தேர்வும் தோல்வியும்!

படிப்பு மட்டும் இருந்தால் வெற்றி விளைந்து விடுவதில்லை.  வாழ்க்கைத் திறன்கள் அவசியம்.  சிலர் பள்ளிப் படிப்பை முடிக்காமல் நிறுவனங்களைச் செம்மையாக நடத்துவதையும், நிறைய படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க
தேர்வும் தோல்வியும்!

உச்சியிலிருந்து தொடங்கு 13...

ராயக்கோட்டையில் நான் பணியாற்றுகிறபோது, எனக்குத் தெரிந்த ஒருவரின் பெண் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.  அப்போது  அந்தப் பெண்ணுக்கு பதினாறு, பதினேழு வயதிருக்கும். மரண வீட்டிற்குச் சென்றபோது அது தற்கொலை என்று தெரிந்தது.  பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த அந்தப் பெண், கடையில் விற்பதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து இறந்து போனாள்.  ஒரே பெண்ணைப் பெற்றெடுத்த அந்தப் பெற்றோர் அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டனர்.   அத்தனைக்கும் அந்தப் பெற்றோர் தேர்ச்சி பெறாததற்கு அந்தப் பெண்ணை அதட்டக் கூட இல்லை.  

தேர்வு தொடர்பாக நான் சந்தித்த முதல் தற்கொலை அது. இப்போது ஆண்டுதோறும் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகிறபோது எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததாலும், ஆசைப்பட்ட படிப்பு சாத்தியமில்லை என்கிற காரணத்தாலும், முதலிடம் கிடைக்கவில்லை என்கிற ஏமாற்றத்தாலும் பலர் தற்கொலை செய்து கொள்வதைப் படிக்க நேர்கிறது.  

வளாக நேர்காணலில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக ஒரு மாணவன் அலைபேசியில் அனைவருக்கும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தகவல் அனுப்பிவிட்டார்.  பிறகு அலைபேசியையும் செயலிழக்கச் செய்தார்.  குரோம்பேட்டையில் உள்ள அந்தக் கல்லூரிக்கு எதிரே இருந்த மின்சார இரயில் நிலையத்திற்குச் சென்று எதிரே வந்து கொண்டிருந்த இரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.  

மருத்துவக் கல்லூரி படிக்கிற ஒரு மாணவி.  என் நண்பருடைய தங்கை. எப்போதும் முதலிடம் பெறுகிற அந்தப்பெண் அந்தமுறை முதலிடம் பெறவில்லையே என்கிற வருத்தத்தில் அறைக்குச் சென்று கதவைப் பூட்டி மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கிவிட்டார்.

படிப்புக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்கிறது. அது நம்மை இன்னும் அதிக நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் படிப்பால் எந்தப் பலனும் இல்லை. படிக்கிறபோது நாம் கிரகிக்கிற செய்திகள் நமக்குள் சென்று மனப்பக்குவத்தையும், திண்மையையும், உணர்ச்சி மேலாண்மையையும் உண்டாக்க வேண்டும்.  எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் ஆற அமர யோசித்து அதற்குத் தீர்வு காணும் முதிர்ச்சி நமக்கு ஏற்பட வேண்டும். ஆனால் இன்று சில மாணவர்கள் படிப்பின் நோக்கத்தையே மறுதலிக்கும் வகையில் உயிரைப் போக்கிக் கொள்வது, அதன்மீது காறி உமிழும் செய்கையாகத் தெரிகிறது.  

என்னோடு படித்த பல நண்பர்களை பத்து பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நான் சந்தித்திருக்கிறேன்.  வகுப்பில் மந்தமாக இருந்த அவர்கள் வாழ்வில் மிளிர்கிறார்கள்.  நல்ல வசதிகளோடு அவர்கள் இருப்பதோடு, அவர்களுடைய அறிவின் முதிர்ச்சியும் அனுபவத் திறமையும் பலரையும் வியக்க வைக்கிறது. அண்மையில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.  நூலை எழுதியவர் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்.  ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் தழைத்தோங்கியவர். மிகச் சரளமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் விளாசுபவர்.  நேர்மைக்காகவும் அவர் ஆற்றிய பணிக்காகவும் பாராட்டப்படுபவர். அவர் பேசுகிறபோது பள்ளிப் படிப்பில் அவர் மங்கியிருந்ததையும், சில தேர்வுகளில் தோல்வியடைந்ததையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 

தொடக்கத்தில் பின்தங்கியிருந்த அவர் நாளடைவில் ஆழமாகப் படிக்கவும், நுட்பமாகக் கற்றுக்கொள்ளவும் முயன்று பல பொறுப்புகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அவருடைய ஆரம்பகாலத் தேக்கம் அவருக்கு ஊக்க சக்தியாக இருந்ததே தவிர, துக்கமாக இருக்கவில்லை. 

நுண்ணறிவைப் பற்றி நாம் சரியான புரிதலோடு இல்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் புலப்படுத்துகின்றன.  அறிவு என்பது எப்போதும் ஒரே அளவீட்டில் இருப்பதில்லை.  பலவிதமான நுண்ணறிவுகள் இருக்கின்றன.  அவை வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.  இன்று ஒருவர் சரியாகப் படிக்கவில்லையென்றால் வாழ்நாள் முழுவதுமே குறைந்த நுண்ணறிவோடு இருந்து தீர வேண்டிய கட்டாயமில்லை.  கவனச் சிதறல்களின் காரணமாக ஒருவர் சில பாடங்களில் மதிப்பெண்கள் பெறாமல் போகலாம்.  பின்னர் படிக்கிற உத்திகளையும், தேர்வு எழுதுகிற நெறிகளையும் கைக்கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.  

எக்ஸ்ரேயை கண்டுபிடித்த ரோயின்ஜன் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பலமுறை தேர்வில் தோற்றவர்.  ஆனால், தனது கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றவர் அவர்.  இதுபோல உலகெங்கிலும் எண்ணற்றோர் படிப்பின் அளவுகோல்களை மீறி வாழ்க்கையில் சாதித்திருக்கிறார்கள்.

நிறைய படிக்காத பலர் பல்வேறு துறைகளில் படித்தவர்களைக் காட்டிலும் மகத்தான சாதனைகள் செய்ததை நாம் கண்ணெதிரே பார்க்கிறோம். ஜெயகாந்தன் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்.  ஆனால் தமிழ் இலக்கியத்தில் அவருடைய பெயரை ஒதுக்கிவிட்டு யாரும் மேலே செல்ல முடியாது. அவர் எழுதிய "குருபீடம்' என்கிற புத்தகம் ஐ.ஏ.எஸ். தமிழ் விருப்பப் பாடத்திற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 

எட்டாவது வகுப்பன்றி வேறொரு வகுப்பை எட்டியும் பார்க்காத கவிஞர் கண்ணதாசன் மகத்தான பாடல்களின் மூலம் மக்களின் மனத்தில் மருதாணி தடவியவர். ஷேக்ஸ்பியர் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படிக்காதவர்.  பல்கலைக்கழக அறிவுஜீவிகளைவிட அவருடைய நாடகங்களே அவர் வாழும் காலத்தில் அதிகமாக நேசிக்கப்பட்டவை. இன்று ஆங்கில இலக்கியத்திற்கு பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக சொற்களை வழங்கியவர் என்று  இங்கிலாந்து அவரைக் கொண்டாடுகிறது. திருவள்ளுவர் ஒரு பள்ளிக்கூடத்தில் படிப்பதைப்போலவோ, தேர்வு எழுதுவதைப்போலவோ நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது.

படிப்பு மட்டும் இருந்தால் வெற்றி விளைந்து விடுவதில்லை.  வாழ்க்கைத் திறன்கள் அவசியம்.  சிலர் பள்ளிப் படிப்பை முடிக்காமல் நிறுவனங்களைச் செம்மையாக நடத்துவதையும், நிறைய படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையும் பார்க்கிறோம்.  பெரிய நிறுவனங்களை உருவாக்கியவர்கள் எந்த வர்த்தக மேலாண்மையையும் படிக்காதவர்களாகவே இருக்கிறார்கள்.  படித்தவர்கள் அவர்களிடம் கைகட்டி வேலை செய்ய நேரிடுகிறது.  

தேர்வு நம்மை பரிசோதிப்பதற்காக.  எந்தத் தேர்வையும் முறையான தயாரிப்போடும், சரியான வழிகாட்டுதலோடும் அணுகினால் வெற்றி பெறலாம்.  ஆனால் நாம் நினைக்கிற இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்.  ஏனென்றால் முதலிடம் என்பது நம்முடைய பங்களிப்பைப் பொறுத்து மட்டும் அமைவதில்லை.  

மற்றவர்களுடைய செயல்பாடு, திருத்துபவர் மனநிலை, கேள்விகளின் தரம் போன்ற எண்ணற்ற காரணிகள் ஒருவர் பெறுகிற மதிப்பெண்களைத் தீர்மானிக்கின்றன.  தேர்வு முடியும்வரை நம்பிக்கைவாதியாக இருக்க வேண்டும்.  அதற்குப் பிறகு எதையும் எதிர்பார்க்காத மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  சில நேரங்களில் நாம் தவறவிடும் நிகழ்வுகள்  மகத்தான வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் இருக்கலாம்.

பெற்றோர் அடிக்கடி முதல் மதிப்பெண் எடுத்துத்தான் தீரவேண்டும் என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப்போலத்  திரும்பத் திரும்ப கூறி குழந்தைகளின் மனத்தில் பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது.  படிப்பின் நோக்கம் மதிப்பெண்களைத் தாண்டியது.  வாழ்க்கையின் சாரம்  படிப்பையும் தாண்டியது. 

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com