர். மொழி மாற்றுப் படத்திலிருந்துதான் நேரடித் தமிழ்ப் படத்திற்கு வசனம் எழுத வந்தார்.

ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் எழுதிய ஒரே வசனகர்த்தா இவர்தான். எம்.ஜி.ஆருக்கு எழுதியவர்கள் சிவாஜிக்கு எழுத மாட்டார்கள். சிவாஜிக்கு எழுதியவர்கள் எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டார்கள். ஆனால் இரண்டு மாபெரும் நடிகர்களுமே தங்களுக்கு ஆரூர்தாஸ்தான் வசனம் எழுத வேண்டும் என்று சொன்னார்கள் என்றால் அவர் வசனத்திற்காகக் காத்திருந்தார்கள் என்றால் அதற்கு ஆரூர்தாசின் எழுத்தாற்றல்தான் காரணம்.

இவர் மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதும் கலையை யாரிடம் கற்றுக் கொண்டார் என்றால் தஞ்சை ராமையா தாசிடம். தஞ்சை ராமையா தாசிடம் உதவியாளராகச் சில காலம் இருந்தார். அவர்தான் இவருக்கு ஆரூர்தாஸ் என்று பெயர் வைத்தார். அதன் பிறகு ஏ.எல்.நாராயணனிடம் உதவி வசனகர்த்தாவாக இருந்தார்.

ஏ.எல். நாராயணன் கதை வசனம் எழுதிய "செளபாக்கியவதி' என்ற படத்திற்கு தனக்குப் பதிலாக சில காட்சிகளுக்கு ஆரூர்தாசை வசனம் எழுத வைத்து அவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியவர் அவர் தான். ஏ.எல். நாராயணன் தனக்கு உதவியாளராக இவரைச் சேர்த்துக் கொண்ட முதல் படமும் இதுதான்.

அந்தப் படத்தில், தான் எழுதிய பாடல்களில் ஒரு பாடலை முழுமையாக இவரிடம் படித்துக் காட்டி இசையமைப்பதற்கு கொடுத்தனுப்பினார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அப்படிப் பட்டுக்கோட்டை கொடுத்தனுப்பிய அந்தப் பாடல்... 
கருவுலகில் உருவாகி மறுஉலகில் வரும் நாளைக்
கண்டறிந்து சொல்வாருண்டு - இந்தத் 
திருவுடலில் குடியிருக்கும் ஈசன் பிரியும் நாளைத் 
தெரிந்தொருவர் சொன்னதுண்டோ...
என்று தொடக்கமாகும்.
ஆரூர்தாஸ் வசனம் எழுதிய மொழி மாற்றுப் படங்களில் ஐம்பத்தைந்து படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்து என்னைச் சிறப்பித்தவர் அவர். மொழி மாற்றுப் படங்களுக்கு வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டதே இவர் வசனம் எழுதிய பூ வொன்று புயலாகிறது" என்ற படத்திற்குப் பிறகுதான்.

நேரடித் தமிழ்ப்படத்திற்குக் கூட அந்த அளவு வரவேற்பு ஏற்பட்டதில்லை. 1987-இல் இருந்து 1994 வரை ஏழாண்டு காலம் மொழி மாற்றுப் படங்களுக்குத்தான் அதிக அளவு வரவேற்பும் செல்வாக்கும் இருந்தது. வியாபாரமும் அதற்குத் தான் சுறுசுறுப்பாக நடந்தது. மூன்றாண்டு காலம் மொழிமாற்றுப் படங்கள்தான் எனக்குச் சோறுபோட்டது என்றால் மிகையல்ல.

கே.ஏ.வி. கோவிந்தன், மருதபரணி, ரவிசங்கர் போன்ற வசனகர்த்தாக்கள் எழுதிய மொழி மாற்றுப் படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். இதுவரை 120 மொழி மாற்றுப் படங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

மொழிமாற்றுப் படங்களுக்குக் கூட அன்றைக்கு இசை நாடா (கேஸட்) வெளியிட்டார்கள். இப்போது நேரடித் தமிழ்ப்படங்கள் ஒன்றிரண்டைத் தவிர பல படங்களுக்கு இசைக் குறுந்தகடு வெளியிடுவதே இல்லை.

அப்படி வெளியிடாத காரணத்தால் கலைஞர் கதை வசனம் எழுதிய "உளியின் ஓசை' என்ற படத்தில் நான் எழுதிய ஒரு நல்ல பாடல் வானொலியில் கேட்க முடியாமல் போய்விட்டது. கலைஞர் தொலைக்காட்சியில் அந்தப் படம் போட்டால்தான் என் பாடலைக் கேட்க முடியும்.
எத்தனை பாவம் இந்த நடனத்திலே - அவை
அத்தனையும் அறிந்தவர் யார் உலகத்திலே...
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல். இசையைப் பற்றியும் இசைக் கருவிகளைப் பற்றியும் அதில் குறிப்பிட்டிருப்பேன். இது வரை இப்படி ஒரு நாட்டியப் பாடல் எந்தப் படத்திலும் வந்ததே இல்லை என்று சொல்லும்படி இருந்தது. பாடல்கள் அடங்கிய குறுந்தகடு அந்தப் படத்திற்கு வெளியிட்டிருந்தால் சிறந்த பாடலாசிரியராக அந்த ஆண்டு நான் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன். நான் சொல்வது சரியா தவறா என்பதை நீங்களே அந்தப் பாடலை ஒருமுறை கேட்டால் புரிந்து கொள்வீர்கள். அதே நேரத்தில் அந்தப் படத்தின் இசைக்காக இளையராஜா சிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை விடுபட்டுவிட்டது. படமும் ஓடவில்லை.

மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல் எழுதும்போது குளோசப் (நெருக்கமான) காட்சிகளுக்கு மட்டுமல்ல லாங்ஷாட்களுக்கும், (தூரக்காட்சி) உதட்டசைவிற்குத் தகுந்தாற்போல் எழுதக் கூடியவன் நான் தான் என்று எல்லா வசனகர்த்தாக்களும், சவுண்ட் இன்ஜினியர்களும் பாராட்டியிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவும் அப்படித்தான் சிறப்பாக எழுதுவார். இன்னும் சொல்லப் போனால் என்னை விடச் சிறப்பாக எழுதுவார்.

மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் - பாடல்கள் எழுதுவதில் தஞ்சை ராமையாதாசிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் கம்பதாசன். இவருக்கு ஆங்கிலமும் இந்தியும் நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல ஆர்மோனியமும் வாசிப்பார். அதனால் இந்திப் படமெட்டுகளுக்கு வார்த்தைகளைப் போடுவதில் வல்லவராய்த் திகழ்ந்தார். கம்பதாசன் நாடக நடிகராகவும் நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசிப்பவராகவும் பணியாற்றியவர். இதுபோல் டி.கே. சுந்தரவாத்தியார் என்ற பாடலாசிரியரும் ஆர்மோனியம் வாசிக்கக் கூடியவர்.

"பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்ற படத்தில் "புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே - தங்கச்சி கண்ணே' என்ற பாடலையும் "உத்தம புத்திரன்' படத்தில் "காத்திருப்பான் கமலக் கண்ணன்' என்ற பாடலையும் கேட்டிருப்பீர்கள். இதைப் போலப் பல பாடல்களை எழுதியவர் டி.கே. சுந்தர வாத்தியார், ஏவி.எம். பட நிறுவனத்தில் ஆஸ்தான பாடலாசிரியராக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

கம்பதாசனைக் கடைசிக் காலத்தில் பார்த்திருக்கிறேனே தவிரப் பழகியதில்லை. நல்ல அழகன். நன்றாகவும் பாடுவார். இவரைப் பற்றி நடிகர் வி.கே. ராமசாமியும் பேராசிரியர் மின்னூர் சீனிவாசனும் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். "மங்கையர்க்கரசி' படத்தில் கவிஞன் வேடத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு பாடலைத் தவிர எல்லாப் பாடல்களையும் இவர்தான் எழுதினார். 1961-இல் "மொகல்-ஏ- ஆஸம்' என்ற இந்திப் படம் தமிழில் "அக்பர்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு மொழி மாற்றுப் படங்களுக்கு எழுதவில்லை. வசனம் பாடல்களுக்காக ஐம்பதாயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே வாங்கியவர் அவர்.  மொழி மாற்றுப் படத்திற்கு இவ்வளவு தொகை வாங்கிவர்கள் அந்நாளில் யாருமில்லை.

1953-இல் வெளிவந்த ராஜ்கபூர் நர்கீஸ் நடித்த "அவன்' என்ற படத்திலும் அவர் வசனங்களும் பாடல்களும் அற்புதமாக இருக்கும் "அன்பே வா அழைக்கின்ற தென்றன் மூச்சே' என்ற பாடல் "கண்காணாததும் மனம் கண்டுவிடும்' என்ற பாடல் "கனவுகண்ட காதல் கதை கண்ணீராச்சே' - ஆகிய பாடல்களெல்லாம் மறக்க முடியாத பாடல்கள். அதுபோல் "ஆன்', "பாட்டாளி சபதம்' ஆகிய மொழி மாற்றுப் படங்களுக்கும் வசனம் பாடல்களை எழுதியிருக்கிறார். 

பாரதிதாசன், கண்ணதாசன், கலைஞர் போன்றவர்களால் பாராட்டப் பெற்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சிக்காக மேடை முழக்கமிட்டவர். ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் அசோக்மேத்தா போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.
சூரியனும் ஒரு தொழிலாளி - தினம்
சுற்றும் உலகும் தொழிலாளி
வாரி அலையும் தொழிலாளி - தினம்
வந்திடும் காற்றும் தொழிலாளி...
என்று புதுமையாக அந்த நாளிலே திரைப்படத்திற்குப் பாடல் எழுதியவர். (வாரி என்றால் கடல் என்று பொருள்) இந்தப் பாடல் 1956-இல் வெளிவந்த "நன்னம்பிக்கை' என்ற படத்தில் இடம் பெற்றது. எஸ்.வி. வெங்கட்ராமன் இசையமைத்து அவரே பாடிய பாடல்.
இவரது கவிதைகளும் கூடப் புதுமையாக இருக்கும்.
நதியிளைப் பாறிடக் கடலுமுண்டு - கொடிய
நஞ்சிளைப் பாறிட மருந்துமுண்டு
கதிரிளைப் பாறிட இரவுமுண்டு - எங்கள்
கவலை இளைப்பாற உண்டோ இடம்
கண்இளைப் பாறிடத் தூக்கமுண்டு - அற்பக் 
கழுதை இளைப்பாறத் துறையுமுண்டு
பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு - எங்கள்
பசியிளைப் பாறிட உண்டோ இடம்.
இந்தக் கவிதைகளையெல்லாம் மறக்க முடியுமா? புதுமையும் புரட்சியும் நிறைந்த கவிதை.
ஒரு கவியரங்கில் வானத்தைப் பற்றிப் பாடும்போது
காம்பின்றி நின்றிருக்கும் - இனிய
காயாம்பூ வான வானம்
என்றார். இவருடைய தாக்கம் கவிஞர் சுரதாவின் கவிதையிலும் இருக்கும்.  பணத்திற்கு மதிப்புத்தராத படைப்பாளி இவர். முதல் நாள் பத்தாயிரம் ரூபாய் கையில் வைத்திருப்பார். மறுநாள் பத்து ரூபாய் ஒருவரிடம் கடன் கேட்டுக் கொண்டிருப்பார். இருப்பதை அப்படியே யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார்.

"புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்காக அண்ணா நிதி திரட்டிய போது முதன் முதல் 100 ரூபாய் கொடுத்துப் பெரியார் தொடங்கி வைத்தார். கம்பதாசன் 501 ரூபாய் காசோலை கொடுத்து அதைத் தொடர்ந்து வைத்தார்'என்று கவிஞர் சுரதா என்னிடம் சொல்லியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்று  ஆசிரியர் அண்ணன் திருநாவுக்கரசும், அதை உறுதிப்படுத்தி என்னிடம் கூறினார். அந்த வகையில் மிகச் சிறந்த கவிஞர் கம்பதாசன். மதுப் பழக்கத்தால் மாண்ட கவிஞர்களில் அவரும் ஒருவர்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com