கோபத்தை அதிகரிக்கும் சமூக ஊடகங்கள்! காரணம்?
By | Published On : 18th August 2021 05:12 PM | Last Updated : 19th August 2021 05:27 PM | அ+அ அ- |

சமூக வலைத்தளங்களில் கோபத்துடன் பதிவுகளை இடுகிறீர்களா? உங்களுடைய பதிவுக்கு கிடைக்கும் எதிர்வினைகள், மறுபடியும் உங்களை கோபத்துடன் பதிவிடத் தூண்டுகின்றனவா?
அப்படியென்றால், உண்மையில் சமூக ஊடகங்கள் ஒருவரின் கோபத்தை அதிகரிக்கிறது.
எந்த வரைமுறையும் எந்தத் தடையும் இல்லாமல் இருப்பதால் இன்று சாதாரணமாக சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து ஆக்ரோஷமாக கருத்துகளைப் பதிவிடுகின்றனர். அந்த பதிவுகளுக்கு மற்றவர்களும் எதிர்வினையாற்றுவதால் விவாதம் சூடுபிடிக்கிறது. சமூக வலைத்தளங்கள் ஒருவரின் மனநிலையை பாதிக்கின்றது என பல ஆய்வுகள், தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதன் ஒருபகுதியாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளுக்கு பெறப்படும் லைக்குகள், பகிர்வுகளைப் பொருத்து ஒருவரின் கோபம் அதிகரிப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, அதிக எண்ணிக்கையிலான லைக்குகள், ஷேர்களைப் பெறும் ஒருவரின் பதிவானது அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது என்றும் இதனால் அவருடைய அடுத்த பதிவும் கோபத்துடன் இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நியூ யேல் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவுகள் 'அறிவியல் முன்னேற்றங்கள்'(Science Advance) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது சமூக ஊடகங்களில் அரசியல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. சமூக ஊடகங்களில் கிடைக்கும் ஊக்கத்தினால், அரசியல் உரையாடல்களின் தொனியையே மாறுவதாக யேல் பல்கலைக்கழக உளவியல் துறையின் முதுகலை ஆராய்ச்சியாளர் வில்லியம் பிராடி கூறினார்.
சமூக ஊடகங்களின் தொழில்நுட்ப வடிவமைப்பால் லைக்குகள், ஷேர்கள் போன்றவற்றால் அந்த பதிவுகளுக்கு வெகுமதி கிடைக்கும்போது கூடுதல் நன்மதிப்பைப் பெற அவர்கள் அதிக கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் அடுத்தடுத்த தொடர் பதிவுகளும் அதிக சீற்றத்துடன் காணப்படலாம் என்கிறார்.
பொதுவாக சமூக ஊடகங்கள் கோபத்தை அதிகரிப்பதாக பலர் ஊகித்திருந்தாலும் இதற்கான நேரடியான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது. ஏனெனில் தார்மீக சீற்றம் போன்ற உணர்ச்சிகளை துல்லியமாக அளவிட முடியாது. இதற்கான தொழில்நுட்பம் சவாலாக இருந்த நிலையில் இந்த ஆய்வுக்கென ஒரு மென்பொருளை உருவாக்கி ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
சுமார் 7,300-க்கும் அதிகமானோரின் ட்விட்டர் வலைத்தளம், அவர்களது ஒரு கோடிக்கும் அதிகமான பதிவுகள், பதிவுகளுக்கு பெறப்பட்ட லைக்குகள், ஷேர்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் அதிக "லைக்குகள்" மற்றும் "ரீட்வீட்ஸ்" பெற்ற பயனர்கள் ஒரு ட்வீட்டில் கோபத்தை வெளிப்படுத்தியபோது, அடுத்த பதிவுகளில் கோபத்திய வெளிப்படுத்தும் வாய்ப்பு அதிகமிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், அரசியல் ரீதியாக குறைவான பின்புலம் கொண்டவர்களே சமூக கருத்துக்கு எதிராக அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர் குரோக்கெட் கூறினார்.
மேலும் அவர், 'தார்மீக சீற்றத்தை/கோபத்தை அதிகரிப்பது சமூக ஊடகங்களின் வணிக மாதிரியின் ஒரு உத்தி என்று கூறலாம். சமூக மற்றும் அரசியல் மாற்றத்தில் தார்மீக சீற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் தளங்களின் வடிவமைப்பின் மூலம், அவர்களின் உணர்ச்சிகளின் மூலமாகபங்கெடுக்க வைக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் வெறுமனே பிரதிபலிக்கவில்லை. அரசியல் நிகழ்வுகளைப் பொருத்து பயனர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொருத்து ஒவ்வொருவரின் நிலை கண்காணிக்கப்படுகிறது' என்றும் கூறினார்.