3. சாம்சனின் கதை! 

இருபது ஆண்டுகள் அவன் இஸ்ரேலை ஆண்டான்.  டெலிலா என்கிற பெண்ணின் அழகில் அவன் வீழ்ந்தான். அவளோ ஃபிலிஸ்டின் காரிகை.  அவள் பலவீனத்தைச் சொல்லும்படி அவனை நச்சரிக்கிறாள்.
3. சாம்சனின் கதை! 
Updated on
2 min read

பழைய ஏற்பாட்டில் வரும் சாம்சனின் வரலாறு சுவாரசியமானது.  அவன் கருவில் இருக்கும்போதே ஒரு தேவதை அவன் தாயைச் சந்தித்து நாசரத் விரதங்களை அவள் மகன் கடைப்பிடித்தால் அசாத்தியமான பலத்துடன் அவன் திகழ்வான் என்று சேதி சொன்னது.  மதுவை முற்றிலுமாக தவிர்த்தலும், முடியை கத்திரிக்காமல் வளர்த்தலும் அதில்  சில நியமங்கள். அப்போது இஸ்ரேல்  ஃபிலிஸ்டின்களால் ஆதிக்கம் செய்யப்பட்ட இடம்.

சாம்சன் வளர்ந்ததும் அசுர பலத்துடன் திகழ்ந்தான்.  கழுதையின் தாடை எலும்பின் துணை கொண்டு ஆயுதம் தாங்கிய சிப்பாய்களைக்  கொன்று தீர்த்தான். அவனைத் தாக்க வந்த சிங்கத்தை வெறும் கைகளால்  வீழ்த்தினான்.  

திருமணத்திற்குச்  செல்வதற்கு முன்பு இறந்த சிங்கம் ஒன்றைக் கண்டான். அதன் விலா எலும்பில் தேன் கூடு ஒன்று இருந்தது. அதிலிருந்த தேனை எடுத்துக் கொண்டு எதிர்கால சம்பந்தக்காரர்களிடம் விடுகதை ஒன்றை விடுத்தான். ""எல்லாவற்றையும் தின்பவற்றிடமிருந்து தின்பதற்கொன்று: வலிமையான ஒன்றிடமிருந்து இனிப்பான ஒன்று'' என்று அவன் சொன்ன விடுகதையால் எழுந்த சிக்கலில் இரத்த ஆறு ஓடியது.  

இருபது ஆண்டுகள் அவன் இஸ்ரேலை ஆண்டான். டெலிலா என்கிற பெண்ணின் அழகில் அவன் வீழ்ந்தான். அவளோ ஃபிலிஸ்டின் காரிகை.  அவள் பலவீனத்தைச் சொல்லும்படி அவனை நச்சரிக்கிறாள். அழகின் மயக்கத்தில் அவன் அசைந்து கொடுக்கிறான்.  தன் சிகையைக் கத்திரித்தால் வலிமை சிதையும் எனச் செப்புகிறான்.  அவள் அவனுக்குத்  துரோகம் செய்து அவன் தூங்குகிற போது தலையை மழுங்கச் சிரைக்கிறாள். எதிரிகள் அவனைப்  பிடித்து கண்களைக் குருடாக்கி விடுகிறார்கள். 

சங்கிலியால் பிணைத்து எருதைப் போல் செக்கிழுக்கச் செய்கிறார்கள். அவர்களின் கோயிலில் அவனை வீழ்த்திய வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.  அதற்குள் சாம்சனின் தலைமுடி கொஞ்சம் வளர்ந்து விடுகிறது.  அவன் இழந்த பலம் திரும்புகிறது. 

சாம்சனோ அடிமைத் தளையிலிருந்து விடுபட விண்ணப்பம் வைக்காமல் இறுதியாக அத்தனை சக்தியும் வெளிப்பட வேண்டும் என்றும் அந்தக் கோயிலின் கூரையை இழுத்து எத்தனை எதிரிகளைக் கொல்ல முடியுமோ அத்தனைப் பேரைக் கொல்ல வேண்டும் என்றும் இறைவனிடம்  வேண்டுகிறான்.  அவனும் அந்த மக்கள் திரளோடு மடிகிறான்.  

பழைய ஏற்பாட்டில் தோற்கடிக்கப்பட்ட சால், அவனுடைய வாளில் விழுந்து இறக்கிறான்.  யோபின் மனைவி செல்வத்தையெல்லாம் இழந்த யோபைப் பார்த்து கடவுளை சபித்து இறந்துவிடு என்று வலியுறுத்துகிறாள்.  

புராதனக்  கதைகளில் இழப்பால் தற்கொலை,அவமானத்தால் தற்கொலை, காதல் தோல்வியால் தற்கொலை, அடுத்தவர்க்கு நன்மை புரியும் நோக்கில் தற்கொலை என நான்கு விதமாக அது நியாயப்படுத்தப்பட்டது. பிளாட்டோ நல்ல காரியத்திற்காக தற்கொலை செய்வதைப்  புகழ்ந்து பேசியும், பலவீனமானவர்கள் வாழ்க்கையைச் சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதைக் கண்டித்துப் பேசியும், அவற்றின் தராதரத்தை வகைப்படுத்துகிறார்.  சாக்ரடிஸ் உண்மையின் நோக்கில் பலவந்தமாக நஞ்சு அருந்தி சாகடிக்கப்பட்டதும், பிளாட்டோவின் இந்த கூற்றுக்கு அடித்தளம்.  அவரது சீடர்கள் சிறையை விட்டு  தப்பித்துச் செல்ல ஏற்பாடுகள் செய்த போதும் அவர் அதை ஏற்கவில்லை.  

அவமானத்திற்கு எடுத்துக்காட்டு ஸ்பிங்க்ஸ் என்கிற சோஃபகல்ஸ் எழுதிய ஈடிப்பஸ் நாடகத்தின் புனை உருவம். அது புதிருக்கான விடை சொல்லப்பட்டதும் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறது.  புதிர் மிகவும் எளிது. "எந்த உயிர் நான்கு கால்களிலும் மூன்று கால்களிலும் இரண்டு கால்களிலும் நடக்கிறது? குறைவான கால்களில் நடக்கும்போது அதிக பலத்தோடு திகழ்கிறது?  இதற்கான விடை மனிதன்'' என்று ஈடிப்பஸ் கூறியதும் நிகழ்ந்த தற்கொலை இது. கையாலாகாதவர்கள்தான் கைத்தடி வைத்திருப்பார்கள்.  

சைரன்களின் இனிய இசையைக் கேட்கும் அவாவில் கப்பல்கள் கடற்பாறைகளின் மீது மோதி, மாலுமிகளோடு மூழ்கிவிடுவது  உண்டு.  ஆனால் யுலிஸஸ் அவன் கப்பலில் பயணம் செய்த அத்தனை மாலுமிகளின் காதுகளையும் மெழுகால் அடைத்துவிட்டு அவன் மட்டும் தன்னை கட்டிப் போடச் செய்து இசையையும் நுகர்கிறான், கப்பலைக் காப்பாற்றுகிறான்.  யுலிஸஸ் வெற்றிகரமாகத்  தங்களை கடந்து போனதைப் பார்த்த சைரன்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றன. இதுபோல கிரேக்கத்து புனைவுகளில் பல்வேறுவிதமாகத்  தற்கொலைகள் பதிவாகி இருக்கின்றன. 

தமிழ்மரபிலும் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களை உயர்த்திச் சொல்லும் வழக்கம் இருந்தது.  "இளிவரின் வாழாத மானமுடையார்' என திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார்.  கரிகாலனோடு போர்புரிந்து தோற்றுப்போன பெருஞ்சேரலாதன் மார்பின் வழியாக பாய்ந்த வேல் முதுகின் வழியாக வெளிப்பட்டதைப்  புறமுதுகு காட்டியதாக எண்ணி நாணி வடக்கிருந்ததை வெண்ணிக்குயத்தியார் என்கிற புலவர் புகழ்ந்து பாடுகிறார். 

நின்னினும் நல்லன் அன்றே 
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே? 

பைந்தமிழ் நாட்டில் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் என்று மானமுள்ள மனிதர்கள் உயிரை அர்ப்பணிப்பதைச் சிலாகித்துப் பேசும் வழக்கம் இருந்தது. உயிர் ஒரு பொருட்டல்ல என்கிற கருத்து, போரும் படையெடுப்பும் சகஜமாக இருந்தபோது, மக்களிடம் வீரத்தை ஊட்டும்பொருட்டு வலியுறுத்தப்பட்டிருந்தது. 

மனித வாழ்வு உறுதியற்ற சூழலில் ஒரு கட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. பாதுகாப்பான வாழ்க்கையும் உயிர் வாழ்வதற்கான வலுவான காரணங்களும் அதிகரித்திருக்கின்றன. 

ஆங்கில இலக்கியத்தில் அடிக்கடி கூறப்படும் வாசகம் ஒன்று உண்டு.  "கீட்ஸ் அற்ப ஆயுளில்  மறையாமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை மகத்தான கவிதைகள் கிடைத்திருக்கும்?' அதைப்போலத்தான் பாரதி நெடுநாள் வாழ்ந்திருந்தால், விவேகானந்தர் பல ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு பெரிய சாதனைகள்  நிகழ்ந்திருக்கும்? என்று எண்ணி நாம் ஏக்கப் பெருமூச்சு விடாத நாள் இல்லை.  

வாழ முடிந்தவரை இந்த மண்ணில் போராடுவதும், முடிந்த அளவு புன்னகையைப் பரப்புவதுமே ஆற்றல் உள்ள இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பணி. 


- தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com