தற்கொலை எண்ணம் 

புராதன எகிப்தில் தற்கொலையைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் எதுவும் இல்லை.  மரணம் என்பது ஓர் இருத்தலிலிருந்து இன்னொன்றிற்குச் செல்லும் தாழ்வாரமாகவே கருதப்பட்டது.
தற்கொலை எண்ணம் 
Updated on
2 min read

உச்சியிலிருந்து தொடங்கு-2

ஒரே ஒரு கணம் ஏற்படும் சலிப்பில் வாழ்க்கையை வெறுத்து இனிநாம் எதற்காக வாழவேண்டும் என்று தன்னையே மாய்த்துக் கொள்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். ""இன்னொருவனைக் கொல்லும் மனிதன் ஒருவனை மட்டும் கொல்கிறான்;  தன்னையே கொல்பவன் எல்லா மனிதர்களையும் கொன்று விடுகிறான். அவனைப் பொறுத்தவரை உலகத்தையே அழித்துவிடுகிறான்'' என்று ஜி.கே. செஸ்டர்டன் குறிப்பிடுகிறார். 
ஒவ்வோராண்டும்  கொலையாலும், எய்ட்ஸôலும் இறப்பவர்களைவிட அதிகம்பேர் உலகெங்கும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  ஆல்பர்ட் கேமோ, "தற்கொலை ஒன்றுதான் மிகவும் முக்கியமான தத்துவப் பிரச்னை' என்று குறிப்பிடுகிறார்.  ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி 1651 ஆம் ஆண்டு லத்தீன் சொல்லான "சூசைடம்' என்பதிலிருந்து அது உருவானதாகக் குறிப்பிடுகிறது. "சூசைட்' என்கிற ஆங்கிலப் பதம் 1662 ஆம் ஆண்டு எட்வர்ட் ஃபிலிப்ஸ் என்பவரால் முதல்முறை பயன்படுத்தப்பட்டது என்கிற  குறிப்புகளும் உள்ளன. 
ஒவ்வொரு தற்கொலை நிகழும்போது நம்மை நாமே வஞ்சித்து சாகடித்துக் கொண்டதைப்போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.  அதனால்தான் அந்தத் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு அதிக நாட்கள் பிடிக்கின்றன.  வாழ வேண்டிய வயதில், ஒருவர் கெடுமுடிவதற்கு முன்பே தன்னைச் சாகடித்துக் கொண்டால் நமக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. அது நிரப்பப்படாமலே போய்விடுகிறது. அது எதனால் நிகழ்கிறது என்பதை அவ்வளவு எளிதில் அவிழ்த்துவிட முடியாத அளவுக்குச் சிக்கல் கொண்ட முடிச்சு அது.  
தற்கொலை செய்து கொள்ளும்  வழக்கம் தொன்றுதொட்டே மானுடத்திற்கு இருந்தது.   புராதன எகிப்தில் தற்கொலையைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் எதுவும் இல்லை.  மரணம் என்பது ஓர் இருத்தலிலிருந்து இன்னொன்றிற்குச் செல்லும் தாழ்வாரமாகவே கருதப்பட்டது.  "தற்கொலை குறித்த  விவாதம்' என கி.மு. 2000 வாக்கில் பாப்பிரஸில் எழுதப்பட்ட எகிப்திய குறிப்புகளே  அது பற்றிய முதல் ஆவணம்.
சிக்மன்ட் ஃப்ராய்ட் ஒவ்வொரு மனிதனுக்கும் மரண இயல்பெழுச்சி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.  அதை மறைக்கவே மற்றவர் மீது வன்மம் காட்டுவதாகக் கூறுகிறார். ராபர்ட் கிரீன் இங்கர்சால் தற்கொலை செய்து கொள்ள அதிக துணிச்சல் தேவை என்று கூறுகிறார்.  நாம் எல்லோரும் அதைக் கோழைத்தனம் என்று வாதிடும்போது உயிரை விட்டுவிட மிகுந்த தைரியம் வேண்டும்.  ஒரு கட்டத்தில் தற்கொலையை நியாயப்படுத்தி அறிவுஜீவிகள் பேசியும் எழுதியும் வந்தார்கள்.  ஆனால் தாந்தே, தற்கொலை செய்து கொள்பவர்களின் ஆன்மாவுக்காக நரகம் வாயைத் திறந்து கொண்டு காத்திருப்பதாக எழுதி இச்செயல்களைக் கண்டித்தார்.  சில நாடுகளில் தற்கொலை செய்பவர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் அதிகாரம் இருந்தது.  அவ்வாறு இறப்பவர்களுக்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் நடத்துவதும் மறுக்கப்பட்டது.  இருபதாம் நூற்றாண்டில் தான் தற்கொலை செய்து கொள்வது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் என்பது போன்ற தவறான பாதை முன்வைக்கப்பட்டது.  
 ரோமாபுரியின் சரித்திரமே ஒரு தற்கொலையோடு தொடங்கியது.  கிமு. ஆறாம் நூற்றாண்டில் நம் கண்ணகியைப் போன்று சாகித்ய கற்புடன்   லூக்ரஷியா என்கிற பெண் இருந்தாள்.  அப்போது ரோமாபுரியை ஆண்ட ஈட்ரஸ்கின் என்கிற வம்சத்தினர் தங்களையும் ரோமானியர்களாகக் கூறி வந்தனர்.  ரோமாபுரியின் பணக்கார குடும்பங்கள் அவர்களை ஆதரித்து வந்தனர்.  இருந்தாலும் இரண்டு பிரிவுகளுக்கிடையே பதற்றம் இருக்கவே செய்தது.  
ஒருநாள் இரு பிரிவினரும் மதுவின் மயக்கத்தில் தங்கள் மனைவியரின்  குணநலன்களை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்போது லூக்ரஷியாவின் கணவன் அவளைப் பற்றி பெருமிதமாகப் புகழ்ந்து பேசினான்.  அங்கிருந்தவர்கள் அவள் என்ன செய்கிறாள் என்று அறிந்து வருவதற்காக ஆட்களை அனுப்பினார்கள்.  அவளோ அன்று இரவு நெசவு செய்து கொண்டு பணியாளர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.  மன்னனின் மகன் டார்க்கின் என்பவன் அந்த மது விருந்தில் மையமாக இருந்தான்.  அவனுக்கு லூக்ரஷியா மீது பித்தம் தலைக்கேறியது.  அவள் தனியாக இருக்கும் போது அவளை நெருங்கி, ""என்னோடு வந்துவிடு. உன்னை ராணியாக்குகிறேன். இல்லாவிட்டால் உன்னைச் சிதைத்து கொன்று நீயும் உன் பணியாளர்களும் தவறாக நடந்து கொண்டதாக வதந்தியைப் பரப்பி உன் பெயரையும் களங்கப்படுத்திவிடுவேன்'' என்று அச்சுறுத்தினான்.  பெயர் பாழாகக் கூடாது என அவள் பணிந்தாள்.  
லூக்ரஷியா கறுப்பு உடையணிந்து எல்லாரையும் மறுநாள் அழைத்து அவளுக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்ன பிறகு பிச்சுவாவால் தன்னைத் தானே குத்திக் கொண்டு இறந்து போனாள்.  மக்கள் திரண்டனர்.  கொதித்தெழுந்தனர்.  அவள் சடலத்தை எடுத்துக் கொண்டு சாரை சாரையாய் அணிவகுத்தனர்.  அவர்களை ஆண்ட ஈட்ரஸ்கன் வம்சத்தை சின்னாபின்னமாக்கி சுயாட்சியைப் பெற்றனர். இப்படித்தான் ரோமாபுரியின் தன்னாட்சி மலர்ந்தது.  இதை வைத்து நீண்ட கவிதையையே ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்.  
உலகம் எங்கும் பதினைந்திலிருந்து நாற்பத்து நான்கு  வயது வரையுள்ள ஆணும் பெண்ணும் போரில் இறப்பதைவிட தற்கொலையால் அதிகம் மாண்டுபோகிறார்கள்.  
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை விகிதாச்சாரம் 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.  உண்மையில் தற்கொலை செய்தவர்களைவிட அவர்களுடைய குடும்பத்தினர்களும், நண்பர்களும், அவர்களை நம்பி இருப்பவர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.  அவர்களே பல்வேறு இடங்களில் அவமானப்பட்டு குற்றவாளிகளைப் போல குறுகி நிற்கிறார்கள்.
ஒரு தற்கொலை நடக்கும்போது சங்கிலித்தொடராக பல தற்கொலைகள் நிகழத் தொடங்குகின்றன.  பலியானவரோடு தொடர்புப்படுத்தி உயிரை விடுபவர்கள் இருக்கிறார்கள்.  புகழ்வாய்ந்தவரின் தற்கொலை வரிசையாய்ப் பல உயிர்களைச் சாய்த்துவிடுகிறது.  
மிக வளமான எதிர்காலம் ஒன்றை அவசர முடிவில் இவர்கள் தொலைத்துவிடுகிறார்கள்.  சோர்வும், சலிப்பும், தோல்வியும் ஏற்படும்போது அது நிரந்தரம் என நினைத்து முடிவெடுத்து விடுகிறார்கள்.  வைராக்கியத்துடன் எப்பேர்ப்பட்ட சோதனையையும் சந்திக்க முடியாதவர்கள் சிரமமான பகுதிகள் வருகிற போது மனம் தளர்ந்து சாகசப் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.  சரித்திரம் உச்சி வரை சென்றவர்களை அல்ல, உச்சிக்குச் சென்றவர்களைத்தான் உதாரண  புருஷர்களாக்குகிறது. 
(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com