வீடுகளுக்குள் போர்வைகள் வீச்சு: போலீஸார் விசாரணை
By DIN | Published On : 27th December 2019 02:06 PM | Last Updated : 27th December 2019 03:08 PM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோப்பணம்பாளையத்தில் வீடுகளில் வீசி சென்ற போர்வைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோப்பனம்பாளையம் ஊராட்சியில் வீட்டினுள் வீசிச்சென்ற போர்வைகளை பொதுமக்கள் அங்கிருந்த கோயிலில் போட்டு சென்றதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற பறக்கும் படையினர் போர்வைகளை வீசிச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பணம்பாளையத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்காக போர்வைகளை கொண்டு வந்து அங்குள்ள வீடுகளுக்குள் வீசிச்சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் காரல் மார்க்ஸ் தலைமையிலான பறக்கும் படையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் போர்வைகளை வீசிச் சென்றது தெரியவந்தது. வீடுகளுக்குள் வீசிச்சென்ற போர்வைகளை வாக்காளர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயில் வளாகத்தில் வீசிச் சென்றனர்.
இதையடுத்து பறக்கும்படையினர் போர்வைகளை கைப்பற்றி பாண்டமங்கலம் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போர்வைகளை வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.