உச்சியிலிருந்து தொடங்கு-8

தற்கொலை செய்பவர்களிடம் காணப்படும் பொது உணர்ச்சி. நம்பிக்கையின்மை, உதவியின்மை என்ற இரண்டு மன உணர்ச்சிகள் பெரும்பாலும் தற்கொலையை முன்மொழிகிறது.
உச்சியிலிருந்து தொடங்கு-8
Updated on
3 min read

பத்து பொதுப்பண்புகள்!

எட்வின் ஷ்னீட்மன் என்கிற பேராசிரியர் லாஸ் ஏஞ்செல்ஸ் தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குநரோடு சேர்ந்து ஆய்வுசெய்து தற்கொலையை நோக்கி ஒருவரைத் துரத்திவிடுகிற பத்து பொதுப்பண்புகளைக் கண்டறிந்தார். அவர் "தற்கொலை மனம்' என்கிற புத்தகத்தையும் எழுதினார்.

 முதலாவதாக, தற்கொலையின் நோக்கம் ஒரு தீர்வைக் காண்பதே. தனக்குத் தீவிரமான வலியையோ, ரணத்தையோ ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தற்கொலையாளர் எண்ணுகிறார். தேர்வில் தோல்வியுற்றாலோ, கடன் தொல்லையின் காரணமாகவோ இப்படிப்பட்ட முடிவை நாடுபவர்கள் இருக்கிறார்கள்.  

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் மிகவும் நல்லவர். அவர் வர்த்தகம் செய்தார். தன்னைப் போல அனைவரும் இருப்பார்கள் என எண்ணி பலரிடம் ஏமாந்து தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்தார். ஒரு கட்டத்தில் கடனைச் சமாளிக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர் மிகவும் அவமானப்படுத்தும் வகையில் ஒருநாள் பேசிவிட்டார். அவ்வாறு கடிந்து கொண்டவர் மனத்தில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதை ஒரு தீர்வாகக் கருதி தற்கொலை செய்துகொள்ள இவர் முடிவு செய்தார். திடீரென தூக்கத்தில் இருந்த மனைவியை எழுப்பி ,
""நான் தற்கொலை செய்துகொள்வது போல கனவு கண்டேன்'' என்று வியர்க்க வியர்க்க கூறியிருக்கிறார். அவருடைய மனைவி அப்போதாவது எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும்.  ஆனால், அவர் ""நீங்கள் எதற்கு தற்கொலை செய்து கொள்ளப்போகிறீர்கள்?'' என சமாதானப்படுத்தி இவரை படுக்கையில் படுக்க வைத்திருக்கிறார். மறுநாள் காலை நண்பர் தூக்கில் தொங்கிவிட்டார்.  

இவர் எதைத் தீர்வாக நினைத்தாரோ, அது அவருடைய மனைவியை மனச்சிதைவுக்கு ஆட்படுத்திவிட்டது. அவர் இன்றும் மனநலத்திற்காக மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  குடும்பத்தின் சொத்துகள் பறிபோய்விட்டன. வசதியாக வாழ்ந்த குடும்பம் தரையளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  

இரண்டாவது, பொது நோக்கம் உள்ளுணர்வற்ற நிலையை அடைவது. ஒருவர் தன் பிரக்ஞையை (இஞசநஇஐஞமநசஉநந) முடிவுக்குக் கொண்டுவருவதுதான் துயரத்திலிருந்து விடுபடுவதற்கு வழி என்று எண்ணுகிறார். நாம் இறந்துவிட்டால் நம்மைச் சுற்றி என்ன வேண்டுமானால் நடக்கட்டும்,அது நமக்குத் தெரியவா போகிறது? என்று இவர்கள் நினைக்கிறார்கள். இது ஒருவிதமான அறியாமை. நம்மை நம்பியிருப்பவர்களை, நம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவதற்குச் சமம். 

மூன்றாவது பண்பு பொதுவாகக் காணப்படும் தூண்டுதல்.  பொறுத்துக் கொள்ள முடியாத உணர்ச்சி வசப்படும் தன்மை, தாங்க முடியாத வலி, ஒத்துக் கொள்ள முடியாத துயரம் ஆகியவை சிலரைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. ஒரு கட்டத்தில் வாழ்வது இறப்பதைக் காட்டிலும் பெரிய வலியாகத் தோன்றுகிறது. அப்போது சாவு வராதா? என்ற மனநிலை ஏற்படுகிறது. வராதபோது வரவழைத்துக் கொள்கிறார்கள். 

நான்காவது, பொதுவாகக் காணப்படும் அழுத்தம். மனரீதியான தேவைகள் நிறைவேறாதபோது இது ஏற்படுகிறது. மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறவேண்டும், மருத்துவப் படிப்பு சேர வேண்டும் போன்ற தேவைகள் நிறைவேறாதபோது உண்டாகும் வெறுமை இப்படிப்பட்ட ஒரு முடிவை நோக்கி சிலரை அழுத்துகிறது.  

ஐந்தாவதாக, தற்கொலை செய்பவர்களிடம் காணப்படும் பொது உணர்ச்சி. நம்பிக்கையின்மை, உதவியின்மை என்ற இரண்டு மன உணர்ச்சிகள் பெரும்பாலும் தற்கொலையை முன்மொழிகிறது. நமக்கு உதவ யாருமில்லை, இந்த நெருக்கடியிலிருந்து வெளிவர முடியாது  என்கிற உணர்ச்சி நீடிக்கும்போது மரணம் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. 

ஆறாவது பண்பு, மதில்மேல் பூனை மனநிலை.  தற்கொலை செய்துகொள்பவர்கள் சாகவும் விரும்புகிறார்கள், அதே நேரத்தில் தங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்றும் எண்ணுகிறார்கள்.  உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்துகொள்ள முயலும் பலர், அதிலிருந்து யாராவது காப்பாற்றினால் நெடுங்காலம் உயிர் வாழ்வதையும், அவர்களை அந்த நெருக்கடியிலிருந்து விடுவித்தால் நிம்மதியோடு இருப்பதையும் பார்க்க முடிகிறது.  

ஏழாவது பொதுப்பண்பு குறுகிய பார்வை.  தற்கொலை செய்துகொள்வதற்கு முடிவெடுத்தவர்கள் மற்ற வாய்ப்புகளைக் காணத் தவறிவிடுகிறார்கள்.  அவர்கள் எல்லாக் கதவுகளையும் அடைத்து விடுகிறார்கள்.  அவர்கள் யோசனை ஸ்தம்பித்து விடுகிறது.  மனம் கூம்பி விடுகிறது.  தொடர்ந்து துயரப்படுவது, அல்லது சாவது என்கிற இரண்டு வழிகள் மட்டுமே அவர்கள் கண்களுக்குப் புலப்படுகின்றன.  இந்தக் கிட்டப் பார்வையால் அவதிப்படுகிற அவர்கள் பிரச்னைகளிலிருந்து மீள்வதற்கான வழிகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.  

எட்டாவது பொதுப்பண்பு, தப்பித்தல்.  வாழ நினைப்பவர்கள் ஒரு பிரச்னையிலிருந்து விடுதலையாக முயற்சி செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தவர்களோ தப்பிக்க நினைக்கிறார்கள். வீட்டை விட்டு ஓடுவது, வேலையை விடுவது, இராணுவத்திலிருந்து ஓடி வருவது, மனைவியை அல்லது கணவனை விட்டுவிட்டுச் செல்வது போன்ற அனைத்துமே தப்பிக்கிற செயல்பாடுதான். அதைப்போலவே தற்கொலையும் குறிப்பிட்ட சூழலிலிருந்து தப்பிக்கிற உத்தியாக இருக்கிறது.  

ஒன்பதாவது பொதுப்பண்பு, உள்நோக்கத்தை நெருங்கிய வட்டத்தில் தெரியப்படுத்துவது.  மனிதர்கள் எதையும் முழுக்க ரகசியமாக வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் அல்ல.  அவர்கள் தங்களையும், தங்கள் அடையாளத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என விழைபவர்கள். அதனால்தான், கொலை செய்கிறபோதுகூட தங்கள் சாமர்த்தியத்தை அறிவிக்கும் வகையில் ஒன்றிரண்டு தடயங்களை வேண்டுமென்றே விட்டுச் செல்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளத் தயாரானவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் மனச்சோர்வையும், தாங்கள் உதவியில்லாமல் அனாதையாக விடப்பட்டதையும், தங்கள் விரக்தியையும் அவ்வப்போது சமிக்ஞைகளாக வெளிப்படுத்துகிறார்கள்.  இதை மற்றவர்கள் உற்றுநோக்கத் தவறிவிடுகிறார்கள். அப்போதே அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதை அறிந்தால் மீட்டுக்கொண்டுவர முடியும்.  

பத்தாவது பொதுப்பண்பு, ஒருவர் நெருக்கடிகளைச் சந்திக்கும் முறைகளைப் பொறுத்தது.  ஒருவர் ஏற்கெனவே வாழ்க்கையில் சந்தித்த நெருக்கடிகளை எவ்வகையில் எதிர்கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். ராகிங் கொடுமை இருக்கிறது என்று ஒரு கல்லூரியை விட்டு வேறு கல்லூரிக்கு மாறியவர்கள், அப்பா, அம்மா திட்டுகிறார்கள் என்பதற்காக சில நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவர்கள் ஆகியோர் தற்கொலையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்குப் பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும், நண்பர்களும் நிறைய ஊக்கம் தரவேண்டும். மனரீதியான ஆலோசனைகளும் அவர்களைத் தைரியமிக்கவர்களாக மாற்றும்.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com