பார்வை... பாவையான கதை!

பார்வை... பாவையான கதை!

தோன்றல், திரிதல், கெடுதல் எனும் இலக்கண விதிப்படி நீங்கள் பாடியிருக்கிறீர்கள்'' என்று அந்தத் தமிழாசிரியர் சொல்ல, கண்ணதாசனே அசந்து போனாராம்.

உன்னோடு போட்டிபோடு! - 26

இரவு நேரத்தில் ஆகாயமெங்கும் நட்சத்திரங்கள் மினுமினுக்கின்றன என்று நான் சொல்லிக் கொண்டு வரும்போது, "கடல் மேலே மீன் பிடிக்க நான் வலையோடு வந்தபோது'' என்ற ஒரு பாட்டு கடல் பகுதியில் மீன்பிடி படகிலிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு எங்கள் காதுகளில் தேனாய் நுழைந்தது. நாங்கள் அந்தத் திசை நோக்கிப் பார்த்தோம். 
 மீன் பிடிப்படகுகள் அணிவகுத்துச் செல்ல அவற்றில் இருந்த மீனவர்களுடைய உற்சாகமான "ஐலசா' எனும் பின்பாட்டு ஓசை அந்தப் பகுதிக்கு ஓர் 
உயிரோட்டத்தைக் கொடுத்தது. 
"ஐயா, இது தினம் நடக்கிற வேலதான் அவுக வேலைக்கு அவுக போறாக நீங்க உங்க பாட்டோட அர்த்தத்த சொல்லுங்க'' என்று ஒரு பெரியவர் எனக்கு நினைவூட்டினார். 
"நன்றி ஐயா'' என்று நான் சொல்லிவிட்டு, "ஆகாயத்தில் நட்சத்திரங்கள் வரிசை வரிசையாய் காட்சித் தருகின்றன. அவை காட்டில் மலர்ந்த முல்லை மலர்களைப் போல ஒளி வீசுகின்றன. வேனிலானாகிய மன்மதனுக்கு விழா எடுக்கும்போது அவ்விழாவில் வெள்ளிக்கும்பத்தால் அவனை வரவேற்பதைப் போல ஆகாயத்தில் கிழக்கு திசையில் நிலவு ஒளிவீசுகின்றது'' என அந்த பாடலுக்கான பொருளை விளக்கிச் சொன்னேன். கேட்டவர்களுக்கெல்லாம் உள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றியதோ, என்னவோ ஒவ்வொருவரும் நிலவைப் பற்றி சொல்லத் தொடங்கிவிட்டார்கள். 
"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை என்பது நம் பாவேந்தர் பாடலல்லவா?'' என்று தமிழ்மணி கேட்க 
"அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா'' என்று ஒருவர் கண்ணதாசன் பாட்டைச் சொல்ல 
உடனே நம் மீசைக்காரரும், "ஆடைகட்டி வந்த நிலவோ, நெஞ்சில் கூடு கட்டி ஆடும் குயிலோ  என்று எங்கள் பொதுவுடமைக் கவிஞனாகிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நிலவுக்குக் கூட ஆடை கட்டிப் பார்த்திருக்கிறான்'' என்று மீசையை முறுக்கியபடி பெருமிதமாகச் சொன்னார். 
"அது சரிதான். ஆனா குயிலுக்குத்தான் கூடுகட்டத் தெரியாதே, காக்கா கூட்டுலதானே முட்டையிடும்?'' என்று ஒருவர் எதிர்கேள்வி கேட்க, 
"கோட்டையிலே ஒரு ஆலமரம். அதில் கூடுகட்டும் ஒரு மாடப்புறா அப்படின்னு கண்ணதாசன் எழுதியிருப்பாரு, மாடப்புறா எப்படி ஆலமரத்துல கூடுகட்டும்ன்னு கேட்கறதா?''
என்று இன்னொருவர் கேட்க, நான் இடையிலே புகுந்து இரண்டு பேரையும் சமாதானம் செய்தபடி,
"ஐயா, நாங்கள் இலக்கிய வரிகளை சொல்லிக்கொண்டு வந்தோம். நீங்கள் சொல்கிற சினிமாப் பாடல்களில் கதைக்கு ஏற்ப, கதாபாத்திரங்களுக்கேற்ப  பாட்டை அமைக்க  வேண்டிய சூழல் வரும். அதனால் சினிமாக் கவிஞர்கள் அப்படிப் பாடியிருப்பார்கள். இருந்தாலும் இப்படி பேச்சுக்குப் பேச்சு உடனுக்குடன் இவ்வளவு வேகமாக வழக்கு மன்றங்களிலும், பட்டிமன்றங்களிலும் கூட அறிஞர்கள் பேச முடியாது போலிருக்கிறது'' என்றேன் நான் அவர்களிடம் ஆச்சரியத்துடன்.
"அதுதானே ஐயா... நம் தமிழ்மொழிக்குப் பெருமை'' என்று தமிழ்மணி சொல்லிவிட்டு, "ஐயா, அப்போதே கேட்க வேண்டுமென்றிருந்தேன் கவியரசு கண்ணதாசனைப் பார்க்க ஒரு தமிழாசிரியர் மாலையோடு வந்ததாகச் சொன்னீர்களே, நான் கூட இரவில் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேனே அதை இப்போது சொல்லுங்களேன், அது என்ன நிகழ்ச்சி?''
என்று கேட்டார். 
"பார்த்தீர்களா ஐயா, நாம் மறந்துப்போன செய்திகளைக் கூட நம்மோடு இருப்பவர்கள் நினைவூட்டினால்தான் நம்மால் நினைவு கொள்ள முடிகிறது. அதனால்தான் நண்பர்களோடு, குடும்பத்தாரோடு, அறிஞர்களோடு நாம் உரையாடிக் கொண்டேயிருக்க வேண்டும்'' என்றேன் நான். 
"ஆமாம் ஐயா, இந்த காலத்து இளைஞர்கள், பெண்கள், ஏன் குழந்தைகள் கூட ஒருவரோடு ஒருவர் பேசத் தயங்குகிறார்கள். பேச்சு வார்த்தைகளெல்லாம் நின்றுபோய்விடுமோ? என்று பயமாக இருக்கிறது. உரையாடல் என்பது ஒரு கலை. அதிலும் எதிர்த்தும், மறுத்தும், ஆமோதித்தும், ஆதரித்தும், உடன்பட்டும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்.  செல்போனும், வாட்ஸ்-அப்பும், பேஸ்-புக்கும் இந்த உரையாடல் கலையை அழித்துவிட்டதோ என்று பயமாக இருக்கிறது'' என்றார் கவலையோடு தமிழய்யா.
"நோ, நோ யு ஆர் ராங்''  என்று வேகமாக மறுத்த ஹெட்போன் பாட்டி, "உங்க உரையாடல், நம்ம உரையாடல், நம்ம வீட்ல, தெருவுல, ஹோட்டல்ல, ரயில்ல, கார்ல இருந்திருக்கிலாம். ஆனா, என் பேத்தி ஜஸ்ட் பிபோர் அவ பேரண்ட்ஸோட அமெரிக்காவுக்கு ஸ்கைப்ல பேசினா. இங்க எடுத்த போட்டோசை வேல்டு ஃபுல்லா ஷேர் பண்ணிட்டா. இன்னிக்கும், பேஸ்-புக்குல, ட்விட்டர்ல உரையாடல் நடந்துகிட்டுதான் இருக்கு. காலம் மாறியிருக்கு, களமும் மாறியிருக்கு'' என்று சொல்ல அங்கிருந்த இளைஞர்கள் கைதட்டினார்கள். 
"ஐயா, கண்ணதாசன்கிட்ட ஒருத்தர் மாலையோட போனார்னு மாலையிலிருந்து பேசிக்கிட்டே இருக்கோம். ராத்திரி ஆகி நிலாவும் வந்துடுச்சு, அந்த மாலை வாடிடப் போகுதய்யா, அதச் சொல்லி முடிங்கய்யா'' என்றொருவர் ஆதங்கப்பட்டார். 
"உண்மை தானேய்யா, சொல்ல வர்ற சேதிய அதே வேகத்தோட சொன்னாத்தான் சுவாரசியம் இருக்கும். ஒரு பாட்டு எழுதின கவிஞரே வியக்கும் அளவுக்கு அதன் உட்பொருளை ரசிகன், விமர்சகன் தன் பார்வையில் பார்த்து மகிழ்வான். அதுதான் உலக வழக்கம்'' என்று சொல்லிவிட்டு, 
"என்ன பார்வை உந்தன் பார்வை, 
இடை மெலிந்தாள் இந்தப் பாவை''
எனும் திரைப்படப் பாடலை நான் கூற, 
"காதலிக்க நேரமில்லை' படத்தில வந்த இந்த பாட்டு முழுவதும் எனக்குத் தெரியுமே 1964 ல எங்க மேரேஜ் முடிஞ்சவுடனே நானும், என் ஹஸ்பண்டும் பார்த்த மொதப் படமே இந்தப் படம்தான். இதுவரைக்கும் டிவண்ட்டி டைம்ஸ் பாத்துருக்கேன்'' என்று ஹெட்போன் பாட்டி மகிழ்ச்சியோடு சொல்ல, "நானும்தான்'' என்று அந்த பேத்தியும் ஆமோதித்தது. 
"சரி இந்தப் பாட்டுக்கென்ன நல்லாத்தானேயிருக்கு? இதுக்கெல்லாம் மாலை போடறதாயிருந்தா, கண்ணதாசனுடைய எல்லா பாட்டுக்கும் மாலை போட்டுக்கிட்டேயிருக்கணும். மாலையிட்ட மங்கை படத்தை எடுத்தவரே அவர்தானே?'' என்று ஹெட்போன் பாட்டி விடாமல் கேட்டார். 
"இந்தப் பாட்டைக் கேட்ட அந்தத் தமிழாசிரியர் கண்ணதாசனுக்கு மாலைபோட்டு கவிஞரையா நாங்களும் எவ்வளவோ இலக்கணங்கள சொல்லித் தர்றோம், ஆனா உங்கள மாதிரி பாட்டுல சொல்லித் தந்தவங்க யாருமில்ல  என்றாராம். திகைத்துப்போன கவியரசு கண்ணதாசன்,  "நான் இதுல என்ன இலக்கணம் சொல்லியிருக்கிறேன்?'  என்று கேட்டாராம்.
 "என்ன பார்வை, உந்தன் பார்வை 
இந்த முதல் வரியில் பார்வை என்ற சொல்லில் இடையின ர கரம் இருக்கிறது. 
அடுத்தவரியில் இடைமெலிந்தாள் இந்தப்பாவை எனும்போது இடையின "ர' கரமாகிய ர கெட்டுப்போனால், அதாவது மெலிந்தாள் "பார்வை' - "பாவை' யாக மாறும் எனும் இலக்கணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 
தோன்றல், திரிதல், கெடுதல் எனும் இலக்கண விதிப்படி நீங்கள் பாடியிருக்கிறீர்கள்'' என்று அந்தத் தமிழாசிரியர் சொல்ல, கண்ணதாசனே அசந்து போனாராம். உண்மையில் அவர் அப்படி நினைத்து எழுதினாரா என்பது தெரியவில்லை. படைப்பாளியை மீறித் திறனாய்வாளன் சிந்திப்பதுதான் சிந்தனையின் வளர்ச்சி'   என்று நான் முடித்தேன். 
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பலபேர் சிரித்து மகிழ்ந்ததோடு நம் தமிழய்யாவையும் சந்தோஷத்தோடு பார்த்தார்கள். 
"இரவு உணவை இப்படியே சாப்பிடத் தொடங்கலாமா அல்லது? '' என்று தமிழ்மணி இழுக்க, "அங்கிள், கேம்பயர் என்று சொன்னீர்களே... அது இல்லையா?'' என்று பேத்தி கேட்க, "அதோ, அங்கே பாருங்கள்'' என்று தமிழ்மணி சொல்ல, நாங்கள் பார்த்த இடத்தில் கடற்கரை மணலில்  நெருப்பு மூட்டப்பட்டு சுற்றிலும் ஆட்கள் பரபரப்பாய் வேலை செய்து கொண்டிருந்தார்கள். "அங்கே தான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், உணவு எல்லாம்'' என்றார் தமிழ்மணி. 
"அடடே... ஒளியும், ஒலியும் பார்த்து எவ்வளவு நாளாச்சு? இப்ப பார்க்கப் போறோம்'' என்று ஹெட்போன் பாட்டி சொல்ல, "அதுவும் லைவ் ரிலே'' என்று பேத்தி கைதட்ட, தப்போசை அதிரத் தொடங்க, நாங்கள் அத்தனை பேரும் அந்த இடம் நோக்கி நடந்தோம். நிலவு வெளிச்சம் எங்களைப் பின் தொடர்ந்தது. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com