வீட்டுவரியும்... பாட்டுவரியும்!

பாடலைப் பாடியவர் பத்மஸ்ரீ கமலஹாசன், இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா என்று ஆளாளுக்குச் சொல்ல, "பாடலை எழுதியவர்கள் என்று சொன்னீர்களே,  இரண்டு பேரா எழுதினார்கள்'' என்று தமிழ்மணி கேட்டார். 
வீட்டுவரியும்... பாட்டுவரியும்!

உன்னோடு போட்டிபோடு! - 41

"விருமாண்டி'  படத்தில் "ஆறாக நீ ஓட ஒதவாக்கர நானு'  எனும் இந்தப் பாடலை எழுதியவர்கள், பாடியவர், இசையமைத்தவர் இவர்களெல்லாம் யார் யார் தெரியுமா? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?''  என்று நான் கேட்க, அத்தனை பேரும் ஆரவாரமாய்ப்  பதில் சொல்ல எழுந்தார்கள். 

பாடலைப் பாடியவர் பத்மஸ்ரீ கமலஹாசன், இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா என்று ஆளாளுக்குச் சொல்ல, "பாடலை எழுதியவர்கள் என்று சொன்னீர்களே,  இரண்டு பேரா எழுதினார்கள்'' என்று தமிழ்மணி கேட்டார். 

"ஆமாம் ஐயா, கவிஞர் முத்துலிங்கம் அவர்களும், திரு.கமலஹாசன் அவர்களும் சேர்ந்துதான் இந்தப் பாடலை எழுதினார்கள். இந்தச் செய்தியை திரு.கமல் அவர்கள் தான் என்னிடத்தில் ஒருமுறை மிக  அனுபவித்துச் சொன்னார்''    என்று நான் சொன்னவுடன் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. 

"பாருங்கள் இத்தனை நாட்களாக இந்தப் பாடலை எத்தனையோ முறை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பொருள் தெரிந்து பாடலை ரசிக்கிறபோது நமக்கு ஏற்படுகிற இன்பமே அலாதியானதுதான்''  என்று கூறிய தமிழ்மணி "இப்பாடலைப் போல வேறு ஏதாவது பாடல்களை இரண்டு பேர் எழுதியிருக்கிறார்களா ஐயா?''  எனக் கேட்டார். 

உடனே தமிழையா, "அந்தக் காலத்திலேயே முன்னிரண்டு வரிகளை ஒருவர் பாட, பின்னிரண்டு வரிகளை மற்றொருவர் பாடி முடிப்பது ஒரு வழக்கம். இன்னும் சில சமயம் ஈற்றடி (கடைசி அடி) மட்டும் கொடுத்து அந்தப் பாடலை முடிக்கச் சொல்லுகிற போட்டிகளும் உண்டு. இதற்கு மேல் ஒன்று இருக்கிறது அதற்குப் பேர் முறிப்படி''  என்று சொல்லிக்கொண்டே போனார்.  

"இரண்டு அடி, ஈற்றடி, முறிப்படி, அடுப்படி, அரைக்காப்படி, எப்படி?'' என்று கோமாளி கேட்க, நான் உடனே, "இவர் விளையாட்டாகக் கேட்டாலும் எத்தனை சொற்கள் தமிழில் இருக்கின்றன பாருங்கள். ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்கு நீங்களே விளக்கம் சொல்லுங்கள்''  என்று நான் சொன்னேன். உடனே தமிழையாவும், "இரண்டடி கொடுத்துப் பாடுதல் என்பது என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் இரட்டைப் புலவர்கள் வாழ்ந்ததைப் பற்றி நாம் முன்னமையே  பேசியிருக்கிறோம்.  இந்த இருவரில் ஒருவர் பார்வையற்றவர், மற்றவர் நடக்க இயலாதவர். இருவரும் தமிழகத்தையே சுற்றிவந்து இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். வெண்பாவின் முதல் இரண்டடியை ஒருவர் பாட, மற்றொருவர் பின்னிரண்டு அடிகளைப் பாடி முடிப்பார்கள். அதிலும் அவர்களுடைய பாடல்களில் காணப்படுகின்ற கேலியும், கிண்டலும் இப்போது கேட்டாலும் நம்மால் ரசிக்க முடியும். உதாரணமாக, 
"மூடர்முனே பாடல் மொழிந்தால் அறிவறோ?'  எனும் பாடலுக்குள் ஒரு கதையே உண்டு. கிருபானந்த வாரியார் சுவாமி சொல்லுகிற அந்தக் கதையை, ஐயா நீங்கள் சொல்லி விளக்கம் சொல்லுங்களேன்'' என்று எனக்கு முதலடியை எடுத்துக் கொடுத்தார் தமிழையா. 

நானும் மகிழ்ச்சியோடு தொடங்கினேன். "அந்தக் காலத்தில் செல்வம் படைத்த பலபேர் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். ஆனால் சில செல்வந்தர்களிடத்தில் செல்வம் இருக்கும் அவர்களுக்குத் தமிழ் அறிவோ, இசை ஞானமோ எதுவும் இருக்காது.  ஆனாலும் செல்வம் படைத்த அவர்களிடம் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடிப் பொருள் பெற வேண்டிய காலச் சூழல் அக்காலப் புலவர்களுக்கு, இசைவாணர்களுக்கு இருந்தது. ஒருமுறை, புகழ்பெற்ற இசைவாணர் ஒருவர்  ஓர்  அரசனைச் சந்திக்கச் சென்றாராம். அந்த அரசனுக்கு இசை பற்றி எந்த அறிவும் கிடையாது. ஆனால் "தான்'  என்ற அகங்காரம் உண்டு.''
"நம்ம "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'  போல... சரியா?''  என்று நடுவில் கோமாளி கேட்டுக் கொண்டான்.

"சரிதான்''  என்று சொன்ன நான், "அந்த அரசன் முன்னே இசைவாணர் பாடுவதற்கு அமர்ந்தார். அரசனும் தன் சபையில் இருந்த இசை அறிந்த மந்திரியை அழைத்து, "இதோ பார் மந்திரி எந்திரி. எனக்கு இசையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவனோ பாடாமல் போகமாட்டேன் என்கிறான். உனக்கோ இசையைப் பற்றி நன்றாகத் தெரியும் அதனால் நீ ஒன்று செய். நான் அவன் முன்னே போய் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறேன். நீ எனது வலது கால் பெருவிரலில் ஒரு பட்டு நூலைக் கட்டி பக்கத்து அறையில் அமர்ந்து கொள். அவன் நன்றாகப் பாடுகிற போதெல்லாம் அந்த நூலைப் பிடித்து இழு. நான் தலையை ஆட்டி கைதட்டி அவனைப் பாராட்டுகிறேன் அவனும் சந்தோசப்படுவான். கொடுத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவான்'' என்று முன்னேற்பாடு செய்து கொண்டு சிம்மாசனத்தில் போய் இசைவாணரின் முன்னே அமர்ந்தானாம் அரசன்.

இசைவாணரும் மிக அற்புதமான ஆலாபனையில் ஒரு பாடலைத் தொடங்கியவுடன் உள்ளறையில் அமர்ந்திருந்த இசையறிந்த மந்திரி ரசித்துப் பட்டு நூலை இழுக்க மன்னனும் கைதட்டித் தலையாட்ட அதனால் மகிழ்ந்து போன இசைவாணர் தான் பாடிய பாடலில் கமகத்தில் விளையாடி "நிஸ.. நிஸ.. நிஸ...' என்று  துரிதகதியில் பாடி உச்சஸ்தாயிக்கு வந்தபோது, திடீரென்று மன்னன் "நிறுத்து நிறுத்து நூல் அறுந்து போச்சு'' என்று கத்தினானாம். அப்போதுதான் இசைவாணருக்கு, "ஐயோ இந்த ஞானசூனியத்திடம் தான் இப்படி உயிரைக் கொடுத்து பாடினோமா?' என்ற கவலை ஏற்பட்டதாம். இதேபோலதான் நம் இரட்டைப் புலவர்களும் ஓர் அரசனைப் போய் பார்த்து பாடல் ஒன்றினை பாடி படாதபாடு பட்டார்களாம். அந்த அனுபவத்தை  ஒரு பாடலில் சொல்லியிருப்பார்கள்'' என்று சொல்லி நான் நிறுத்தினேன்.
சட்டென்று தமிழையா, 
"மூடர்முனே பாடல் மொழிந்தால் அறிவரோ?
ஆடெடுத்த தென்புலியூ ரம்பலவா - ஆடகப்பொன்
செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித்து என்னபயன்?
அந்தகனே நாயகன் ஆனால்?' 
எனும் இரட்டைப் புலவர்களின் பாடலை மிக அழகாக ராகத்தோடு பாடிவிட்டு விளக்கமும் சொல்லத் தொடங்கினார். 

"இசையறியாதவர்கள் முன்னே பாடலைப் பாடினாலோ, தமிழ்ப் பாடல்களின் பொருளறியாத மூடர்களின் முன்னே செய்யுள்களைக் கூறினாலோ அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதற்கு ஓர் அழகான  உவமையை அப்புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எப்படித் தெரியுமா?  ஓர் அழகிய பெண்ணை மகாலட்சுமியைப் போல சிங்காரித்து முதலிரவில் பள்ளியறைக்குள் அனுப்பினாலும் அவளது கணவன் பார்வையற்றவனாக இருப்பானேயானால் அவனால் அந்த அழகை அனுபவிக்க முடியாதது போல என்று பாடலை முடித்திருப்பார்கள்'' என்று தமிழையா சொல்லி முடிக்க அத்தனை பேரும் மகிழ்ச்சியோடு சிரித்தார்கள். 

இதையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த பேத்திக்கு வரிக்கு வரி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் ஹெட்போன் பாட்டி. பேத்தியும் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது. 

அப்போது ஒரு பெரியவர், "பாருங்கள் நம் குழந்தைகளுக்கு நம் மொழியில் இருக்கிற நகைச்சுவைகளைக் கூட ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்துச் சொன்னால்  தான் புரியும் என்ற நிலை  வந்து விட்டதே, தமிழச் சாதிக்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா?'' என்று சற்றுக் கலக்கத்தோடு கேட்டார்.

நானும் உடனே அவரை ஆமோதித்து விட்டு, "இப்படித்தான் ரசிக்கத் தெரியாதவர்கள் போலவே, மேடைகளில் பாடத் தெரியாதவர்களும் பாடாய்ப் படுத்துவார்கள். ஒரு சங்கீத சபாவில் ஒரு பெண்மணி குயிலுக்கு ஜலதோஷம் பிடித்தது போன்ற குரலில் பாடிக் கொண்டிருக்க சபையே வேதனையில் ஆழ்ந்திருந்ததாம்.

முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் பக்கத்தில் இருந்தவரிடம், "இந்த அம்மா என்ன பாட்டா பாடுது?, லாரி ஹாரன் மாதிரி இருக்கு'' என்று கோபத்தோடு கேட்டாராம். அதற்குப் பக்கத்தில் இருந்தவர் பதில் ஒன்றும் பேசாமல் இருக்க, "உங்களுக்கு காது கேட்காதா?'' என்று எரிச்சலோடு அவரே கேட்க, உடனே இவர் "அதெல்லாம் கேட்கும் பாட்டுப் பாடுறது என் மனைவி'' என்றாராம் வேதனையோடு. 

உடனே அவரும் திடுக்கிட்டு சமாளித்துக்கொண்டு, "அந்த அம்மாவோட குரலெல்லாம் இனிமையாத்தான் இருக்குது, பாட்டத்தான் யாரோ ஒரு முட்டாப் பய எழுதிக் கொடுத்திருக்கான்'' என்றாராம்.

உடனே அவரும், "அது நான் எழுதின பாட்டுதான்'' என்று பெருமையோடு சொன்னவுடன், கேட்டவர் எழுந்து ஊரை விட்டே போய்விட்டாராம்'' என்று நான்  சொல்ல எல்லோருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. அதற்குள் மீசைக்காரர், "ஐயா ஒரு பாட்டை இருவர் எழுதினார்களா?'' என்ற கேள்விக்கே இவ்வளவு செய்திகளைச் சொல்லுகிறீர்களே. இதுபோல நான் பார்த்த சினிமா ஒன்றில் கூட ஒரு காட்சி வரும். அந்தப் படத்தில் ஏற்றம் இறைக்கும் உழவர் ஒருவர் முதல் இரண்டடியைப் பாடிவிட்டுப் போக, பின்னிரண்டு அடிகளைப் பலரும் பாடுவதாக வருமே? அது என்ன படம் என்று தெரியவில்லையே?''  என்று சற்றே தயங்கிக் கேட்டார். 

"அம்பிகாபதி படம் தான் அது'' என்று சொன்ன ஹெட்போன் பாட்டி,  தன் ஐபேடில் எதையோ தேடத் தொடங்கினார். 

"ஆமாம் எனக்கும் கூட இந்தப் பாடல் ஞாபகம் இருக்கிறது. இரவு நேரத்தில் நகர்வலம் சென்ற மன்னன் அதிகாலையில் வயல் புறத்திற்கு வந்தபோது அங்கு ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த உழவர் ஒருவர், "மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே' எனப் பாட்டு வரியைத் தொடங்கி விட்டு அதனை முடிக்காமல் காலைக் கஞ்சி குடிக்கச் சென்று விட்டாராம்.  இப்போது, அவர் முடிக்காமல் விட்ட இந்தப் பாட்டை நான் முடிக்காமல் விடமாட்டேன் என்று மன்னனும் அந்த வரியைத் தேடிக்கொண்டு கம்பர் வீட்டுக்கே வந்துவிட்டாராம்''  என்று நான் சொன்னேன்.

"அக்கால மன்னர்கள் வீட்டுவரி தானே போடுவார்கள், பாட்டு வரியும் தேடினார்களா?''  என்று கோமாளி கேட்க, "எனக்குத் தெரியும் மீதி வரி'' என்று ஒரு குரல் வந்தது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com