பத்தாண்டுகள் பத்திரம்!

தவறான சிநேகிதத்தில் மாட்டிக் கொண்ட அந்த நண்பர் அனைத்தையும் இழந்தார். ஒரு தேர்வைக்கூட உருப்படியாக எழுதவில்லை. படிப்பு பாதியில் நின்றது. உடல்நலம் குன்றியது. வியாதிகளில் சிக்கிக் கொண்டார்.
பத்தாண்டுகள் பத்திரம்!
Published on
Updated on
3 min read

உச்சியிலிருந்து தொடங்கு-27

"மனவியல் இன்று' என்கிற இதழில் மகத்தான கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆய்வுசெய்து எழுதப்பட்ட கட்டுரையில் நம் வாழ்க்கையை பத்தாண்டுகள் மட்டுமே நிர்ணயிக்கின்றன என்கிற நுட்பமான தகவல் வெளியாகியிருக்கிறது. 

மனிதனின் வாழ்க்கையை, அவன் முன்னேற்றத்தை, மகிழ்ச்சியை, சாதனைகளை, நிம்மதியை பத்தாண்டுகளே தீர்மானிக்கின்றன. பதினெட்டு வயதிலிருந்து இருபத்தியேழு வயது வரை உள்ள காலமே அந்த முக்கியமான பருவம். எந்த மனிதனை எடுத்துக் கொண்டாலும் அவனுடைய உயர்விலும் தாழ்விலும் இந்த ஆண்டுகளே முக்கியப் பங்கு வகித்திருப்பதைப் பார்க்கலாம். 

என்னுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவர். மேனிலை வகுப்பு வரை மிகச் சிறப்பாகப் படித்தவர். கல்லூரியில் நுழைந்ததும் தகாத சிநேகிதத்தில் விழுந்தார். எந்த மாணவர்கள் மிகவும் போர்த்திப் போர்த்தி வளர்க்கப்படுகிறார்களோ, அவர்களே விரைவில் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். அடக்கி வைக்கப்பட்ட நாயை அவிழ்த்து விட்டால் அது தறிகெட்டு ஓடுவதைப்போல அவர்கள் மனமும் கட்டுக்கடங்காமல் திரிய ஆரம்பித்துவிடுகிறது. எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கலாம் என்கிற நப்பாசை அவர்களுக்கு ஏற்படுகிறது. தீய பழக்கங்களைச் செய்தால் முரட்டு மாணவர்கள் வட்டத்தில் இணைய முடியும் என்கிற எண்ணமும் இவர்களை இயக்குகிறது. முதிர்ந்த மாணவராக காட்டிக் கொள்ள விரும்பி இந்தப் பூனைகள் போட்டுக் கொள்ளும் சூடு இது. 

தவறான சிநேகிதத்தில் மாட்டிக் கொண்ட அந்த நண்பர் அனைத்தையும் இழந்தார். ஒரு தேர்வைக்கூட உருப்படியாக எழுதவில்லை. படிப்பு பாதியில் நின்றது. உடல்நலம் குன்றியது. வியாதிகளில் சிக்கிக் கொண்டார். அவருடைய புத்திசாலித்தனம், கடின உழைப்பு அனைத்தும் பறிபோயின. அதற்குப் பிறகு அவரால் மீள முடியவில்லை.

இந்தப் பத்தாண்டுகளில் ஒருவர் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார், எப்படிப்பட்ட நண்பர்களோடு பழகுகிறார், எதுபோன்ற புத்தகங்களை வாசிக்கிறார், எதுமாதிரி லட்சியங்களை வளர்த்துக் கொள்கிறார், எந்தக் குறிக்கோளை நோக்கிப் பயணிக்கிறார், எது அவருடைய ரசனையாக இருக்கிறது என்பனவற்றைப் பொருத்தே அவருடைய வெற்றியும், பங்களிப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. 

இந்தப் பருவத்தில் மட்டுமே ஒருவருடைய பணியும், வாழ்க்கைத் துணையும் தீர்மானிக்கப்படுகின்றன. படிப்புக்கேற்ற பணி என்பது சிலவற்றில் இருந்தாலும், அவற்றை அடைய இந்தப் பருவத்தில் காட்டும் வைராக்கியமே முக்கியம். நல்ல மதிப்பெண்களோடு தொழில் கல்வியில் சேர்ந்த மாணவர்கள் சிலர் அதற்குப் பிறகு நன்றாகப் படிக்காமல் உரிய பணியைத் தவறவிடுவதைப் பார்க்கலாம். பள்ளி வரை சுமாராகப் படித்து கல்லூரியில் ஆழமாகவும், அழுத்தமாகவும் முயற்சிகள் மேற்கொண்டு வாழ்க்கையைச் செவ்வனே அமைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. 

இந்தப் பத்தாண்டுகளை பிசிறு தட்டாமல் ஒழுங்காக நிர்வகிக்கக் கூடியவர் மதிக்கத் தகுந்த மனிதராக மாறுகிறார். அதற்குக் கடுமையான உழைப்பும், தெளிவான பார்வையும் தேவை. ஒரு நொடியைக் கூட வீணடிக்காமல் உயர்ந்தவற்றில் மட்டும் விருப்பத்தைச் செலுத்தி உழைப்பவர்களுக்கு வெற்றி சாத்தியம். இவை தீய பழக்கங்களுக்கும், வெற்றுக் கேளிக்கைகளுக்குமான காலகட்டம் அல்ல. 

சில மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்ததும் எவற்றையெல்லாம் கூடுதலாகப் படிக்கலாம் எனத் துப்பறிந்து அவற்றை கற்றுக் கொள்ள முயல்வார்கள். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசப் பயில்வார்கள். கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் உச்சாணிக்கொம்பிற்குப் போய்விடுவார்கள். அவர்களோடு பழகியவர்களும் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். 

கல்லூரியில் பழகுகிற நண்பர்கள் நம்முடைய எதிர்காலத்தையே வடிவமைக்கிறார்கள். அப்போது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், உருப்படியாகவும் இருக்கிற நண்பர்கள் கிடைத்தால், அதற்குப் பிறகு எல்லா காலகட்டங்களிலும் துணிச்சலாக ஒருவர் சவால்களை எதிர்கொள்கிறார். அவர் சுருங்கிப்போவதில்லை. 

ஒருவர் எவ்வளவு சாமர்த்தியமாக அதற்குப் பின்னால் வாழ நேர்ந்தாலும், அது அஸ்திவாரமில்லாத கட்டடமாக ஆட்டம் கொள்கிறது. இந்தப் பருவத்தில் தனிமையில் இருப்பவர்கள் பழகத் தெரியாதவர்களாகச் சூம்பி விடுகிறார்கள். பெரும்பான்மையான மாணவர்கள் சிலரோடு மட்டுமே சேர்ந்து, செய்முறை வகுப்புகளில் ஈடுபட விரும்புவார்கள். அதற்குக் காரணம், அவர்கள் பழகும் தன்மை. மற்றவர்களை ஆசுவாசப்படுத்தி அவர்கள் பதற்றத்தைத் தணித்து நம்பிக்கையை ஊட்டுபவர்களையே எல்லாரும் நாடுவார்கள். 

இந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் வாழ்நாள் முழுவதும் வழித்துணையாக வருவார்கள். நம் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளில் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். நாம் சோர்ந்து இருக்கிறபோது கைப்பிடித்து தூக்கி விடுவார்கள். பாதை தவறினாலும் எச்சரித்து நல்ல நிலைக்கு உயர்த்துவார்கள். 

இந்தப் பத்தாண்டில் வளர்த்துக் கொள்ளும் விழுமியங்கள் ஊன்றுகோலாக இருந்து உதவுகின்றன. கட்டுப்பாட்டோடு இந்தப் பருவத்தைக் கடந்துவிட்டால் பிறகு எந்த வேண்டாத செயலிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாகாது. நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்தக் காலகட்டம் திடப்படுத்துகிறது. 

யாருடனும் பழகாமல், சின்னத் தடைகளுக்கே சுருங்கிப் போகிறவர்கள் வேலைக்குப் போகிறபோதோ, நேர்காணலுக்குப் போகிறபோதோ தோல்வி ஏற்பட்டால் எதிர்மறையாக எண்ணத் தொடங்குவார்கள். புலி தன்னை நாயாக நினைத்துக் கொண்டால் வெகு விரைவில் குரைக்கத் தொடங்கிவிடும் என்கிற பிக்மேலியன் விதி இவர்களை வசப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தச் சரிவை ஈடுகட்ட எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியாமல் தவறான பழக்கங்களை இவர்கள் மேற்கொள்வதும் உண்டு. அல்லது, மனம் பிசகி பாதிக்கப்படுவதும் உண்டு. எதிர்பார்க்காதது எதுவுமே நடக்காது என்று அவர்கள் முடிவு செய்வதால் அடுத்த முயற்சிகளில் எல்லாம் சறுக்கி விழுவார்கள். நண்பர்களுடைய சின்ன கேலியில் சிடுமூஞ்சியாக மாறுகிறவர்கள் எதிர்காலத்தில் எதற்கெடுத்தாலும் புறமுதுகு காட்டி ஓடுபவர்களாக இருப்பார்களே தவிர, புறநானூறு கூறும் வீரர்களாக இருக்க மாட்டார்கள். 

எதிர்மறையாக இருப்பவர்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது விளங்காது என்பதை கஃபூர்  குல்யாமின் எழுதிய "குறும்பன்' என்கிற ரஷ்ய நாவல் சுட்டிக்காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களோடு சேர்பவர்களும் அவர்களுடைய அதிர்ஷ்டத்தைத் தொலைத்துவிடுவார்கள், அவர்களும் இக்கட்டில் மாட்டிக் கொள்வார்கள் என்பது அந்தக் கதையின் கருத்து. 

இந்த பத்தாண்டு காலத்தில் உலகை நம்பிக்கையோடு பார்க்கிறவர்கள், நமக்கு நண்பர்களாகக் கிடைத்தால் நாம் நமக்கு உகந்த படிப்பைத் தேர்ந்தெடுப்போம். நம்மை வளர்த்துக் கொள்ளக் கூடிய புத்தகங்கள் அவர்களால் அறிமுகப்படுத்தப்படும். உலக சினிமாவை அவர்கள் நமக்கு புரிய வைப்பார்கள். வாழ்க்கைத் திறன்கள் அவர்களால் செம்மைப்படுத்தப்படும். நமக்கான பிரபஞ்சப் பார்வையை அவர்கள் விரிவுபடுத்துவார்கள். சின்னச் சின்ன செயல்களைக்கூட அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டு மேன்மையடைவோம். நம்முடைய ரசனையை அவர்கள் வளமையாக்குவார்கள். இவற்றில் நம்முடைய பங்களிப்பும் அவர்களுக்கு இருக்கும். நாமும் ஏதேனும் அவர்களுக்குத் தர வேண்டுமே என்கிற அவாவில் முயற்சி செய்து சிலவற்றை சுயமாக அறிந்து கொள்வோம். இந்தப் பரஸ்பரப் புரிதல் உயர்ந்த லட்சியத்தை நாம் உள்வாங்க உதவியாக இருக்கும்,

இந்தப் பருவத்தில் நம்முடைய துணிச்சலும் வளர்கிறது. வலிகளைத் தாங்கும், பிரச்னைகளைச் சமாளிக்கும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள் விரக்தியடைய மாட்டார்கள். வாழ்வை முடித்துக் கொள்வதே வழி என எண்ண மாட்டார்கள். 

ஒவ்வொரு செடிக்கும் முக்கியமான ஒரு பருவம் இருக்கிறது. அதில் நீர் பாய்ச்சாவிட்டால் கதிர்கள் விளையாது. அதைப்போலவே, மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான இந்தக் காலகட்டத்தில் உரிய சூழலை உருவாக்குவதற்கு பெற்றோர்களும் பிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இன்று  நாம் கொண்டாடுகிற உலகத் தலைவர்கள் அனைவருமே இந்தப் பத்தாண்டுகளை சிறிதும் வீணடிக்காமல் பயன்படுத்தியவர்கள். அப்போது அவர்கள் ஒரு முக்கிய முடிவெடுத்தார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும், எவ்வாறு நினைவுகொள்ளப்பட வேண்டும் என்பதை நோக்கியே பயணம் இருக்க வேண்டும் என்னும் அந்த உறுதியான மனநிலை அவர்களை உந்தித் தள்ளியது. அதற்குப் பிறகு எத்தனையோ அவமானங்களையும், அவதூறுகளையும், தண்டனைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தாலும் அவற்றை புறங்கையால் தள்ளும் வைராக்கியம் அந்தப் பத்தாண்டுகளால் ஏற்பட்டது. அவர்கள் அதற்காக ஓடி ஒதுங்கவும் இல்லை, கூடி ஒப்பாரி வைக்கவும் இல்லை. 

நாம் இந்தப் பத்தாண்டுகளை முறையாகத் திட்டமிட்டு விழிப்புணர்வுடன் அடியெடுத்து வைத்து அவற்றைப் பிழிந்து அனுபவித்தால், துயரங்கள்கூட உயரங்கள் நோக்கி நீளும் கைகளாய் நமக்குத் தோன்றும்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com