அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலில் மூலவர் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது.
அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை
அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலில் மூலவர் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது.

நேரலை செய்திகளை அறிய தினமணியுடன் இணைந்திருங்கள்..

தாமரை மலருடன் மோடி மனமுருக பிரார்த்தனை

அயோத்தி ராமர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபால ராமர் திருவுருவச் சிலை முன்பு, கையில் தாமரை மலரை வைத்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி மனமுருக பிரார்த்தனை செய்தார்.
 

விழாக் கோலம் பூண்டுள்ள அயோத்தி ராமர் கோயில்

ஸ்ரீபால ராமருக்கு சிறப்புப் பூஜை

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபால ராமருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.

வேத விற்பன்னர்கள் தொடர்ந்து மந்திரங்கள் முழங்க, ஸ்ரீபால ராமரின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தாமரை உள்ளிட்ட மலர்களாலும், மூலிகைகளாலும் சிறப்பு பூஜை மேற்கொண்டார். பிறகு, ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
 

மஞ்சள், சிவப்புப் பட்டாடையில் ஸ்ரீபால ராமர்!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், ஸ்ரீபால ராமர் எழுந்தருளினார். மஞ்சள், சிவப்பு நிறப் பட்டாடையில் கையில் தங்கத்தாலான வில், அம்புடன்  காட்சியளிக்கிறார்.
 

ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்

அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

 

எழுந்தருளினார் ஸ்ரீபால ராமர்

அயோத்தி ராமர் கோயிலில் தொடங்கிய ஸ்ரீபால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை தொடங்கி சிலை பிரதிஷ்டை நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பூஜைகளை தலைமையேற்று செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்திருந்தார். 

பிரதிஷ்டைக்கு முன்பு, புஷ்பம், பழம், மூலிகைகளைக் கொண்டு ஸ்ரீபால ராமர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் முற்றம் 81 கலச மூலிகை நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது.  பிறகு, பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 125 கலச புனித நீர் சிலை மீது ஊற்றப்பட்டது. அதன் பிறகு மகாபூஜை நடத்தி உரிய இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக தெய்விக ஆற்றல், பிராணன் சிலைக்கு மாற்றப்படும். இந்த நிகழ்வானது, மந்திரங்கள் ஓதப்படுவதன் மூலமாகவும் முத்திரைகள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும்.
 

பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது

அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருக்கும் நிலையில், கோயில் கருவறைக்கு அருகில், சிலை பிராண பிரதிஷ்டைக்கான சிறப்புப் பூஜைகள் தொடங்கியுள்ளன.

பெரிய தட்டில், பட்டு வஸ்திரம், பூஜை பொருள்களைக் கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு சிறப்புப் பூஜை தொடங்கியது. மோடிக்கு அருகில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்துள்ளார்.

ராமர் கோயிலில் மோடி

அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். 

ஜனகபுரியில் நேரலை

நேபாளத்தில் சீதா பிறப்பிடமாக கருதப்படும் ஜனகபுரியில் உள்ள ஜானகி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீபால ராமர் சிலையின் சிறப்புகள்

ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும்  ஸ்ரீபால ராமர் சிலையின் அகலம் 3 அடி, 4.25 அடி உயரம் கொண்டது. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.


தமிழக பிரபலங்கள்

அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காஞ்சியில் நேரலை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா எல்இடி திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நேரலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டு வருகிறார்.

பிராண பிரதிஷ்டை

இன்று நண்பகல் 12.29.08 வினாடிக்கு 121 வேதகர்கள் வேத மந்திரம் முழங்க பிராண பிரதிஷ்டை தொடங்குகிறது. அதாவது, அயோத்தி ராமா் கோயிலில் இன்று நண்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

மோடி வருகை

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி வந்தடைந்தார்.

 

84 வினாடி முகூா்த்த காலம்

 ராமா் சிலை பிரதிஷ்டை 84 வினாடி முகூா்த்த காலத்தில் நிறைவு செய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

நண்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.