முகப்பு லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல்
மனிதர்களைவிடுத்து ஸ்மார்ட்போனைக் கவனிப்போர் மனநலம் பாதித்தோர்?
By எம். முத்துமாரி | Published On : 12th August 2021 03:21 PM | Last Updated : 12th August 2021 03:30 PM | அ+அ அ- |

மின்னணு சாதனங்களின் பயன்பாடு இந்த உலகம் எதிர்பாராத அளவுக்கு அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குறித்து சொல்லவே தேவையில்லை. முன்னதாக, கிராமத்திற்கு ஒரு தொலைபேசி இருந்த நிலையில், இன்று அவசியம் கருதி வீட்டில் ஒவ்வொரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மின்னணு சார்ந்த பொருள்களின் தயாரிப்பு அதிகரிப்பினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் அவற்றின் விலை குறைந்துள்ளதும் முக்கிய காரணம்.
குழந்தைகளிடமிருந்து மட்டும் ஸ்மார்ட்போன் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா வந்து அதையும் மாற்றிவிட்டது. ஆன்லைன் கல்வியால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி ஸ்மார்ட்போன் வேண்டும் என்ற நிலையால் பெற்றோர் பலரும் அவதிப்படுகின்றனர்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்கள், குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 44 கோடி பேரில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 5 மணி நேரத்துக்கும் மேலாக ஆன்லைனில் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
ஸ்மார்ட்போன்களின் மீதான இளைஞர்களின் மோகம் மற்றும் அவர்களின் இணையப் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் விளைவுகள் குறித்த அச்சத்தை அதிகப்படுத்துகிறது.
நண்பர்கள் இல்லாவிட்டாலும் ஸ்மார்ட்போன் இன்றி யாராலும் இருக்க முடியாது என்ற நிலை இப்போதே வந்துவிட்டது. இளைஞர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு, எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது?
இந்நிலையில், ஸ்மார்ட்போனில் மூழ்கும் இளைஞர்களின் மனநலன் குறித்து ஜார்ஜியா பல்கலைக்கழகம் ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டது. இதன்படி ஃபப்பிங் (phubbing) செய்யும் இளைஞர்களின் மனநலன் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் 'நடத்தை மற்றும் தகவல் தொழில்நுட்பம்' என இதழில் வெளியிடப்பட்டன.
ஃபப்பிங் என்பது என்ன?
நண்பர்களை நேரடியாக சந்திப்பதை, நேரில் பேசுவதைப் புறக்கணித்து ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது ஃபப்பிங் என்று அழைக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனுக்கு ஆதரவாக எதிரில் இருக்கும் நபர்களைப் பழிவாங்கும் செயல் என்றும் கூறலாம்.
இன்று ஒரு விழாவில் கலந்துகொள்ளச் சென்றாலோ அல்லது நண்பர்களுடன் உணவகத்துக்குச் சென்றாலோ உடன் இருப்பவருடன் உரையாடாமல், தங்களுடைய செல்போன்வழியே சமூக வலைத்தளங்களில்தான் ஆக்டிவாக இருக்கிறோம். இதுதான் ஃபப்பிங் (phubbing).
இந்த நிலைக்குச் செல்பவர்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டவர்கள் எனக் கூறுகின்றனர் மனநல நிபுணர்கள்.
2012ல் ஒரு ஆஸ்திரேலிய விளம்பர நிறுவனம் இந்த வார்த்தையை உருவாக்கியது, தங்களுக்கு முன் இருக்கும் நண்பர்களையும் குடும்பத்தினரையும் புறக்கணித்து, பதிலாகத் தங்கள் ஸ்மார்ட்போனில் மட்டுமே கவனம் செலுத்தும் நிகழ்வுதான் ஃபப்பிங் அல்லது போன் ஸ்னப்பிங் (Phone snubbing) என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த வார்த்தை பலருக்குத் தெரியாவிட்டாலும் பலரும் இந்த நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு ஆய்வில் 17 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் நாள் ஒன்றுக்கு நான்கு முறையாவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவதாகவும் ஏறக்குறைய 32 சதவிகித மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை ஃபப் செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இவ்வகையான ஃபப்பிங் செயல்பாடு பெரிதாகத் தெரியாவிட்டாலும் மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுப்பதுதான் இந்த புதிய ஆய்வு.
ஒரேநேரத்தில் பல வேலைகளைச் செய்யவும், பலரைத் தொடர்புகொள்ளவும், எளிதாக உபயோகிக்க கூடியதாகவும் இருக்கும் ஸ்மார்ட்போன்கள், இந்த வகைச் செயல்பட்டால் இளைஞர்களின் முரட்டுத்தனத்திற்கு வழிவகுக்கும், உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது.
ஆய்வின் முன்னணி ஆய்வாளர் ஜுஹுங் சன் கூறுகையில், இந்த ஆய்வில் முதலாவது கண்டுபிடிப்பு, அதிக கவலை அல்லது மனச்சோர்வு உள்ள சிலர் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகியுள்ளனர்.
இரண்டாவது, உணவகங்களில் நண்பர்களுடன் உணவருந்தும் நேரத்திலும், பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை கவனித்தேன், நீண்ட நாள்கள் கழித்து அவர்களைப் பார்த்திருந்தாலும் ஸ்மார்ட்போன் திரையில் தோன்றும் அறிவிப்புகளை உடனடியாகப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அறிவிப்பின் ஒலி வந்தவுடன் அது ஒரு எச்சரிக்கையை ஒலியைப் போன்று தங்களை அறியாமலே பலரும் ஸ்மார்ட்போனை பார்க்கின்றனர். இது ஸ்மார்ட்போனின் பரந்த பயன்பாட்டை விளக்குகிறது.
ஆய்வில் மூன்றாவது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு, சிலர் மட்டுமே, குறிப்பாக ஆளுமைப் பண்புடன் இருப்பவர்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது தங்களுடைய உறவுகளை மதித்து குறைவாகவே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இவர்கள், தங்கள் உறவுகளுடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்கும் எண்ணம் கொண்டவர்கள். எனினும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால் இந்த போக்கு மாறலாம். கூட்டத்தில் ஒருவர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது அது மற்றவரையும் பயன்படுத்தத் தூண்டுகிறது என்றார்.
தற்போது கரோனா தொற்றின் காரணமாக மின்னணு சாதனங்களோடும் தொழில்நுட்பங்களோடும் மக்கள் இணைந்திருக்கின்றனர். கரோனா தொற்று குறைந்தபிறகு ஒருவர் மற்றவரை நேரில் சந்திக்கும் நிலையில் இந்த பப்பிங் இன்னும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர் ஜெனிபர் சாம்ப் எச்சரிக்கிறார்.
தொலைதூரத்தில் இருக்கும் உறவுகளிடம் தொடர்பை மேற்கொள்ளவே மின்னணு சாதனங்கள் வந்தன. ஆனால், இன்று அவற்றின் அதீத பயன்பாட்டினால் அருகில் உள்ள உறவுகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். உயிரற்ற மின்னணு சாதனங்களைவிட உயிருள்ள மனித உறவுகள் அவசியம் என்ற புரிதல் அனைவருக்கும் தேவை.
அதுவும் வரும் காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னால் மனித உறவுகள் காணாமல் போகும் சூழ்நிலையை உருவாக்காமல் தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் வேண்டும். அவசியத்திற்காக மட்டும் மின்னணு சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை அனைவரும் முன்னெடுத்தால் மட்டுமே எதிர்கால அழிவிலிருந்து இளைஞர் சமுதாயத்தை மீட்க முடியும்.
உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?