தற்கொலை விசித்திரங்கள்!

எல்லா  நேரங்களிலும் அறிவார்ந்தவர்களிடமே பழகினால் வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்ள முடியாது.  சண்டை போடும் மாணவர்களிடமும் பழக வேண்டும்.   சரியாகப் படிக்காமல் விளையாடும் மாணவர்களிடமும் ...
தற்கொலை விசித்திரங்கள்!

உச்சியிலிருந்து தொடங்கு-10
சில குழந்தைகளுக்கு அதிகப்படியான நுண்ணறிவு அமைந்திருக்கும். அவர்களை வரப்பிரசாத நுண்ணறிவாளர்கள் (Gifted Children) என்று சமூகம் சந்தனம் பூசி, பன்னீர் தெளித்து கெளரவிப்பதுண்டு. ஆனால், ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறு வயதில் தற்கொலை செய்கிற பலர் இப்படி அபரிமிதமான நுண்ணறிவை அடைகாத்து வைத்தவர்கள். 

இக்குழந்தைகள் கல்வியறிவில் கலங்கரை விளக்கங்களாக இருப்பதைப்போல உணர்ச்சித் திறனிலும் உச்சத்தில் இருப்பார்கள் என எண்ணுவது, இன்று பெற்றோர்கள் செய்கிற மிகப்பெரிய தவறு. ஆறாம் வகுப்பில் முனைவர் பட்டத்திற்கான நுண்ணறிவைப் பெற்றவன், உணர்ச்சித் திறனில் ஆறாம் வகுப்பைத் தாண்டாமல் இருப்பான் என்பதை அவர்கள் உணர்வதில்லை. 

நம்முடைய மிகப்பெரிய பிரச்னையே ஒருவரிடம் தூக்கலாக இருக்கும்  ஒரு பரிமாணத்தை மற்ற பரிமாணங்களுக்கும் பொருத்திப் பார்க்கும் அறியாமை. ஒருவர் அழகாக இருந்தால், அறிவாகவும் இருப்பார் என்று அனுமானித்துக் கொள்கிற காட்சிப் பிழை. இந்த மனநிலையே அவர்களை உணர்ச்சித் திறனில் சரியாக எடைபோடாமல் இருக்கச் செய்கிறது.

அதிகப்படியான நுண்ணறிவு ஒருவகையில் ஆபத்தானது. சம வயது குழந்தைகளைக் கடந்து படிப்பில் முன்னேறுகிற இந்தக் குழந்தைகள் தனிமைப்பட்டு விடுகிறார்கள். பெரும்பாலும் புத்தகத்துடன் இருந்து விடுகிறார்கள். தங்களை அவர்கள் எல்லா இடங்களிலும் மேம்பட்டவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய நெருக்கடியை சமூகம் உண்டாக்கிவிடுகிறது.  அவர்கள் மீது பெற்றோர்களும், கல்வி நிறுவனமும் எதிர்பார்ப்புகளைத் திணிக்கின்றனர்.  அவர்களால் மற்ற மாணவர்களோடு இயல்பாகப் பழக முடிவதில்லை.

மற்ற மாணவர்களும் அவர்களிடம் பழகுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். கர்வம் பிடித்தவர்கள் என்கிற ஒரு முத்திரையும் குத்தப்படுகிறது. தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவர்களைத் தங்கள் வட்டத்தில் இணைத்துக் கொள்ள சராசரி மாணவர்கள் தயாராக இருப்பதில்லை. எனவே, விளையாடவோ, பொழுதுபோக்குகளில் பங்கெடுக்கவோ இவர்களால் முடிவதில்லை. இது அவர்கள் உள்ளத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்திவிடுகிறது. 

படிப்பைத் தாண்டிய வேறு செயல்பாடுகளில் அவர்களால் செம்மை சேர்க்க முடிவதில்லை.  இதனால் அவர்கள் உலகம் ஒரே வண்ணம் கொண்டதாக மாறிவிடுகிறது. அவர்கள் தங்களைத் தாண்டி செல்ல முடிவதில்லை. நண்பர்கள் இல்லாத உலகம் சூனியமாகிவிடுகிறது.  அறிவுரீதியாக அவர்கள் யாரை ஒத்திருக்கிறார்களோ, அவர்களும் இவர்களை வயதின் காரணமாக சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. 

ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை இருக்கிறது.  பொழுதுபோக்குகள், பழகும் விதம், கேலி செய்வது, அரட்டையடிப்பது போன்றவை வேறுபடுகின்றன. எனவே அவர்கள் யாரோடும் பழக முடியாத நிலையில் தவித்துப் போகிறார்கள்.  அவர்கள் குடும்பமும் அந்நியப்பட்டு விடுகிறது. உடலைக்காட்டிலும் வேகமாக மூளை முதிர்ச்சியடையும்போது ஏற்படும் ஒருவித விரக்தி இக்குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.  பெற்றோர்களும் அவர்களுடைய இதயத்தைப் பற்றி கவலைப்படாமல் மூளையையே முதலீடாக நினைக்கிறார்கள்.  அவர்கள் இன்னும் எந்த கின்னஸ் சாதனையை ஏற்படுத்துவார்கள் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.  இது அக்குழந்தைகளுக்குப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.  

சில பள்ளிகளில் சில மாணவர்களை சிறந்த மாணவர்கள் என்று அடையாளம் காண்பார்கள்.  அவர்கள் மாநில அளவில் சாதனை புரிய வேண்டுமென்று வலியுறுத்துவார்கள். தொடர்ந்து அந்த மாணவர்களின் மனத்தில் அவர்கள்தான் முதல் மதிப்பெண் எடுக்கக் கூடியவர்கள் என்கிற அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்.  அந்த மாணவர்கள் இதற்காக சமவயது தோழர்கள் ஈடுபடும் பொழுதுபோக்குகளை எல்லாம் உதறி விட்டு புத்தகத்திலேயே முழு நேரமும் மூழ்குவார்கள்.  சில நேரங்களில் வகுப்புத் தேர்வுகளில் ஒரு வினாவிற்கு விடை தெரியாவிட்டால் பெரிய ஏமாற்றம் ஏற்படும்.  தங்களைத் தாண்டி யாராவது அதிக மதிப்பெண் பெற்றுவிடுவார்களோ என்கிற பதற்றம் இவர்களைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டேயிருக்கும்.  

பதற்றமும், பயமும் இரட்டைக்கிளவிகள்.  ஆகவே, பயத்தின் காரணமாக அவர்கள் தேர்வில் தவறு செய்வதற்கான நேர்வுகள் அதிகம். உலகமே அவர்களை எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம் பெரிய அவமானமாகப் போய்விடும். அந்த நேரத்தில் அவர்களுக்கு தற்கொலை ஒன்றே தீர்வாகத் தென்படும்.

பெற்றோர்கள் குழந்தைகளை மிகப் பெரிய சாதனையாளர்களாக உருவாக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தரும் தொல்லைகள் கொடூரமானவை. திரைப்படங்களில் வருவதைப்போல எல்லாப் பரிசுகளையும் தங்கள் குழந்தைகளே பெற்றுவிட வேண்டும் என நினைப்பது தற்குறிகளின் அறிகுறிகள். எந்தக் குழந்தையும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும்படி இயற்கை படைப்பதில்லை.  

எனக்குத் தெரிந்து ஒரு தகப்பனார் அவரைப்போலவே அவர் மகனையும் டென்னிஸ் வீரராக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த மகனுக்கோ அதில் அதிக விருப்பமில்லை.  அடித்துத் துன்புறுத்தி விளையாட வைப்பார். எங்கள் வீட்டிற்கு வரும் அவன், தந்தை செய்த கொடுமைகளையெல்லாம் சொல்லி அழுவான். சாதாரணமாக விட்டிருந்தால் வாழ்க்கையில் ஜொலித்திருக்கக்கூடிய அவன் இராணுவ அதிகாரி போல தந்தை நடந்ததால் நொடிந்து போய் விட்டான்.  

சில குழந்தைகளுக்கு சில திறமைகள் இருக்கும். ஆனால் அவற்றை மகிழ்ச்சியாக அணுக வேண்டுமே தவிர, அவற்றை வைத்து அந்தக் குழந்தைகளை நிபுணர்களாக்குகிறோம் என்று பெற்றோர்கள் பிரயத்தனம் செய்யக்கூடாது. ஏகப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி அவர்கள் குழந்தைத்தனத்தைத் திருடக் கூடாது. அவர்களைத் தூங்கவிடாமல், விளையாட விடாமல், மகிழ்ச்சியாக இருக்கவிடாமல், அகதி முகாமில் இருப்பதைப்போல பலவந்தப் படுத்தினால் அவர்கள் சின்னத் தோல்விக்கே சுருண்டுவிடுவார்கள்.

குழந்தைகள் ஏதேனும் நிகழ்வில் தோல்வியடைந்து வந்தால் அவர்களை வாரியணைத்து ஆறுதலையும், நம்பிக்கையையும் தருவது நல்ல பெற்றோர்களுக்கான அடையாளம். நாமே அவர்களைக் கைவிட்டால், யார் அவர்களின் கண்ணீரைத் துடைப்பார்கள்? ஏற்கெனவே நொந்துபோய் இருக்கிற அவர்களின் கடைசி தந்திக் கம்பியையும் நாம் அறுத்து அவர்களை அனாதையாக்கக் கூடாது.

குழந்தைகளிடம் இருக்கக்கூடிய அதிகப்படியான அறிவாற்றலையும் அவர்களிடம் திரும்பச் திரும்பச் சொல்லி அடுத்தவர்களிடம் ஒட்டவிடாமல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.  எல்லா  நேரங்களிலும் அறிவார்ந்தவர்களிடமே பழகினால் வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்ள முடியாது.  சண்டை போடும் மாணவர்களிடமும் பழக வேண்டும்.   சரியாகப் படிக்காமல் விளையாடும் மாணவர்களிடமும் கைகுலுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் எங்கேயாவது அநியாயமோ, அக்கிரமமோ நடந்தால் சட்டையைப் பிடித்து உலுக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எல்லாக் குழந்தைகளுமே தெய்வீகப் பிரசாதங்கள். அதை அவர்கள் நுண்ணறிவை வைத்து நாம் எடைபோட வேண்டிய அவசியமில்லை. 


தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com