வணக்கம் செய்திகள் வாசிப்பது ரோபா! ரோபோ செய்தி வாசிப்பாளர் பற்றிய தகவல்கள்!

தொழில்நுட்ப வளர்ச்சியால், இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையேயான வித்தியாசம் குறைந்து வருகிறது
வணக்கம் செய்திகள் வாசிப்பது ரோபா! ரோபோ செய்தி வாசிப்பாளர் பற்றிய தகவல்கள்!

தொழில்நுட்ப வளர்ச்சியால், இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையேயான வித்தியாசம் குறைந்து வருகிறது. மனிதனின் வேலைப் பளுவைக் குறைக்க ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. 

அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவை (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் - ஏ.ஐ.) பொருத்தி நிலைமைக்கு ஏற்ப தானாக செயல்பட வைத்து வருகின்றனர் விஞ்ஞானிகள். 

இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீனாவில் செயற்கையாக செய்தி வாசிப்பாளரை உலகில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான ஜின்ஹுவா. இந்த தொழில்நுட்பத்தை அந்நாட்டின்  இணையதள நிறுவனமான சோகா உருவாக்கிஉள்ளது.

செய்தி தொலைக்காட்சி திரையில் பார்ப்பதற்கு ஆண் செய்தி வாசிப்பாளரைப் போல் உடை அணிந்து இருக்கும் இவருக்கு ஜாங் ஜோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கணினியில் பதிவிடப்படும் செய்தியை அப்படியே மனிதக் குரலில் பேசும் ஜாங் ஜோ, செய்திக்கு ஏற்ப தனது முகபாவங்களை மாற்றியும், புருவங்களை அசைத்தும் வாசிக்கிறார்.

மற்றொரு செய்தி வாசிப்பாளரின் குரலையும், முக அசைவையும் ஜாங் ஜோக்கு அளித்திருக்கிறார்கள். ஆங்கிலம், சீன என இரு மொழிகளில் செயற்கையான செய்தி வாசிப்பாளர்கள் பேசுகின்றனர். சீன மொழி செய்தி வாசிப்பாளருக்கு கிவ் ஹோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கை செய்தி வாசிப்பாளர் தொழில்நுட்பம் வெறும் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமில்லை என்று கூறும் சோகா நிறுவனம், வரும் நாள்களில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெற்றோர்களாக இவர்களை உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செயற்கை செய்திவாசிப்பாளர்கள் 24 மணி நேரமும் களைப்படையாமல் பணியாற்றுவார்கள் என்று கூறும் ஜின்ஹுவா தொலைக்காட்சி, இதனால் தங்கள் நிறுவனத்துக்கு செலவு குறையும் என்கிறது. ஜாங் ஜோ, கிவ் ஹோ இருவரையும் சமூக வலைத்தளம், இணையதளம் ஆகியவற்றில் இடைவிடாமல் செய்தி வாசிக்கவும் இந்த தொலைக்காட்சி பயன்படுத்தி வருகிறது. பிழைஇல்லாமல் வாசிப்பதிலும், பிரேக்கிங் நியூஸ்களை உடனடியாக தெரியப்படுத்துவதிலும் இவர்கள் வல்லமை படைத்து வருவதாக ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மனிதர்களின் நுணுக்கமான அசைவுகள் இல்லாத காரணத்தால், இந்த செயற்கையான செய்திவாசிப்பாளர்களை தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்றும் பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com