இதெல்லாம் நடக்கிற கதையா என்ற கேலியை மீறி டிரைவர் இல்லாமல் ஓடும் டிராக்டரை உருவாக்கியவரின் உருக்கமான பேட்டி!

யோகேஷ் நாகர், பி.எஸ்சி முதலாண்டு படிக்கும் மாணவர்.  ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில்  உள்ள  பமோரி கலான் கிராமத்தைச் சேர்ந்தவர்.  
இதெல்லாம் நடக்கிற கதையா என்ற கேலியை மீறி டிரைவர் இல்லாமல் ஓடும் டிராக்டரை உருவாக்கியவரின் உருக்கமான பேட்டி!


யோகேஷ் நாகர், பி.எஸ்சி முதலாண்டு படிக்கும் மாணவர்.  ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில்  உள்ள  பமோரி கலான் கிராமத்தைச் சேர்ந்தவர்.

கணினி நிபுணரோ, பொறியியல்துறை வல்லுநரோ அல்ல. ஆனால் அவருடைய கண்டுபிடிப்பு, நாட்டில் உள்ள கணினி நிபுணர்களை, பொறியியல்துறை வல்லுநர்களை வியப்புடன் பார்க்க வைத்திருக்கிறது. அவர் கண்டுபிடித்திருப்பது  ஓட்டுநர் இல்லாமல் ஓடும் டிராக்டரை. இதற்காக நாட்டின் முன்னணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவான் குமார் கோயங்கா அவரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். 

இந்த ரிமோட் கண்ட்ரோல் டிராக்டரை யோகேஷ் நாகர்  கண்டுபிடித்த கதையோ சுவையானது...

தனது கிராமத்தில் இருந்து  100 கி.மீ.தொலைவில் கோட்டா நகரில் உள்ள  அரசு கல்லூரியில் பி.எஸ்சி படித்துக் கொண்டிருக்கும் யோகேஷுக்கு ஊரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.    அவருடைய அப்பா  ராம்பாபு நாகர் டிராக்டரை வைத்து உழுது கொண்டிருக்கும்போது வயிற்றில் கடுமையான வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்ததும், கல்லூரியில் லீவு சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார் யோகேஷ். இதனால் அன்றைக்கு எழுத வேண்டிய தேர்வை அவரால் எழுத முடியவில்லை. 

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகும், சில நாட்கள் யோகேஷின் தந்தையால் டிராக்டர் ஓட்ட முடியவில்லை.  அப்படியே ஓட்டினாலும் முதலில் மாதிரி நீண்ட நேரம் ஓட்ட முடியவில்லை.  

யோகேஷ் தானே வயலுக்குச் சென்று டிராக்டரை ஓட்டிப் பார்த்திருக்கிறார். அது ஒரு கடினமான வேலை என்பது அப்போது அவருக்குத் தெரிந்தது. அப்போதுதான் யோகேஷுக்குத் தோன்றியிருக்கிறது, டிரைவர் இல்லாமல் ஓடும் டிராக்டர் இருந்தால் எவ்வளவு நல்லது என்று. 

அடுத்த சில நாட்கள் அதுபற்றிய யோசனையாகவே இருந்திருக்கிறார். கிராமத்தில் இருந்த நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் டிரைவர் இல்லாமல் ஓடும் டிராக்டரைப் பற்றி  யோகேஷ் சொல்லியிருக்கிறார். எல்லாரும் அவரை ஒரு பைத்தியக்காரனைப் போல பார்த்திருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கிற கதையா? என்ற  வெறுப்பூட்டும் கேள்வி  வேறு. 'என்னைப் பொருத்தவரையில் என்னால் செய்ய முடியாதது எதுவுமில்லை. எனவே பிறருடைய  கேலி பேச்சுகளைப் பற்றிக் கவலைப்படாமல்,  டிரைவர் இல்லாத டிராக்டரை உருவாக்குவதைப் பற்றி திட்டமிடத் தொடங்கினேன். ஆனால் அதை முதலில் என் அப்பாவை  ஏற்றுக் கொள்ளச் செய்வதே எனக்குப் பெரும்பாடாகிப் போனது.  

2 ஆயிரம் ரூபாய் இருந்தால் டிரைவர் இல்லாத டிராக்டரைத் தயாரிக்க தேவைப்படும் சில எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கலாம் என்று அவரிடம் கேட்டபோது, முதலில் மறுத்தார். பிறகு அந்த ரூபாயைக் கொடுக்கும்போது கூட நம்பிக்கையில்லாமல்தான் கொடுத்தார்' என்கிறார் யோகேஷ்.

ஆனால் ஒரு மாதத்திலேயே டிரைவர் இல்லாமல்  ரிமோட் கண்ட்ரோலில் முன்னும் பின்னும் செல்லும்படி  டிராக்டரை  இயக்கிக் காட்டியிருக்கிறார் யோகேஷ். அதன் பிறகு, யோகேஷின் தந்தைக்கு அவர் மீது நம்பிக்கை வந்துவிட்டது.  

ரிமோட் கண்ட்ரோலில் முன்னும் பின்னும்  இயங்கும் டிராக்டரை அவர் பார்த்ததும், இன்னும் இதை விட எல்லா திசைகளிலும் செல்லும்படி டிராக்டரின் இயக்கத்தை நான் மாற்றி அமைப்பேன் என்ற நம்பிக்கை என் அப்பாவுக்கு வந்து விட்டது' என்கிறார் யோகேஷ். 

அதற்குப் பிறகு அவருடைய தந்தையிடம் ரூ.50 ஆயிரம் வாங்கியிருக்கிறார். அதை வைத்து நிறைய  எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்த யோகேஷ், உள்ளூரில் இருந்த டிராக்டர் மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் டிராக்டரில் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார். அதற்குப் பின்பு 1.5 கி.மீ. தொலைவில் இருந்து கூட ரிமோட் கண்ட்ரோல் மூலமாக டிராக்டரை விரும்பியபடியெல்லாம் இயக்கும்முறையை உருவாக்கியிருக்கிறார். 

அவரைப் பைத்தியம் என்று சொன்ன ஊர்க்காரர்கள் அவரின் டிரைவர் இல்லாத டிராக்டரைப் பார்த்ததும்,  பாராட்டு மழையில் அவரை நனைத்திருக்கிறார்கள். 

'என் மகன் இதைக் கண்டுபிடித்திருப்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி.  அவன் ஒரு என்ஜினியரோ, விஞ்ஞானியோ அல்ல. இருந்தாலும் அவன் இதை உருவாக்கியிருக்கிறான். யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ இந்த டிராக்டர் எனக்கு ரொம்பவும் பயன்படுகிறது.  தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே உழவு வேலைகளை நான் இப்போது செய்ய முடிகிறது’ என்று அவருடைய தந்தை ராம்பாபு  நாகர் பெருமைப்படுகிறார். இந்த டிரைவர் இல்லாத டிராக்டரை  வயல்வெளிகளில் ஓட்டிச் செல்ல அனுமதி அளித்துள்ள உள்ளூர் நிர்வாகம், எல்லாரும் பயன்படுத்தும் சாலைகளில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதற்குப் பிறகு யோகேஷ்  குஜராத்தில் உள்ள 'நேஷனல் இன்வென்ஷன் ஃபவுண்டேஷன்'-னில் தனது கண்டுபிடிப்பைப் பதிவு செய்து இருக்கிறார். 

இந்த டிரைவர் இல்லாத டிராக்டர் கண்டுபிடிப்பின் அடிப்படையில்,  இந்திய ராணுவத்துக்குப் பயன்படும் வகையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாலைவனங்களிலும், மலைப் பகுதிகளிலும் செல்லும் வாகனங்களை உருவாக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்'  என்கிறார் யோகேஷ் நாகர். 

டிரைவர் இல்லாத டிராக்டர்களைத் தயாரிக்கும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் டிராக்டர்களைத் தயாரித்து தரும் திட்டமும் அவரிடம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com