ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே- 4!

பொண்ணுக்குத் தங்க மனசு' படம் வெளிவந்த ஓராண்டிற்குள்ளேயே "அலை ஓசை' பத்திரிகையில் இருந்து விலகிவிட்டேன். காரணம் எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை அது வெளியிடத் தொடங்கியதுதான்.
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே- 4!

"பொண்ணுக்குத் தங்க மனசு' படம் வெளிவந்த ஓராண்டிற்குள்ளேயே "அலை ஓசை' பத்திரிகையில் இருந்து விலகிவிட்டேன். காரணம் எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை அது வெளியிடத் தொடங்கியதுதான்.

பத்திரிகைத் துறையை நான் விட்டுவிட்டது எம்.ஜி.ஆருக்குத் தெரியும். ஒருநாள் தியாகராயநகர் ஆற்காடு தெருவிலுள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். கீழ் அறையிலிருந்து மேல் அறையில் இருக்கும் அவருடன் இண்டர்காமில் பேசினேன். நான் எதுவும் கேட்பதற்கு முன்பே "குஞ்சப்பனிடம் நான் பணம் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார் எம்.ஜி.ஆர்.

குஞ்சப்பன் எம்.ஜி.ஆருக்கு மைத்துனர் ஆவார். குஞ்சப்பன் சகோதரியைத்தான் எம்.ஜி.சக்கரபாணி திருமணம் செய்திருந்தார். அதுவும் தவிர எம்.ஜி.ஆர். அலுவலகம் குஞ்சப்பன் நிர்வாகத்தில்தான் இருந்தது. அவருக்கு அடுத்து முத்து என்பவர் இருந்தார்.

எம்.ஜி.ஆர். பணம் தருவதாகச் சொன்னவுடன் "எனக்குப் பணம் வேண்டாம் தலைவரே. அதற்குப் பதில் வேலை கொடுங்கள் அதுபோதும்' என்றேன். வேலையென்று நான் சொன்னது பாட்டெழுதும் வேலையைத்தான். "வேலையை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது ஐந்நூறு ரூபாய் குஞ்சப்பனிடம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன்.

அப்போது மட்டுமல்ல எம்.ஜி.ஆரிடம் பழகியவர்களில் கடைசி வரைக்கும் அவரிடம் பணம் கேட்டு வாங்காத கவிஞன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.

பணம் வேண்டாமென்று இண்டர்காமில் நான் சொன்னதும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு அடிப்பதுபோல் தொலைபேசியை வைத்துவிட்டார். நானும் சென்றுவிட்டேன்.

பிறகு ஒருநாள் அவரைப் பார்ப்பதற்கு அதே அலுவலகம் சென்று நேரில் சந்தித்தபோது அங்கு எஸ்.டி.சோமசுந்தரம், ஜேப்பியார், பாவலர் முத்துசாமி போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இன்று மறைந்துவிட்டார்கள். நான் உள்ளே நுழைந்ததும் "உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீங்களாக வாய் திறந்து என்னிடம் கேட்க வேண்டாம். கேட்காமலே செய்வேன்' என்றார். நானும் கேட்கவில்லை.

சிறிது நேரம் அரசியல் சம்பந்தமான சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு நாங்கள் சென்று விட்டோம்.

சில நாள் கழித்து "நல்லதை நாடு கேட்கும்'' என்ற படத் தொடக்கவிழா அழைப்பிதழ் ஒன்றை "தென்னகம்' பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது பார்த்தேன். அதில் பாடலாசிரியர் வரிசையில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர். சொன்னதைப்போல் செய்துவிட்டார் என்பதை உணர்ந்தபோது அவர் மீது என் மதிப்பு வானைவிட உயர்ந்துவிட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் படம் நின்றுவிட்டது.

அதன்பிறகு பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதை 1978 - 79 -ஆம் ஆண்டில் பெற்றேன். பின்னர் கலைமாமணி விருது பெற்றேன். அதன்பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றேன்.

பாவேந்தர் விருதை எனக்கு வழங்கும்போது எம்.ஜி.ஆர். என்னைப் பற்றிப் பேசியது என்றும் மறக்க முடியாத ஒன்று. நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974-ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர். எனக்குப் பாரதிதாசன் விருது வழங்கியது 1981-ஆம் ஆண்டு. இடையில் ஏழாண்டு காலம் இடைவெளி.

ஏழாண்டுகள் முன்பு நான் சொன்னதை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருந்து பேசியதுதான் வியப்பு. அவர் முதலமைச்சர். எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏழாண்டுகளில் சந்தித்திருப்பார். அப்படியிருந்தும் அந்த நிகழ்ச்சியை மறந்துவிடாமல் பேசுகிறார் என்றால் என்னை அவர் மனதில் வைத்திருக்கிறார் என்றுதானே பொருள். என்னைப் பற்றி அவர் பேசியது இதுதான்.

"படத்துறைக்கு வருவதற்கு முன் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் இருந்தார். எந்தப் பத்திரிகையில் அவர் பணியாற்றினாரோ அந்தப் பத்திரிகையிலிருந்து அவர் விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவாரே என்றெண்ணிக் கொஞ்சம் பணம் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். பணம் வேண்டாம். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன் இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். அப்போதும் மறுத்துவிட்டார்.

படத்துறையில் என்னிடம் பணம் வாங்காத எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெரும்பாலும் குறைவு. அதுவும் அவர்கள் கேட்டுத்தான் கொடுத்திருக்கிறேனே தவிர நானாக யாருக்கும் கொடுக்கவில்லை. முத்துலிங்கத்திற்கு மட்டும்தான் நானே வலியக் கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார்.

உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானமுள்ள மனிதராக இருக்கிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதன்பிறகுதான் என்னுடைய படங்களுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தேன்.

பாரதிதாசனும் தன் காலைக் கீழே தான் குனிந்து பார்ப்பதுகூட சுயமரியாதைக் குறைவு என்று கருதுவார் எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட தன்மானம் உள்ள கவிஞர் பெயரிலே கொடுக்கக்கூடிய விருதைத் தன்மானமுள்ள கவிஞராகவும், தன்மானமுள்ள மனிதராகவும் விளங்குகின்ற முத்துலிங்கத்திற்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பது?'' என்று பேசினார்.

1.5.1981 அன்று என்னைப் பற்றி கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். பேசியது மறுநாள் 2.5.1981 தேதியிட்ட தினத்தந்தி இதழில் வெளிவந்தது. மற்ற பத்திரிகையிலும் வந்திருக்கலாம். ஆனால் நான் பார்த்தது தினத்தந்தியில் மட்டும்தான். அந்த ஒரு பத்திரிகை வாங்கும் அளவுக்குத்தான் அன்றைக்கு என்னிடம் காசிருந்தது. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் எப்படி மறக்க முடியும்? அதுவும் எம்.ஜி.ஆர். என்னைப் பற்றிப் பேசியதை என்னால் எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆர். படத்திற்குப் பாடல் எழுதும்போதுதான் எனக்குப் பல வகையான அனுபவங்கள் கிடைத்தன. ஒரு காட்சிக்குப் பொருத்தமான பல்லவியை முதலிலேயே எழுதிவிட்டால் கூட அவர் சரியென்று ஒப்புக்கொள்ள மாட்டார். திரும்பத் திரும்ப எழுதச் சொல்வார்.

இப்படிப் பத்துப் பல்லவிகளாவது எழுதிய பிறகுதான் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். சிலநேரங்களில் கடைசியாக எழுதிய பல்லவி நன்றாக இருக்கிறது என்று அதைத் தேர்ந்தெடுப்பார். சில நேரத்தில் முதலில் நாம் என்ன பல்லவி எழுதினோமோ அதுதான் பொருத்தமாக இருக்கிறது என்றும் தேர்ந்தெடுப்பார். ஆனாலும் பத்துப் பல்லவிகளுக்குக் குறையாமல் என்னை எழுதச் சொல்வார்.

யானை தன் குட்டிக்குப் பயிற்சி கொடுப்பதுபோல் எனக்குப் பாடல் எழுதப் பயிற்சி கொடுத்தார். இவரின் ஒரு படத்திற்கு ஒரு பாடல் எழுதி அது ஒலிப்பதிவு ஆகிவிட்டால் பத்துப் படங்களுக்குப் பத்துப்பாடல்கள் எழுதிய அனுபவம் கிடைத்துவிடும்.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com