விலகுமா பனிமூட்டம்?

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் திருவிழாவை நடத்துவதே மிகப்பெரிய சாதனை. அதிலும், பயங்கரவாதத் தாக்குதல்களும், மதரீதியிலான பதற்றங்களும் நிறைந்த 


இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் திருவிழாவை நடத்துவதே மிகப்பெரிய சாதனை. அதிலும், பயங்கரவாதத் தாக்குதல்களும், மதரீதியிலான பதற்றங்களும் நிறைந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பிறகு இந்திய தேர்தல் ஆணையம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும் தேர்தல்கள், அந்த மாநிலத்தை இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகக் கருதுவதை உறுதி செய்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒன்றுதான் என்றாலும், அது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. 25.93 சதவீத பரப்பளவைக் கொண்ட ஜம்மு, 15.73 சதவீத பரப்பளவுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு, 58.33 சதவீத அளவுக்கு லடாக் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியது. மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தலா 10 மாவட்டங்களும், லடாக் பகுதியில் கார்கில், லே ஆகிய இரு மாவட்டங்களும் இருக்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 96.40 சதவீத முஸ்லிம்களும், ஜம்முவில் 62.55 சதவீத ஹிந்துக்களும், லடாக்கில் 46.40 சதவீத முஸ்லிம்களும் 39.67 சதவீதம் கொண்ட பெளத்தர்களும் பெரும்பான்மையினர். 
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் 111 இடங்கள். இதில் 24 தொகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால் 87 இடங்களுக்குத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளும் இந்த 87 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். 
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் ஆறு மக்களவைத் தொகுதிகள், நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள். ஆனால், அந்தத் தொகுதிகளின் உருவாக்கத்தில்  பாரபட்சம் நிலவவே செய்கிறது. அதிக பரப்பளவு கொண்ட லடாக்கிற்கு வெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், லடாக் மக்களவைத் தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த பரப்பளவு கொண்ட ஜம்முவில் 37 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஜம்மு-பூஞ்ச் மற்றும் உதம்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளும் இருக்கின்றன. சுமார் 15 சதவீத அளவே கொண்ட காஷ்மீருக்கு 46 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளும் இருக்கின்றன. எனினும், மாநிலத்தின் முக்கியப் பதவிகளில் காஷ்மீரைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் சூழலும், நடைமுறைகளும் வித்தியாசமானவை. தேர்தலிலும் அவை பிரதிபலிக்கின்றன. தேர்தல் ஐந்து கட்டங்களாக நடத்தப்படுகிறது. அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் மட்டுமே மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. நாட்டில் ஒரே தொகுதியில் பல கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலும் இதுதான். 
சுதந்திரத்திற்கு பின்னர் காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் நிபந்தனையின்றி இணைவதாகக் கையெழுத்திட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர், இந்நாட்டின் பகுதியானது. ஆனால், அங்கு நிலவிய சூழலுக்கு ஏற்ப அப்போதைய ஜவாஹர்லால் நேரு அரசு, அந்த மாநிலத்திற்கு சில சலுகைகளை வழங்கியது. நாளடைவில், அந்தச் சலுகைகளில் பல நீர்த்துப் போய்விட்டாலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு இன்றும் நீடிக்கிறது. அதன்படியே, நாட்டின் சட்டத்திட்டங்களும் அங்கே அமல்படுத்தப்படுகின்றன. 
சில மாதங்களுக்கு முன்பு வரை ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி)-பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தக் கூட்டணி அரசு மூன்றரை ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. சட்டப்பேரவை முடக்கப்பட்டு, அங்கு தற்போது குடியரசுத்  தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
மாநில சட்டப்பேரவையைப் பொருத்தவரை, முதல் 13 ஆண்டுகள் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியே ஆட்சியில் இருந்தது. 1964 தொடக்கத்தில் காங்கிரஸின் குலாம் நபி சாதிக் ஜம்மு-காஷ்மீரின் பிரதமரானார். ஆம்! அதுவரை பிரதமர் என்றே மாநில முதல்வரை அழைத்தனர். (1965-இல் மாநில முதல்வர் என்று மாற்றப்பட்டது). இதுவரை நடைபெற்றுள்ள 12 சட்டப்பேரவைகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 8 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், பிடிபி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த ஆண்டு வரை நடைபெற்ற பிடிபி அரசில் 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவும் இடம்பெற்றிருந்தது. 
ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தேர்தல் நடைபெற தொடங்கியது மூன்றாவது பொது தேர்தலில்தான். ஜம்மு-காஷ்மீர் சிறப்புச் சட்டம் 1965-இல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, 1967-இல் நடைபெற்ற தேர்தல், நாடு முழுவதுக்குமான தேர்தலாக அமைந்தது. மாநிலத்தில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 5 இடங்களையும், ஸ்ரீநகர் தொகுதியை தேசிய மாநாட்டுக் கட்சியும் கைப்பற்றின. இந்தத் தொகுதிகளில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் தேசியக் கட்சிகளே தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. 
லடாக் தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், தேசிய மாநாட்டுக் கட்சி இரு முறையும், சுயேச்சைகள் நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அந்தத் தொகுதியில் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்தவரும், லடாக் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான டுப்ஸ்தான் செவாங், கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், கட்சித் தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இருந்து வெளியேறிய டுப்ஸ்தான் செவாங், தனது எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார். இது லடாக் பகுதியில் பாஜகவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. 
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். இங்கு காங்கிரஸ், தேசிய மாநாடு, பிடிபி, ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2014 தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் பிடிபி வெற்றி பெற்றது. இடையில், காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட 1989-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால் 1991 மக்களவைத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக, ஜம்மு-காஷ்மீரின் அரசியலில் மாற்றம் காணப்படுகிறது. காஷ்மீரைச் சேர்ந்தவர்களை மையமாகக் கொண்ட மாநில அரசியலில், தற்போது ஜம்முவைச் சேர்ந்தவர்களும் பிரதிநிதித்துவம் பெறத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2014 டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் முதலில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. எனினும், பிடிபி-பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, 2015 மார்ச் 1-ஆம் தேதி பிடிபி கட்சியைச் சேர்ந்த முஃப்தி முகமது சயீத் மாநில முதல்வரானார். பாஜகவைச் சேர்ந்த நிர்மல் குமார் சிங், கவீந்தர் குப்தா ஆகியோர்துணை முதல்வராகப் பொறுப்பேற்றனர். 2016 ஜனவரியில் முஃப்தி முகமது சயீத் காலமானார். பின்னர், அவரது மகள் மெஹபூபா, மாநிலத்தின் முதல் பெண் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1977 முதல் மாநிலத்தில் ஏழு முறை குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பாஜக-பிடிபி கூட்டணி அரசு பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. 
இந்தக் கூட்டணி ஆட்சியில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு குடியிருப்பு உருவாக்குதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இது, கூட்டணி அரசு கவிழ்வதற்குக் காரணமாகவும் அமைந்தது. ஜூன் 2018-இல் பிடிபியுடனான கூட்டணியை பாஜக முறித்துக்கொண்டது. சட்டப்பேரவை முடக்கப்பட்டது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஜம்மு, லடாக் பகுதிகளில் உள்ள மூன்று தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, தற்போது தனித்து களமிறங்கியுள்ளது. உதம்பூர் தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங், ஜம்மு-பூஞ்ச் தொகுதி எம்.பி. ஜுகல் கிஷோர் ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலங்களவை எம்.பி.யான ஷோஃபி யூசுப் அனந்த்நாக் தொகுதியிலும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் காலித் ஜெஹங்கீர் ஸ்ரீநகர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த முறை ஏற்கெனவே உள்ள மூன்று தொகுதிகளையும் தக்க வைப்பதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்திலாவது வென்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பாஜக போட்டியிடுகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் சூழல், சில நேரங்களில் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளும் சாதகமாக அமைந்து விடுகிறது. அதன் காரணமாக, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகளான பிடிபியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தாலும், பிரிவினைவாத ஆதரவு கருத்துகளை கைவிடத் தயாராக இல்லை. கடந்த 2016-இல் பர்ஹான் வானி என்ற பயங்கரவாதி கொல்லப்பட்ட பிறகு நிலவிய ஊரடங்கும், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் சம்பவங்களும் தேர்தலில் பிரதிபலிக்கக்கூடும். கடந்த முறை பள்ளத்தாக்கில் உள்ள மூன்று தொகுதிகளையும் கைப்பற்றிய பிடிபி, இடையில் பாஜகவுடன் ஏற்பட்ட கூட்டணிக்குப் பிறகு, தற்போது தனியாகப் போட்டியிடுகிறது. மெஹபூபா தலைமையிலான கட்சிக்கு இதுதான் முதல் தேர்தல்.
தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் ஸ்ரீநகர், பூஞ்ச், உதம்பூர் ஆகிய தொகுதிகளில் கூட்டாகவும், மற்ற மூன்று தொகுதிகளில் நட்புரீதியில் ஒருவரையொருவர் எதிர்த்தும் போட்டியிடுகின்றன. ஸ்ரீநகர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் பின்னடைவு, பள்ளத்தாக்கில் நிலவும் சூழல், பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சியின் தோல்விகள் இவை அனைத்தும் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று இந்தக் கூட்டணி நம்புகிறது.
எது எப்படியிருப்பினும் ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றச்சூழல், மக்களின் மன ஓட்டங்கள், மத்திய ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கை - அவநம்பிக்கை போன்றவை இந்தத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பது நிதர்சனம்.

பாஜக-வின் எழுச்சி!
ஜம்மு-காஷ்மீருக்கு 370-ஆவது சட்டப்பிரிவின் மூலம் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து, 1953-இல் சுதந்திர இந்தியாவின் முதல் தொழில் அமைச்சரும்,  பாஜகவின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான ஷியாம் பிரசாத் முகர்ஜி, 1953 மே 11-இல் ஜம்மு-காஷ்மீரின் லக்கன்பூர் என்ற இடத்திற்குள் நுழைந்தார். அதனால் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் மர்மமான முறையில் இறந்தார்.

அதற்குப் பின்பு, ஜம்மு-காஷ்மீரில் ஜனசங்கமும், பாஜகவும் ஜம்மு, லடாக் பகுதிகளில் வளரத் தொடங்கின. பின்னர், 1996 தேர்தல் முதல் உதம்பூர் மக்களவைத் தொகுதியிலும், பின்னர் பூஞ்ச் தொகுதியிலும் பாஜக வெற்றிக்கனியை சுவைக்கத் தொடங்கியது. எனினும், பாஜகவின் செல்வாக்கு 2008-இல் மேலும் உயரத் தொடங்கியது. அமர்நாத் யாத்திரைக்கு வழங்கப்பட்ட 99 ஏக்கர் தற்காலிக ஒதுக்கீட்டு நிலத்தை, பயங்கரவாதிகளின் எதிர்ப்பு காரணமாக மாநில அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது. கடந்த 2014 பேரவைத் தேர்தலில் அது 25-ஆக உயர்ந்தது, எதிர்க்கட்சிகளின் வியப்புக்கு ஆளானது. அதிரடி திருப்பமாக, பாஜகவுக்கு நேரெதிர் கொள்கை கொண்ட பிடிபியுடன் கூட்டணி ஆட்சி அமைந்தது. எனினும் 2018-இல் அந்தக் கூட்டணி முறிந்தது.

 எதிரொலிக்குமா ஊரடங்கு?
கடந்த 2016 ஜூலை 8-ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பர்ஹான் வானியின் இறுதிச்சடங்கில் பயங்கரவாதிகள் உள்பட சுமார் 15,000 பேர் கலந்துகொண்டனர். அவரது சடலத்தின் மீது பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பல இடங்களில் ராணுவத்தினருக்கு எதிரான கல்வீச்சு சம்பவங்கள் நடத்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகளும் முக்கியப் பகுதிகளும் அடைக்கப்பட்டன. ஜூலை 12-ஆம் தேதி இரவு வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றிய 200 காஷ்மீர் பண்டிட்டுகள் காயமடைந்து, தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து, ஜூலை 15-ஆம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதோடு, செல்லிடப்பேசி சேவைகள் தடை செய்யப்பட்டன. பின்னர், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு சிறிது சிறிதாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகளில் 90 பேர் கொல்லப்பட்டனர்; 15,000 பேர் காயமடைந்தனர். சுமார் 4,000 பாதுகாப்புப் படை வீரர்களும் காயமடைந்தனர். எனினும், காஷ்மீரில் காணப்பட்ட பதற்ற நிலை, 2017 பிப்ரவரி வரை நீடித்தது. 
இந்த விவகாரத்திற்கு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி தெரிவித்தார். காஷ்மீர் இளைஞரை இந்திய அரசு கொலை செய்ததாக, ஜ.நா. சபையில் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் புர்ஹான் வானியை ஊடகங்கள் நாயகன் போல் சித்திரிப்பதாக, இந்திய வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியது. 
இந்த விவகாரத்தையும் புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய நிகழ்வுகளையும் தேர்தலில் முக்கிய விவாதங்களாக முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளன.

370 சட்டப்பிரிவு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது அதற்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 370-ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது. அதன்படி பாதுகாப்பு, வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர, பிற துறைகளின் கட்டுப்பாடு மாநில அரசின் வசம் விடப்பட்டது. இதனால், மத்திய அரசின் சட்டங்களையும், வகுக்கும் திட்டங்களையும் மாநில சட்டப்பேரவையின் சம்மதத்துடன்தான் அமல்படுத்த முடியும். மேலும், 35ஏ சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்டு, மாநில குடியுரிமை சட்டப்பேரவையின் வரம்புக்கு உள்படுத்தப்பட்டது.

இதனால், ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்குவது, வாக்களிப்பது, வேலை பெறுவது ஆகியவற்றை அந்த மாநிலத்தவர் மட்டுமே பெற முடியும். மேலும்,அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் திருமணம் செய்தால், சொத்துரிமையை இழந்துவிடுவர்.
இந்த சட்டப்பிரிவுகள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாஜகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன. 
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர், இதுதொடர்பாக விவாதங்கள் கிளம்பின. எனினும், இந்தச் சட்டப்பிரிவை நீக்கவோ, திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது என்று ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் கடந்த 2015 அக்டோபரில் தீர்ப்பளித்தது. மேலும், 370-ஆவது சட்டப்பிரிவு நிரந்தரமாக நீடிக்கும் என உச்சநீதிமன்றம் 2018 ஏப்ரல் மாதம் உறுதியளித்தது. எனினும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுவிடும் என்று பிடிபியும். தேசிய மாநாட்டுக் கட்சியும் கூறி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com