சகலகலா ரோபோ இது! பெருமைப்படுகிறார் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்!

காலையில் எழுந்தவுடன் ஸ்மார்ட் போனின் முகத்தில்தான் பலர் விழிக்கிறார்கள்.
சகலகலா ரோபோ இது! பெருமைப்படுகிறார் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்!

மனித வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் ஒன்றிணைந்துவிட்டது. காலையில் எழுந்தவுடன் ஸ்மார்ட் போனின் முகத்தில்தான் பலர் விழிக்கிறார்கள். அதே போல் தூங்கப் போகும் போதும் ஸ்மார்ட்போனைப் பார்த்துவிட்டுதான் செல்கிறார்கள். அதிலும், ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் மனித மூளைக்கு எட்டாத பல காரியங்களைச் செய்து வருகின்றன.

தற்போது, ஸ்மார்ட் போனின் மூலம், ரோபோவை இயக்கக் கூடிய செயலியை அமெரிக்காவின் புர்டியு பல்கலைக்கழகத்தின் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கார்த்திக் ரமணி கண்டுபிடித்துள்ளார்.

இதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள 'விஆர்ஏ' செயலியில் ரோபோ செல்ல வேண்டிய வழித்தடத்தைக் கை விரலால் வரைந்து விட்டு, அந்த ஸ்மார்ட் போனை எடுத்து ரோபோவில் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான். நாம் போட்ட வழித்தடத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து கொண்டு ரோபோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

ரோபோவுக்கு கண்களாகவும், மூளையாகவும் ஸ்மார்ட்போன்தான் செயல்படுகிறது. ஸ்மார்ட்போன் ரோபோவில் இருக்கும் வரை ரோபோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இந்த வகையிலான ஸ்மார்ட்போன் மூலம் ரோபோவைப் பயன்படுத்தி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, குப்பை அகற்றுவது, பொருள்களை இடம் மாற்றுவது போன்ற பணிகள் வெற்றிகரமாகச் செய்து பார்க்கப்பட்டன.

தொழிற்சாலைகளில் ரோபோக்களை இயக்க இந்த 'விஆர்ஏ' செயலி பயன்படும் என்றும் ரோபோக்களுக்காக பெரும் பொருட் செலவு செய்ய இயலாத சிறு தொழிற் நிறுவனங்களுக்கு இந்த செயலிகள் பயன்படும் என்றும் ஆராய்ச்சியாளர் கார்த்தி ரமணி தெரிவித்துள்ளார்.

ரோபோக்கள் செய்ய வேண்டியதை நாம் ஸ்மார்ட் போனில் செய்து காண்பித்தால், அதைப் பின்பற்றி இந்தச் செயலி ரோபோக்களை இயக்கும். தானியங்கி கார்கள், ட்ரோன்களில் பயன்படுத்தப்படும் அல்காரிதத்தின் அடிப்படையில், ரோபோவை இயக்கும் இந்த ஸ்மார்ட் போன் செயலி செயல்படுகிறது.
- அ.சர்ஃப்ராஸ் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com