உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வரும் நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 171 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 305 ஊராட்சித் தலைவர்கள், 1,913 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வரும் நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 171 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 305 ஊராட்சித் தலைவர்கள், 1,913 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,406 பதவியிடங்களுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலானது, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கபிலர்மலை, மல்லசமுத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில், 893 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகின்றன. இந்த தேர்தலில், 2,26,306 ஆண் வாக்காளர்கள், 2,33,048 பெண் வாக்காளர்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4 லட்சத்து 59 ஆயிரத்து 370 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணியில் சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். பதற்றமான 150 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, விடியோ கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை காலை 9 மணி முதல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அதன்பின், எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு என்பது கணினி குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதற்குரிய வாகனங்களில், தேர்தலுக்கான பொருள்களுடன் அலுவலர்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை பிற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி, ஊராட்சி வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் வரையில், வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களிடையே வாக்கு சேகரித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1,020 போலீஸார்: எஸ்.பி. அர.அருளரசு தகவல் 
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தது: முதல் கட்ட தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வியாழக்கிழமை காலை 8 மணியளவில், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து வாக்கு இயந்திரங்களை ஏற்றிச் செல்வதற்கான வாகனங்கள் புறப்படுகின்றன. தேர்தல் பணியில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 160 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் கோவையில் இருந்து நாமக்கல் வருகின்றனர்.

இவர்கள் தவிர மாவட்ட போலீஸார் என மொத்தம் 1,020 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸார் 430 பேரும் அடங்குவர். இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 43 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளாக முதல் கட்டத்தில் 150, இரண்டாம் கட்டத்தில் 122 கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர மேலும் 28 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பதற்றமான 300 வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com