தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 6
By M.A. சுசீலா | Published On : 11th October 2016 12:14 PM | Last Updated : 11th October 2016 12:14 PM | அ+அ அ- |

சூரியனின் கதிர்கள் தங்களை மிக மிகத் தாமதமாகவே சுருக்கிக் கொள்ளும் கோடைகால பீட்டர்ஸ்பர்க் இரவுகள்... 'வெண்ணிற இரவு' களாய்க் கொண்டாடப்படுவதே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் தனித்துவம். பொதுவாக அடர் கறுப்பு நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும் இரவுப் பொழுதுகள்... நிலவொளியை விடவும் கூடுதல் பிரகாசமான சூரிய வெண்மையில் குளிக்கும் போது அவற்றுக்கு 'வெண்ணிற இரவுகள்' (WHITE NIGHTS) என்று நகைமுரணாகப் பெயர் சூட்டி மகிழும் அந்த நகரத்து மக்களின் உள்ளம் தான் எவ்வளவு ரசனை மிக்கது?
ஆண்டின் பெரும்பாலான நாட்கள், துளிகளாகவும், வில்லைகளாகவும், கட்டிகளாகவும் விடாமல் பெய்துவரும் பனிப்பொழிவை மட்டுமே கண்டு அதற்காகவே வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் பீட்டர்ஸ்பர்க் வாசிகள் உல்லாசமாக வெளியுலகில் சஞ்சரிக்க வழியமைத்துத் தருபவை இந்த வெண்ணிற இரவுகள்! குறிப்பாகக் காதல் வயப்பட்டவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்தப் பருவ காலத்தில், கருவுறும் பெண்களின் எண்ணிக்கையும் கூட மிகுதியாக இருக்கும் என்று பீட்டர்ஸ்பர்க் நகரின் வழிகாட்டியாக நேற்று எங்களோடு இணைந்து கொண்ட கேத்தரீனா கூறியதை நினைத்துக் கொண்டே உறங்கிப் போன நான் கண் விழித்தபோது, மணி விடியற்காலை நான்கைக் கூடத் தொட்டிருக்கவில்லை. அதற்குள் புலரியின் பொன்னொளிச் சாயல் அறைக்குள் படரத் தொடங்கி விட... அதற்கு மேல் உறக்கம் பிடிக்காதவளாக… பீட்டர்ஸ்பர்க் நகரத்தைப் பற்றி நான் குறித்துக் கொண்டு வந்திருந்த தகவல்களின் மீது கண்களை ஓட்டத் தொடங்கினேன்.
தாமரை மொட்டுப் போன்ற கோயில்... அதைச் சுற்றியுள்ள அடுக்கடுக்கான இதழ்களைப் போன்ற சதுரம் சதுரமான வீதிகள் என அழகுற அமைந்திருக்கும் என் தென்மதுரையைப் போலவே இந்த பீட்டர்ஸ்பர்க் நகரமும் மிகுந்த சிரத்தையோடு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாகவும் திகழும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், சக்கரவர்த்தி மகாபீட்டர் கண்ட மகத்தான ஒரு கனவின் எழிலார்ந்த புறவடிவம். மாஸ்கோவை விடவும் கூட இந்நகருக்கே முதன்மை தர எண்ணிய மகா பீட்டர். அங்குள்ள கட்டுமானப் பொருட்களையும் பணியாளர்களையும் இங்கே வருவித்து அழகான பல கட்டிட அமைப்புக்களை அசுர வேகத்தில் உருவாக்க முனைந்ததில் பிறந்ததே ரஷ்யநாட்டுக் கலாசாரத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்நகரம்.
இங்கிருந்து இரண்டரை மணி நேரத்துக்குள் கடல் வழியாக ஐரோப்பாவின் பின்லாந்து நாட்டுக்குச் சென்று விட முடியுமென்பதால் இது ஒரு வகையில் ஐரோப்பாவின் நுழைவாயிலாகவும் சொல்லப்படுகிறது. நேவா ஆறு, பால்டிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் பீட்டர்ஸ்பர்க் நகரில், நகரக் கட்டுமானத்தோடு ரஷ்ய நாட்டின் கப்பற்படைத் தலைமை அலுவலகமும் (அட்மிரேலிடி) அப்போது முதலே உருவாக்கப்பட்டு இங்கே இயங்கி வருவதும் அதுபற்றியே.
2003 ஆம் ஆண்டில் தனது முந்நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யநாட்டு நகரங்களிலேயே பெரிதும் ஐரோப்பியத் தன்மை கொண்ட ஒன்றாக - அந்தப்பாணியில் அமைந்திருக்கிறது. 1713 – 1728, மற்றும் 1732 -1918 ஆகிய இரு காலகட்டங்களிலும் மன்னராட்சிக்கால ரஷ்யாவின் தலைநகராக விளங்கிய பெருமையும் இதற்கு உண்டு. 1918ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரம் மீண்டும் இங்கிருந்து மாஸ்கோவுக்கே மாற்றப்பட்டு அரசு அலுவலகங்களும் அங்கிருந்தே செயல்படத் தொடங்கின.
காலப்போக்கில் இந்த நகரத்தின் பெயர்கள், சில மாற்றங்களுக்கு உள்ளானதும் உண்டு. 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரின் போது பெட்ரோகிராட் என்றும், 1924 இல் தலைவர் விளாடிமிர் லெனின் காலமான போது அவர் நினைவாக லெனின் கிராட் என்றும் அழைக்கப்பட்டாலும் 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற தொன்மையான பெயரே இன்றளவும் இந்நகருக்கு நின்று நிலைத்து வழங்கி வருகிறது.
ஓவியம், இசை – நடனம் (பாலே) முதலிய நுண்கலைகளின் இருப்பிடமாகவும். அலெக்ஸாண்டர் புஷ்கின், தஸ்தயெவ்ஸ்கி போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த இடமாகவும் விளங்கிய இந்த நகரம். மிகச் சிறந்த பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுடன் கல்வி வளர்ச்சிக்கும் கணிசமான பங்கை ஆற்றி வருகிறது. இந்தியாவில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வசதியற்ற மாணவர்கள், குறைவான கட்டணத்தில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள – ரஷ்ய நாட்டின், குறிப்பாக பீட்டர்ஸ்பர்கின் மருத்துவக் கல்லூரிகள் வழி அமைத்துத் தருவதாலேயே அவ்வாறு பயின்று வரும் தமிழக மாணவர்களைப் பகுதி நேரப் பணியாளர்களாக நேற்றைய சுற்றுலாவின் போது நாங்கள் உணவு விடுதியில் சந்திக்க நேர்ந்தது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நாங்கள் தங்கியிருந்த பார்க் இன் விடுதி, மாஸ்கோவின் அஸிமுட் விடுதியைப் போல அத்தனை விசாலமான அறைகளுடன் இல்லையென்றாலும்... தேவைக்கேற்ற வசதிகளுடனும், கச்சிதமான ஒழுங்குடனுமே இருந்தது. அது அமைந்திருந்த இடம், தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் வருணிக்கப்படும் வாஸிலெவ்ஸ்கி தீவு என்பதால், அந்த இடத்தின் மீதான ஒட்டுதல் சற்றுக் கூடுதலாகவே என்னைக் கிளர்ச்சியுறச் செய்து கொண்டிருந்தது. ஆறுகள் கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிகளில் அவ்வாறான குட்டித் தீவுகளை மிகுதியாகக் காண முடிவதும் கூட இரசனைக்குரிய ஒரு காட்சிதான்!
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு காலை பத்து மணி அளவில் நகர் உலாவுக்குச் செல்ல ஆயத்தமானோம். ரஷ்யாவின் அரசியல் தலைநகராகக் கம்பீர மிடுக்குடன் – ஸ்டாலினிய பாணிக்கட்டிடங்களோடு தோற்றம் தந்த மாஸ்கோவுக்கு மாறாகப் பன்முக எழில் உருவ அமைப்புக்கள் பலவற்றோடு எங்களை வரவேற்றது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். இங்கும் கூட மாஸ்கோ போலவே அடுக்குமாடிக் குடியிருப்புக்களும், அலுவலகங்களும், வணிக வளாகங்களும் நிறைந்து கிடந்தாலும், மக்கள் நடமாட்டம் கொஞ்சம் அதிகமான உயிர்ப்போடு இருந்ததைக் காண முடிந்தது. சாலைகளின் ஒட்டத்திலேயே இடையிடையில் குறுக்கிடும் பசுமையும், தூய்மையுமான பூங்காக்கள்! அங்கே உள்ள இருக்கைகளில், புல் தரைகளில் ஓய்வாக, உல்லாசமாகப் பொழுதுபோக்கும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள்!
விடுதியிலிருந்து கிளம்பிய எங்கள் பேருந்து, செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மையமாகக் கருதப்படும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் என்னும் மிகப் பெரிய விசாலமான வீதி வழியே சென்று கொண்டிருந்தது. உலகின் மிகப்பெரிய தெருக்களில் ஒன்றான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட், தேவலாயங்கள் உள்ளிட்ட எழிலார்ந்த பல கட்டிட அமைப்புக்களைக் கொண்டிருப்பது. அங்காடிகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் ஆகிய பலவற்றோடு அமைந்திருக்கும் இந்தத்தெரு. ’இரவு வாழ்க்கை’க்கும் பெயர் பெற்றிருப்பது...
நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் ஜுர வேகமான வாழ்க்கை ஓட்டத்தை, அந்தத் தலைப்பிலேயே புனைகதையாக்கித் தந்திருக்கிறார், ரஷ்ய எழுத்தாளர் நிகோலாய் கோகோல். ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவலான ‘குற்றமும்தண்டனையும்’ மற்றும் 'பீட்டர்ஸ்பர்க் கவிதை' (ST PEETARSBARG POEM) என்ற மாற்றுப் பெயர் கொண்ட அவரது ‘இரட்டையர்’(THE DOUBLE) நாவல் ஆகியவை பெரும்பாலும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டை நிலைக்களனாக வைத்து நிகழும் சம்பங்களையே மிகுதியாகக் கொண்டிருக்கின்றன.
அரைவட்ட வடிவம் கொண்டதும், நிறையத் தூண்களோடு கூடியதுமான ஐசக் தேவாலயம், கம்பீரமான மேற்கூரையோடு பீட்டர்ஸ்பர்கின் தனித்த முத்திரையாகவே காட்சி தரும் கஸான் தேவாலயம் ஆகியவை, தங்கள் கட்டிடக் கலை நுணுக்கங்களால் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் அழகுக்கு அழகு சேர்ப்பவை. .
தொடக்க காலகட்டத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய முதன்மையான தேவாலயமாக விளங்கியிருந்த ஐசக் பேராலயம் 1818-1858 களில் ஃபிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. தங்க நிறத்தில் தகதகக்கும் இதன் மேற்கூரையே இன்றளவும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் வானளாவிய சிகரத்தைப்போன்ற அடையாளச்சின்னமாக விளங்கி வருகிறது.
ரோமாபுரியின் வத்திகான் நகரில் இருக்கும் செயிண்ட் பீட்டர் பசிலிக்கா பேராலயத்தின் வடிவமைப்பால் தூண்டுதல் பெற்று, அதை இன்னொரு பிரதி எடுத்ததைப்போலக் காட்சி தரும் கசான்மாதாவுக்கான (LADY OF KAZAN) தேவாலயம் கட்டிடக் கலையின் அற்புதமாய்ப் பொலிந்து கொண்டிருப்பதும் இங்கேதான்... ரஷ்ய ஆசார மரபை ஒட்டிய தேவாலயங்களில் முக்கியமானதாக எண்ணப்படும் இந்த ஆலயம், 1812 ஆம் ஆண்டு, நெப்போலியனோடு நிகழ்ந்த போரில் - அவன் தோற்கடிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டின் வெற்றிச் சின்னமாகவே கருதப்படலாயிற்று - அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் திறன் படைத்த ’கஸான் மாதா’வின் பெயரால் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்குள்ளேதான் நெப்போலியனுடனான போரைத் தலைமையேற்று நடத்திய படைத்தலைவர் மிக்கேல் குடுசோவின் கல்லறையும் அமைந்திருக்கிறது. 1932 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவின் சமயம் சார்ந்த வரலாற்றையும், அதன் நாத்திக வாதக் கோட்பாடுகளையும் கூட வெளிக்காட்டும் காட்சியகம் இதனுள் உருவாக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு நிறுத்தப்பட்டு விட்ட பூசனைகள் அண்மைக்காலமாக மீண்டும் நிகழத் தொடங்கியிருந்தாலும் ஆத்திக, நாத்திகக் காட்சியகம் இன்னும் கூட இங்கே இயங்கி வருகிறது. பிரம்மாண்டமான வெண்கலக் கதவுகளும், அரண்மனை போன்ற எடுப்பான தோற்றப் பொலிவும் கொண்ட இந்த ஆலயத்தை நேவா ஆற்றின் பின்னணியில் பொருத்திக் காண்பது சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சி.
இளநீலப் பனி வண்ணத்தில் தங்க மயமான ஐந்து மேற்கூரைகளுடன் ஜொலிக்கும் மற்றொரு கட்டிடம் செயிண்ட் நிக்கோலஸ் தேவாலயம், கடற்படை வீரர்களுக்கும், மாலுமிகளுக்கும், பயணிகளுக்கும் வழிகாட்டிப் பாதுகாப்புத் தரும் செயிண்ட் நிக்கோலஸ் என்ற தெய்வத்தின் ஆலயமாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தின் நுட்பமான வேலைப்பாடுகளும்... கண்ணுக்கினிய வண்ணச் சேர்க்கையும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு மேன்மேலும் அழகூட்டுபவை.
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்யக் கலைப்பாணிக்குக் கட்டியம் கூறும் செயிண்ட் நிக்கோலஸ் ஆலயத்தை உருவாக்கும் கனவு, பீட்டர் பேரரசரின் உள்ளத்தில் உதித்த போதும் அவரது மகள் எலிசபெத்தால் தொடங்கப்பட்ட பணி, பின்னர் இரண்டாம் காதரினின் காலகட்டத்திலேயே நிறைவு பெற்றிருக்கிறது. ஆலயத்தின் நேர் எதிரில் இருக்கும் அழகான மணிதாங்கிய கோபுரம் (BELL TOWER) இதன் எழிலை மேலும் எடுப்பாக்கிக் காட்டுகிறது.
விதம் விதமான கட்டிடக் கலை அமைப்புக்களுடன் கூடிய பேரலாயங்களின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு தவற விடாமல் பார்த்தாக வேண்டிய முக்கியமான ஓர் இடமாக எங்கள் வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்ற இடம்... 'சிதறிய இரத்தத்துளிகளின் மீதான மீட்பரின் ஆலயம்’! (The Church of the Savior on Spilled Blood) அந்தப் பெயருக்குள்ளேயே அரிதான ஒரு கதையும் கூட ஒளிந்து கிடந்ததை இனம் கண்டு கொண்டவளாய்… அதை அறியும் ஆர்வத் துடிப்பில் இருந்தேன் நான்….!
- தொடரும்...
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G