

உச்சியிலிருந்து தொடங்கு-11
தற்கொலை குறித்த கலைக்களஞ்சியம், இளைஞர்களின் மரணத்தில் தற்கொலை மூன்றாவது முக்கிய காரணியாக இருக்கிறது எனச் சுட்டுகிறது. கல்லூரி மாணவர்களிடமோ அது இரண்டாவது முக்கியக் காரணி. கல்லூரியில் சேருகிற 19 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்டவர்களிடம் காணப்படும் தற்கொலை, மேற்படிப்பில் சேராதவர்களைவிட அதிகமாக இருக்கிறது.
1950ஆம் ஆண்டு முதல், கல்லூரிக்குப் போகும் பெண்களின் தற்கொலை விகிதம் இரட்டிப்பாகி இருக்கிறது. ஆண்களின் விகிதமோ மும்மடங்காக அதிகரித்திருக்கிறது.
கல்லூரி மாணவர்களின் இந்த அதீத முடிவுக்கான காரணங்களை முழுமையாக ஆய்வு செய்ய முடிவதில்லை. ஆனால், பெரும்பாலும் மிக உயர்ந்த பல்கலைக்கழகங்களில் படிக்கிறவர்களே இப்படிச் செய்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இடம் கிடைப்பதற்கே அரிதாக இருக்கிற கல்வி நிலையங்களில் இவை நடப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. அதுவும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சமூகரீதியாக தனிமைப்படுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம்.
கல்லூரி மாணவர்களின் தற்கொலைக்கு மனநோய்களே காரணம். மனநிலை மாற்றப்பிறழ்வுகள் (Mood Disorders) இதற்கு ஒரு காரணம். இராபர்ட் தயர் என்பவர் மனநிலை மாற்றங்களைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். உணர்ச்சி வேறு, மனப்பாங்கு வேறு. காரணமில்லாமல் இருப்பது மனப்பாங்கு. மனப்பாங்கு உடல், மனம் ஆகிய இரண்டிலும் ஏற்படுகிற வினைகளைப் பொறுத்து அமைகிறது. குறைந்த சக்தி, அதிகப் பதற்றம் ஆகியவை அழுத்த மனநிலைக்கு காரணமாக அமைகின்றன. சிலர் தொடர்ந்து அந்த மனப்பாங்கிலேயே இருக்கும்போது விபரீதமான எண்ணங்கள் ஏற்படுகின்றன.
மனச்சிதைவு, இருமுனைக்கோடி மனம் (bipolar disorder) ஆகியவை மாணவர்களிடம் காணப்படும் பிறழ்வுகள். சில மாணவர்கள் குறித்த காலத்தில் படிப்பை முடிப்பதில்லை. நம்முடன் படித்தவர்கள் பட்டம் பெற்று பறந்து சென்றுவிட்டார்களே நாம் இன்னும் இங்கேயே இருக்கிறோமே என்கிற எண்ணமும் தீய எண்ணங்களை தீ மூட்டி விடுகிறது. இதில் சிலர் மன அழுத்தம் அல்லது உணர்ச்சிப் போராட்டங்களின் காரணங்களால் படிப்பில் மந்தமடைந்தவர்கள்.
குடிபோதையும், மனப்பாங்கில் சிதைவை ஏற்படுத்திவிடுகிறது. அழுத்தத்தின் காரணமாக மதுவிற்கும், போதைப்பொருட்களுக்கும் ஆளாகிறவர்கள் ஒருவித தப்பித்தலை நாடுபவர்கள். எந்த தப்பித்தலும் நிரந்தரத் தீர்வு இல்லை. எனவே, வலியை அதிகமாக்கும் நிவாரணமாக அது இருந்துவிடுகிறது. இந்த மயக்கப் பொருட்களை நாடுபவர்கள் மன அழுத்தத்திற்குத் தேவையான சிகிச்சையைப் பெற்று வெளிவருவதற்கு முடியாமல் போய்விடுகிறது.
கல்லூரிக்கு விருப்பமில்லாமல் வருகிற மாணவர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட படிப்பைப் படிப்பதற்கு விரும்பாத மாணவர்களையும் கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் அந்தப் படிப்பைப் போதிக்கும் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்த மாணவர்கள் படிப்போடு ஒன்ற முடியாமல் தனிமைப்படுகிறார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் தங்கள் வட்டத்தில் அவர்களை இணைத்துக் கொள்வதில்லை. விடுதியில் இருக்கிற மாணவர்கள் குற்ற உணர்வின் காரணமாக தப்பிப்பதற்கு தோதாக போதைப்பொருட்களைத் தேடுகிறார்கள்.
சில மாணவர்களை நிர்வாகமும், குடும்பமும் உதாசீனப்படுத்தும்போது அவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். தினசரி சந்திக்கும் சூழலில் அவர்களுக்கான இடம் எது என்கிற குழப்பம் ஏற்படுகிறது. எல்லாரும் அவர்கள் பயத்தை அதிகப்படுத்துகிறார்கள். பெற்றோர்களோ அவமானப்படுத்தினால் மகன் ரோஷம் வந்து நன்றாகப் படிப்பான் என்று எண்ணிக்கொண்டு வசைபாடுகிறார்கள். எதிர்காலம் குறித்த பிரம்மாண்டமான பயம் அவர்களைத் துரத்துகிறது. அவர்கள் பதிலுக்கு மற்றவர்கள் மனத்தில் குற்ற உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்காகத் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
கல்லூரிக்குச் சென்றதும் சில மாணவர்களுக்கு பெண்களுடன் படிப்பது புதிய அனுபவம். அவர்களுடன் யாராவது ஒரு பெண் பேச நேர்ந்தால் அதைக் காதல் என்று எண்ணுகின்ற மாயச் சூழலில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் நிறையக் கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருநாள் அது மற்ற மாணவர்கள் முன்பு மறுதலிக்கப்படும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் சுருங்கிப் போகிறார்கள்.
தாழ்வு மனப்பான்மையால் ஏற்கெனவே நிரம்பியிருக்கிற மாணவர்கள் தொட்டால் சுருங்கியைப்போல் துவண்டு விடுகிறார்கள். அவர்களைச் சுற்றியுள்ள நண்பர்களும் தொடக்கத்திலேயே இதெல்லாம் சாத்தியமில்லை என்று அறிவுறுத்துவதற்குப் பதிலாக, உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இந்தப் புறக்கணிப்பு அவர்கள் உருவாக்கியிருக்கிற பிம்பம் உடைவதனால் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. அவர்கள் அவமானத்திலிருந்து மீண்டு வர முடியாமல் தனக்கு மறுப்புச் சொன்ன பெண் வருந்துவாள் என ஒரு நப்பாசையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரியில் ஒரு மாணவன் ஒரு பெண்ணைத் தீவிரமாக நேசித்தான். அந்தப் பெண்ணுக்கோ இது துளியும் தெரியாது. அவன் ஆண்களும், பெண்களும் சகஜமாகப் பழகக்கூடிய பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவள். எல்லாரிடமும் பழகுவதைப் போலத்தான் இவனிடமும் நட்பு பாராட்டினாள். ஒருநாள், இவன் எக்குத்தப்பாக ஏதோ சொல்ல, அவள் கோபப்பட்டு கடிந்து கொண்டாள்.
இந்த மாணவன் அதற்குப் பிறகு காதல் தோல்வியால் தற்கொலை செய்கிற படங்களாகத் தேர்ந்தெடுத்துப் பார்க்க ஆரம்பித்தான். அப்போதாவது அவருடைய நண்பர்கள் பெற்றோர்களுக்கோ, பேராசிரியர்களுக்கோ தெரிவித்திருக்கலாம். ஆனால், அவர்களும் இவன் எப்போதும் இப்படித்தான் என்று கேலி பேசுவதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஒருநாள் அந்த மாணவன் தூக்குப் போட்டுக் கொண்டுவிட்டான்.
காதல் என்பது யாசகம் அல்ல. அது கம்பீரம் கலந்தது. கவர்ச்சியைத் தாண்டிய நோக்கம் அதற்கு இருக்கிறது. ஓர் ஆணும், பெண்ணும் எத்தகைய கொள்கைப் பிடிப்புடன் வாழ்க்கையில் இணையச் சம்மதிக்க வேண்டும் என்பதை காரல் மார்க்ஸ் - ஜென்னி, பியர் க்யூரி - மேரி க்யூரி போன்றவர்களின் தியாக வரலாற்றைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தடியால் அடித்து பழுக்க வைக்கக் கூடியதல்ல காதல். அது அயல் மகரந்தச் சேர்க்கையைப்போல இயல்பாக நடக்கக் கூடியது. பரிதாபத்தாலோ, பரிகாசத்தாலோ அதைப் பெற்றுவிட முடியாது. இதையெல்லாம் கல்லூரியில் சேருகிறபோதே மாணவர்களுக்குப் பக்குவமாகச் சொல்லித் தருவது அவசியம்.
ஏதேனும் ஒரு தற்கொலை கல்லூரி வளாகத்தில் நடந்தால் மாணவர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நம்பிக்கை தருகிற உரைகளை ஆற்ற வேண்டும். தொடக்கத்தில் சோர்வாக இருக்கிற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பதப்படுத்த வேண்டும். மூத்த மாணவர்கள் பகடி செய்வது புதிய மாணவர்களை அழுத்தத்தில் ஆற்றும் இன்னொரு செயல்.
வளாக நேர்காணலில் தேர்ச்சி பெறாவிட்டால் வாழ்வைத் தூக்கி எறிகிற மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த உலகம் பரந்து விரிந்தது. இதில் சின்ன எறும்புக்கும் கூட இடம் இருக்கிறது. தன்னம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டால் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் அந்தக் கல்வியால் என்ன பயன்? மாணவர்களைத் தேர்வுக்காகத் தயார் படுத்துவதைவிட வாழ்வுக்காகத் தயார் படுத்துவதுதானே உயர்ந்த கல்வி?
தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.