தோல்வியால் துவண்டு விடாத உலக கோடீஸ்வரர்கள் இவர்கள்...

தோல்வி என்பது யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். தன்னம்பிக்கை மிகுந்த ஒருவரை நம்பிக்கையில்லாதவராக மாற்றி, மன அழுத்தத்தில் தள்ளி விடும்.
தோல்வியால் துவண்டு விடாத உலக கோடீஸ்வரர்கள் இவர்கள்...

தோல்வி என்பது யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். தன்னம்பிக்கை மிகுந்த ஒருவரை நம்பிக்கையில்லாதவராக மாற்றி, மன அழுத்தத்தில் தள்ளி விடும். தோல்வி ஒருவரை அவரது வாழ்க்கைப் பாதையை தடம் புரளச் செய்துவிடும்.
ஆனால் தோல்வியால் துவளாதவர்கள் சிலரைப் பாருங்கள்:

1. அரியன்னா ஹஃபிங்டன்
இணையதள பதிப்புகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் ஒருவர், 30-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பதை கேள்விப்படும்போது நம்புவது கடினம். அரியான்னா ஹஃபிங்டன் எழுதிய 2ஆவது புத்தகம், ஹஃபிங்டன் போஸ்ட் இணையதள பதிப்பில் பிரசுரிக்கப்படும் முன்பு, 36 முறை பல்வேறு பதிப்பாளர்களாலும் நிராகரிக்கப்பட்டது.
அதேபோல், ஹஃபிங்டன் போஸ்டில் அவரது புத்தகம் பிரசுரிக்கப்பட்டபோதும் முதலில் வரவேற்பில்லை. அந்த புத்தகத்தின் தரம், வளம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களே வந்தன. எனினும், ஆரம்பகால தோல்விகளில் இருந்து வெளிவந்த அரியான்னா, இணையதள பதிப்புகளில் மிகவும் வெற்றிகரமான நபர்களில் ஒருவர் என்ற நிலைமைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார்.

2. பில் கேட்ஸ்
உலகின் மிகப்பெரிய தனிநபர் பணக்காரராக விளங்குபவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் தொடங்கிய முதல் நிறுவனம், டிராப்-ஒ-டேடா என்னும் நிறுவனம். வாகன நெரிசல்கள் தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்து, அதுதொடர்பான பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியை அது செய்தது. தனது தொழில்முறை கூட்டாளி பால் ஆலனுடன் சேர்ந்து, தனது நிறுவனத்தை பிரபலப்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அந்நிறுவனம் முழுவதும் அழிந்துவிட்டது. இந்த தோல்வியால் பில் கேட்ஸ் முடங்கி விடவில்லை. புதிய சந்தர்ப்பங்களைத் தேடும் முயற்சியையும் கைவிடவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தைத் தொடங்கி, மிகப்பெரும் சாதனை பயணத்தை தொடங்கினார்.

3. ஜார்ஜ் ஸ்டெயின்பிரன்னர்
நியூயார்க் யான்கீஸ் பேஸ்பால் அணியை வாங்குவதற்கு முன்பு, 1962ஆம் ஆண்டில் கிளிவ்லேண்ட் பைபர்ஸ் எனும் சிறிய பேஸ்கட் பால் அணியை ஜார்ஜ் ஸ்டெயின்பிரன்னர் வைத்திருந்தார். ஆனால், 1962ஆம் ஆண்டுக்குள் ஸ்டெயின்பிரன்னர் வழிகாட்டுதல் காரணமாக, அந்த அணி திவாலானது.
1970ஆம் ஆண்டுகளில், யான்கீஸ் அணியை அவர் வாங்கிய பிறகும் தொடர் தோல்வியையே சந்தித்தார். 1980கள், 1990களிலும் இது தொடர்ந்தது. ஆனால் ஸ்டெயின்பிரன்னர் சோர்ந்துவிடவில்லை. அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். 1996ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து 6 உலக பட்டங்களை வெல்லச் செய்தார். எம்எல்பி எனப்படும் மேஜர் லீக் பேஸ்பால் போட்டிகளில் மிகவும் லாபகரமான அணியாகவும் யான்கீûஸ அவர் மாற்றிக் காட்டினார்.

4. வால்ட் டிஸ்னி
20ஆவது நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்பாளியாக கருதப்பட்ட வால்ட் டிஸ்னி, அவர் வேலை பார்த்த பத்திரிகையில் இருந்து போதிய கற்பனைத் திறன் இல்லை என்ற காரணத்துக்காக வெளியேற்றப்பட்டவர். எனினும் விடா முயற்சியுடன், வால்ட் டிஸ்னி முதலாவது அனிமேஷன் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பெயர், லாஃப்-ஒ-கிராம் பிலிம்ஸ் ஆகும். இதற்காக 15 ஆயிரம் டாலர் நிதியை திரட்டினார். முக்கிய விநியோகஸ்தக நிறுவனம் மூடப்பட்டு விட்ட காரணத்தினால், இந்த நிறுவனத்தை மூட வேண்டிய நிலைக்கு வால்ட் டிஸ்னி தள்ளப்பட்டார்.
விரக்தி, பணமில்லாத நிலையில், ஹாலிவுட்டுக்கு வால்ட் டிஸ்னி வந்தார். அங்கும் அவர் பல விமர்சனங்களையும், தோல்விகளையும் சந்தித்தார். இறுதியில், முதல் சில திரைப்படங்கள் அடைந்த வெற்றியினால், புகழ் பெற்றார்.

5. ஸ்டீவ் ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப் தனது 20 முதல் 30 வயது வரையிலும் வெற்றிகரமான நபராகத் திகழ்ந்தார். அப்போது ஆப்பிள் நிறுவனம் வெற்றியின் உச்சத்தில் இருந்தது. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 30ஆவது வயதில் ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர் குழு, அவரை வெளியேற்றியது.
எனினும், ஸ்டீவ் ஜாப்ஸ் தளரவில்லை. நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். அதை ஆப்பிள் நிறுவனம் வாங்கியது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்துக்கு திரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் தனது பெருமையை நிலைநாட்டினார்...

6. மில்டன் ஹெர்சே
மில்டன் ஹெர்சே தனது முதலாவது சாக்லேட் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, அவர் மிகவும் சாதாரண நபர்தான். பதிப்பகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஹெர்சே, 3 சாக்லேட் ஆலைகளை அமைத்தார். அந்த 3 நிறுவனங்களும் அழிவதையும் தனது கண்களால் கண்டார்.
பிறகு, தனது கடைசி முயற்சியாக, லான்காஸ்டர் கேரமல் நிறுவனத்தை ஹெர்சே ஆரம்பித்தார். அந்நிறுவனம் மிகப்பெரிய வெற்றியடையவதைக் கண்டார். பால் தயாரிப்பு சாக்லேட்டுகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதைக் கண்ட அவர், ஹெர்சே நிறுவனத்தைத் தொடங்கினார். இத்தொழில் துறையில் மிகவும் அறியப்பட்ட நபர்களில் ஒருவராக உயர்ந்தார். எனவே தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். வெற்றியின் முதல்படி தோல்விதான்.

- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com