டாப் டென் இந்தியப் பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான சாருசீதா சக்ரவர்த்தி!

சாருசீதா முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், முறைப்படி முதுநிலைப் பட்டம் பெறாததால், இந்திய கல்வி நிறுவனங்கள் அவரது படிப்பை அங்கீகரிக்கத் தயங்கின
டாப் டென் இந்தியப் பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான சாருசீதா சக்ரவர்த்தி!

அமெரிக்காவில் வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், இயல்பாகக் கிடைத்த அமெரிக்கக் குடியுரிமையை நிராகரித்து,  இந்தியா வந்து கல்வி கற்று, வேதியியல் துறையில் சாதனை படைத்தவர், சாருசீதா சக்கரவர்த்தி. கோட்பாட்டு வேதியியல் (Theoretical Chemistry) விஞ்ஞானியான அவரது திடீர் மறைவு, இந்திய அறிவியல் துறைக்கு மாபெரும் இழப்பாகும்.

அமிலம், காரம், உலோகம், வாயுக்கள் போன்ற பொருள்களிடையிலான வேதியியல் மாற்றத்தை ரசாயனக் கலப்பில் நேரடியாக ஆய்வு செய்வதே வழக்கமான ஆய்வு நடைமுறை. அதையே வேதியியல் மாதிரி கணினிப் படிநிலையாக்கல் மூலமாக ஆராய்வது நவீன முறையாகும். இதன்மூலம், கணினித் திரையிலேயே ரசாயன மாற்றங்களை அனுமானிக்க முடிகிறது. 

"குவான்டம் மான்டே கார்லோ முறை' எனப்படும் இந்த ஆய்வில் சாருசீதா நிபுணராவார். குறிப்பாக, திரவங்களில் நிகழும் வேதி மாற்றங்களை அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மஹலனோபிஸுடன் இணைந்து பணிபுரிந்தவர் பொருளாதார அறிஞர் சுகமோய் சக்கரவர்த்தி (1934- 1990). இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் அவரது பங்களிப்பு பிரதானமானது. சுகமோயின் மனைவி பேராசிரியர் லலிதா. இத்தம்பதிக்கு, அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கேம்பிரிட்ஜில் 1964, மே 5-இல் பிறந்தார் சாருசீதா. 

அவரது ஆரம்பக்கல்வி அமெரிக்காவில் நிகழ்ந்தது. தனது பெற்றோர் இந்தியாவில் கல்வித் துறையில் பணிபுரிந்ததால், தானும் இந்தியா செல்ல வேண்டும் என்று இளம் வயதிலேயே சாருசீதா தீர்மானித்தார். தில்லிக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது. 

தில்லி மேல்நிலைக் கல்வி வாரியத் தேர்வில் முதலிடம் பெற்ற சாருசீதா, ஐஐடியில் பி.டெக். சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வில் (1982) தேறினார். எனினும், குடும்ப நண்பர்களின் ஆலோசனைப்படி, தில்லி பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட புனித ஸ்டீபன் கல்லூரியில் வேதியியலில் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டப் படிப்பில் சேர்ந்தார். தங்கப் பதக்கத்துடன் (1985) அதில் தேறிய சாருசீதா, மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்றார்.

அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட குயின் கல்லூரியில், இயற்கை அறிவியலில் (வேதியியல்) டிரிப்போ பட்டப் படிப்பில் சேர்ந்த அவர், 1987-இல் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பிலும் சேர்ந்தார். 1990-இல் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.
அதையடுத்து ஆய்வுநிறை பயிற்சிக்காக, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்குச் சென்ற சாருசீதா, பேராசிரியர் ஹோரியா மெடியு உடன் ஆய்வுகளில் ஈடுபட்டார் (1991-92). 

பிறகு நாடு திரும்பிய அவர், தில்லி ஐஐடி-யில் இயற்பியல் துறையில் சுமார் 10 மாதங்கள் பணிபுரிந்தார். 1993 செப்டம்பரில் மீண்டும் பிரிட்டன் சென்ற சாருசீதா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்ச்சில் கல்லூரியில் இளநிலை ஆராய்ச்சியாளராக இணைந்தார். அங்கு ஓராண்டு பணி அனுபவம் பெற்ற பின், இந்தியா திரும்பினார் அவர்.

சாருசீதா முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், முறைப்படி முதுநிலைப் பட்டம் பெறாததால், இந்திய கல்வி நிறுவனங்கள் அவரது படிப்பை அங்கீகரிக்கத் தயங்கின. பட்டச் சான்றிதழ் கல்வியறிவைக் காட்டாது என்பது, சாருசீதாவின் வாழ்க்கை காட்டும் பாடம். 

இறுதியில் தில்லி ஐஐடி, அவரை வேதியியல் துறை உதவிப் பேராசிரியராக 1994 அக்டோபரில் நியமித்தது. ஆகஸ்ட் 2006-இல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற சாருசீதா தான் இறக்கும்வரை (2016 மார்ச் 29) அங்கேயே பணிபுரிந்தார்.

விஞ்ஞான ஆராய்ச்சிகளில் பெண்கள் ஈடுபடுவது சவாலானதாகவே உள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற தங்கள் ஆராய்ச்சி ஆர்வத்தை தியாகம் செய்வது வழக்கம். தவிர, அறிவியல் துறையிலும் பாலினப் பாகுபாடு உண்டு. இந்தத் தடைகளை சாருசீதா சக்கரவர்த்தி வெற்றிகரமாகக் கடந்தார். அந்த வகையில் இந்திய பெண் விஞ்ஞானிகளுக்கு அவரது வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.

அறிவியல் பணிகள்
கோட்பாட்டு வேதியியல், வேதி இயற்பியல், கணிப்பு வேதியியல், மூலக்கூறு இயங்கியல், திரவங்களின் கட்டமைப்பும் இயங்கியலும், நீர்த்தல் (Hydration), உட்கருவாக்கல் (Nucleation), குவான்டம் மான்டே கார்லோ முறை (Quantum Mante Carlo) ஆகிய துறைகளில் சாருசீதா ஆய்வு மேற்கொண்டார்.

தண்ணீர் மற்றும் திரவங்களில் குறிப்பிட்ட சூழலில் நிகழும் வேதியியல் மாற்றங்களை அவர் ஆராய்ந்தார். திரவங்களின் பண்புகளைப் புரிந்துகொள்ள கணினி போலி மாதிரி உருவாக்க முறையை அவர் பயன்படுத்தினார்.  

மரபணுக்களிலுள்ள டிஎன்ஏ புரதம் நீர்மமின்றி இயங்க முடியாது என்று சுட்டிக்காட்டிய சாருசீதா, திரவங்களில் வேதியியல் வினையால் நிகழும் மூலக்கூறு உருமாற்றங்களை உணர்வது, உயிரியலிலும் பயன்படும் என்றார். 

உப்புக் கரைசல்களின் தன்மை, நிலைமாற்றம் குறித்தும் அவர் ஆராய்ந்தார். தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் 90-க்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார். அவை வேதியியலில் அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு உதவுபவையாக விளங்குகின்றன. 

தனித்தும் பிற விஞ்ஞானிகளுடன் இணைந்தும் 9 ஆராய்ச்சி நூல்களை அவர் எழுதியுள்ளார். தவிர, பல்வேறு அறிவியல் சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.

அவரது ஆய்வுப் பணிகளுக்காக 1996-இல் இந்திய தேசிய அறிவியல் அகாதெமி "இளம் விஞ்ஞானி' விருது வழங்கியது. இந்திய அறிவியல் அகாதெமியின் இளம் உறுப்பினர், அப்துஸ் சலாம் சர்வதேச மையத்தின் உறுப்பினர் (1996-2003), பி.எம்.பிர்லா விருது (1999), சிஎஸ்ஐஆரின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (2009), இந்திய தேசிய அறிவியல் அகாதமி உறுப்பினர், லண்டன் ராயல் வேதியியல் சொஸட்டி உறுப்பினர் உள்ளிட்ட பல கௌரவங்களை அவர் பெற்றுள்ளார்.

பெங்களூரிலுள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்பு பொருள் அறிவியல் மையத்தின் இணை உறுப்பினராகவும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரிட்டனின் தி குயின் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகவும் அவர் பணிபுரிந்தார்.  

நவீன வேதியியல் ஆய்வுகளில் முன்னேறி வந்த சாருசீதாவை 2013-இல் மார்பகப் புற்றுநோய் தாக்கியது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே ஆய்வுப் பணிகளிலும் ஆய்வு வழிகாட்டலிலும் அவர் ஈடுபட்டார். நோய் முற்றிய நிலையிலும், புன்னகை தவழும் முகத்துடன் தங்களுக்கு சாருசீதா வழிகாட்டியதாக அவரது ஆய்வு மாணவர்கள் கூறுகின்றனர்.  

சிகிச்சை பலனின்றி, 2016-இல் தனது 51-வது வயதில் சாருசீதா சக்கரவர்த்தி தில்லியில் காலமானார். வேதியியலில் மேலும் பல அரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு விஞ்ஞான உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உயர் ஆய்வுகளில் ஈடுபடுவோர் தங்கள் உடல்நலனிலும் சிறிது அக்கறை காட்ட வேண்டும் என்பதை தனது மறைவால் சொல்லிச் சென்றிருக்கிறார் சாருசீதா.
- வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com