எப்போதும் அவரை நான் நினைக்க வேண்டும்!

பாக்யராஜ் என் நெருங்கிய நண்பர். 1983-ஆம் ஆண்டு, முதன்முதல் நான் கார் வாங்கும்போது ஐயாயிரம் ரூபாய் குறைவாக இருந்தது, கேட்டதும் உடனே கொடுத்துவிட்டார். அன்றைக்கு ஐயாயிரம் என்பது இன்றைய ஐம்பதாயிரத்திற்கு
எப்போதும் அவரை நான் நினைக்க வேண்டும்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 23!

"சுவரில்லாத சித்திரங்கள்'  அடுத்து, கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் "ஒரு கை ஓசை'. இதற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இந்தப் படத்திற்கு அவர் இசையமைப்பதற்கு நானும் ஒரு காரணம்.
மச்சானே வாங்கய்யா அந்தப்புரம் - நான்
அச்சாரம் போடாத கொய்யாப்பழம்...
இதுதான் அந்தப் படத்தில் நான் எழுதிய பாடல்.
"சுவரில்லாத சித்திரங்கள்' படத்தைத் தயாரித்த நிறுவனம் பாக்யராஜ் இயக்கத்தில் "மெளன கீதங்கள்' என்ற படத்தை அடுத்துத் தயாரித்தது. இது நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இதில் கங்கை அமரன் இசையில் நான் எழுதிய பாடல்.
டாடி டாடி - ஓ மை டாடி
உனைக் கண்டாலே ஆனந்தமே
பேட்டா பேட்டா - மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்...
என்று தொடக்கமாகும். இதில் ஒரு சரணத்தில்,
கரையோரம் நண்டெல்லாம் 
தான்பெற்ற குஞ்சோடு
அன்போடு ஒன்றாக விளையாடுதே
அதுபோல அம்மாவும் நம்மோடு கைகோர்த்து
அன்போடு விளையாட மனம் ஏங்குதே...
என்று வரும்.
இந்தப் பாடலுக்குப் பல விமர்சனங்கள் வந்தன. நண்டு குஞ்சு பொரித்தால் தாய் நண்டு இறந்துவிடும் என்று தானே இலக்கியங்கள் சொல்கின்றன. 
"நண்டு சிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்டகரு வேஅழிக்கும் கொள்கைபோல் 
- ஒண்டொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலம்அயல்
மாதர்மேல் வைப்பர் மனம்'
என்று ஒளவையார் பாடிய வெண்பாவே சான்றாக இருக்கிறதே. அப்படியிருக்க தாய் நண்டும் குஞ்சு நண்டுகளும் ஒன்றாக விளையாடுகின்றன என்று எழுதியிருக்கிறாரே முத்துலிங்கம். இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று "குமுதம்' பத்திரிகையில் ஒருவாசகர் முதலில் எழுதினார். இரண்டு வாரங்கள் இது பற்றி விமர்சனங்கள் வந்தன.

இலக்கியத்தில் அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அறிவியல் சாகாது என்று சொல்கிறது. நாம் முத்துலிங்கத்திடமே கேட்போம்  என்று குமுதம் பத்திரிகை மூன்றாவது வாரம் எழுதியது. நான்காவது வாரத்தில் நான் அதற்குப் பதில் சொன்னேன்.

"நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு உழவுத் தொழில் நன்றாகத் தெரியும். எங்கள் வயல் வரப்பிலும் வளைகளிலும் நண்டுகள் குஞ்சுகளோடு விளையாடுவதைக் கண்டிருக்கிறேன்.

குஞ்சு பொரிக்கும் போது சில நண்டுகள் இறக்கலாம். பல நண்டுகள் இறப்பதில்லை. ஒளவையினுடைய வெண்பாவும் எனக்குத் தெரியும். யாரும் நண்டு குஞ்சு பொரிக்கும் போது நேரில் பார்த்ததில்லை. பிரசவத்தில் கூட சில தாய்மார்கள் இறந்து விடுகிறார்கள். அதற்காக எல்லாத் தாய்மார்களும் இறந்துவிடுவார்கள் என்று சொல்லலாமா?

இந்தப் பாட்டைப் பாடுகின்ற அந்தக் குழந்தைக்கு இதெல்லாம் தெரியாது. அவன் பெரிய நண்டைத் தாய் நண்டென்றும், சிறிய நண்டுகளைப் பிள்ளை நண்டுகள் என்றும் எண்ணிக் கொள்கிறான். இதை அந்தக் குழந்தையின் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர,  அதை அறிவியல் கண்ணோட்டத்திலோ நமக்குத் தெரிந்த இலக்கியக் கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது'' என்று நான் அந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.

இப்படியெல்லாம் விமர்சனங்கள் வந்ததாலோ என்னவோ அந்தப் பாடல் பிரபலமான பாடலாக அமைந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபிநாத் என்னை எங்கே எப்போதும் பார்த்தாலும் "கரை ஓரம் நண்டெல்லாம்'  போலப் பாட்டெழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று கிண்டல் செய்வார்.

எப்போதும் கே.பாக்யராஜ் பாடல் எழுத இரவில்தான் அழைப்பார். விடிய விடிய எழுதுவோம். இரவு நேரத்தில் நீண்டநேரம் கண்விழித்தால் எனக்கு மறுநாள் காய்ச்சல் வந்துவிடும். அதனால் பாக்யராஜ் படத்திற்கு எழுதப் போகிறேன் என்றால் "குரோசின்' மாத்திரையையும் கையோடு எடுத்துச் செல்வேன். நான் சொல்வது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சி.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் எனக்குத் தூக்கமே வருவதில்லை. இதற்காக நான் எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு படுத்திருப்பேன். அவ்வளவுதான். மறுநாள் கூட்டங்களில் பேச வேண்டியவை அல்லது எழுத வேண்டியவையெல்லாம் அப்போதுதான் எனக்கு மின்னிக் கொண்டிருக்கும். இதுவரை எனக்கு சர்க்கரை வியாதியோ, தலைவலியோ வந்ததில்லை. ஆனால் சிறுவயதில் இருந்து அடிக்கடி காய்ச்சல் வந்து போய்க் கொண்டிருக்கும்.

தூக்கம் இல்லாததால் எனக்கு உடல் மெலிந்து கொண்டிருக்கிறதே தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. சில நேரங்களில் சோர்வாக இருக்கும். எனக்குத் தூக்கம் வராத செய்தியை குமுதம் பத்திரிகையின் வாயிலாக இந்தக் குவலயமே அறியும்படி அன்று செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்துதான். ஒருமுறை "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன் கூட "இப்போதாவது தூக்கம் வருகிறதா?' என்று கேட்டார். மற்ற வகையில் பிரபலம் இல்லாவிட்டாலும் இந்த வகையிலாவது நாம் பிரபலமாக இருக்கிறோமே என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு ராகவன் என்ற நண்பர் வந்து ஏவி.எம். தயாரிக்கும் "முந்தானை முடிச்சு' படத்திற்குப் பாடல் எழுத பாக்யராஜ் உங்களை அழைத்துவரச் சொன்னார் என்று கூட்டிச் சென்றார்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு அறையில் வைத்து எனக்குக் காட்சியை விளக்கி இளையராஜாவின் மெட்டையும் போட்டுக் காட்டிப் பாடல் எழுதச் சொன்னார். இரவில் பத்தரை மணிக்கு எழுதத் தொடங்கி விடிகாலை நான்கு மணிக்குத்தான் பாடல் முடிந்தது. அந்த அளவுக்கு வேலை வாங்கினார் பாக்யராஜ்.

அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட்டான பாடல்கள் என்றாலும் நான் எழுதியது முக்கியமான ஒரு காட்சிக்கான பாடல்.

சின்னஞ்சிறு கிளியே
சித்திரப் பூவிழியே
அன்னைமனம் ஏங்கும்
தந்தைமனம் தூங்கும்
நாடகம் ஏனடா
ஞாயத்தைக் கேளடா...
- என்று நடிகை ஊர்வசி பாடுவது போல் தொடக்கமாகும். அன்றைய "மாலை முரசு' பத்திரிகை இந்தப் பாடலைச் சிறந்த பாடலென்று அந்த ஆண்டு தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. அப்போது அந்தப் பத்திரிகையின் சினிமா நிருபராக இருந்தவர் கணேசன்.

அதுபோல் பாக்யராஜ் இயக்கிய "தூறல் நின்று போச்சு' என்ற படத்தில் ஒரு பாடல். அந்தப் பாடலை வேறொரு கவிஞரை வைத்து எழுதியிருந்தார். அதை இசையமைப்பாளர் இளையராஜா ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு என்னை எழுதச் சொன்னார் பாக்யராஜ். அந்தப் பாடலும் பிரபலம் ஆனது. ஆனால் இந்தப் பாடலின் பல்லவியை எழுதியவர் பாக்யராஜ். சரணத்தை மட்டும்தான் நான் எழுதினேன். அந்தப் பாடல் இதுதான்.

பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்
இருமனம் சுகம்பெறும் வாழ்நாளே...

நான் எழுதிய பாடலை இளையராஜாவிடம் காட்டியபோது, "இந்தப் பல்லவி இந்தப் பாட்டுக்குச் சரியில்லை என்பதால் தான் உங்களை வைத்து எழுதச் சொன்னேன். நீங்கள் அவர் எழுதிய பல்லவியை வைத்துக் கொண்டே எழுதியிருக்கிறீர்களே! இந்தப் பாடல் என்ன பூபாள ராகத்திலா இருக்கிறது?'' என்று கோபமாகக் கேட்டார். அப்படிக் கேட்டுவிட்டு, "சரி சரி உங்களுக்காக வைத்துக் கொள்வோம்'' என்று பாடலை ஒலிப்பதிவு செய்தார். இதை இதுவரை நான் பாக்யராஜிடம் சொன்னதில்லை.

இளையராஜாவின் இசை உதவியாளர் சுந்தரராஜனிடம்,  "பூபாளம் இசைக்கும் - என்ற இந்தப் பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது?'' என்று கேட்டேன். "கீரவாணி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது'' என்றார்.

பாக்யராஜ் என் நெருங்கிய நண்பர். 1983-ஆம் ஆண்டு, முதன்முதல் நான் கார் வாங்கும்போது ஐயாயிரம் ரூபாய் குறைவாக இருந்தது, கேட்டதும் உடனே கொடுத்துவிட்டார். அன்றைக்கு ஐயாயிரம் என்பது இன்றைய ஐம்பதாயிரத்திற்குச் சமம். அடுத்தமாதமே தருகிறேன் என்று சொல்லித்தான் வாங்கினேன். ஆனால் இதுவரை நான் கொடுக்கவே இல்லை. ஏன்? என்னிடம் இல்லை என்பதாலா? இல்லை இல்லை. எப்போதும் அவரை நான் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக.

இன்னும் தவழும்... 

படம் உதவி : ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com