தேர்தல் நடத்தை விதிகளும்... மீறல்களும்...

தேர்தல் நடத்தை விதிகளும்... மீறல்களும்...

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தேர்தல் விதிகளை மீறியதாக ஆங்காங்கே புகார்களும் எழுந்துள்ளன. நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மக்களவை எம்.பி.க்கள், மாநிலங்களவை எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான பணியை தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தேர்தலை நடத்தும்போது, அதில், எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறக் கூடாது என்பதற்காக, பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலில் கடந்த 1951-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதெல்லாம், தேர்தல் நடத்தை விதிகள் என்று தனியாக எதுவுமில்லை.

கேரளத்தில் கடந்த 1960-இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதுதான் முதன்முதலில் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள். அதன் பிறகு, தேர்தலின்போது ஆளும் கட்சியினர் தங்களது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த 1979-இல் முதன் முதலில் தேர்தல் நடத்தை விதிகளை அதிகாரப்பூர்வமாக, தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது.


தேர்தல் நடத்தை விதிகள் என்பது, சாதாரணமாக அரசியல் தலைவர்கள் வரம்புமீறி பேசுவது என்பதோடு மட்டுமன்றி பொதுக் கூட்டம், பேரணி ஆகியவற்றை எவ்வளவு நேரம் நடத்தலாம்? தேர்தல் அறிக்கையில் எந்தெந்த விஷயங்கள் இடம்பெறலாம்? அந்த அறிக்கையை வாக்குப்பதிவுக்கு முன் எத்தனை நாட்களுக்குள் வெளியிட வேண்டும்? என்பது பற்றி விளக்கமாகக் கூறுகிறது.

மேலும், வேட்புமனுவைப் பெறுவது, அவற்றை பரிசீலிப்பது, இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் விதிமுறைகள் உள்ளன.
முன்பெல்லாம், மக்களவைக்கு அல்லது சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுதொடர்பான அறிவிக்கை வெளியிடப்படும். அதில் குறிப்பிட்டுள்ள நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். ஆனால், தற்போது தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகின்றன.


நடத்தை விதிகள் சொல்வது என்ன?
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி, தேர்தல் பிரசாரத்துக்காக, தங்களுடைய பதவியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. புதிதாக, பணி நியமனங்கள் செய்யக் கூடாது. புதிய கட்டடங்கள், மேம்பாலம், சாலைகள் திறப்பு விழா என ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறக் கூடாது. புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடக் கூடாது.
தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியினர், அரசின் செலவில் விளம்பரம் வெளியிடவோ, ஊடகங்களில் பிரசாரமோ செய்யக் கூடாது. அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக் கூடாது. அவரது வீட்டு முன் பிரசாரக் கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வாக்காளர்களைக் கவர்வதற்காக, அவர்களுக்கு பணமோ, பரிசுப்பொருளோ, மதுவோ தரக் கூடாது.
பொதுக் கூட்டங்கள் நடைபெறும் மைதானம், ஹெலிபேட், அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 
தேர்தலின்போது தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், தற்காலிகமாக அதிகாரி யாரையும் ஆளும் அரசு நியமிக்கக் கூடாது. ஒலி பெருக்கியைப் பயன்படுத்துவதற்கும், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கும் காவல் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
மேலும், பிரசாரக் கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் பேசும்போது, எதிரணியைச் சேர்ந்த தலைவர்களின் செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே விமர்சிக்கலாம். அவரது குடும்ப உறுப்பினர்கள், ஜாதி, மதம், இனம் குறித்து எந்த விதத்திலும் விமர்சிக்கக் கூடாது.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடைய இடங்களில் அரசியல் கட்சியினர் பிரசாரக் கூட்டம் நடத்தக் கூடாது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாது; வாக்காளர்களை மிரட்டக் கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகள் கூறுகின்றன.
பின்னாளில் தேர்தல் நடத்தை விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, உரிய ஆவணங்களின்றி ரொக்கப் பணம், தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள், பரிசுப் பொருள்கள் அதிக அளவில் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தலைவர்களின் சிலைகள், கட்சிகளின் சின்னங்கள் உள்ளிட்டவை மூடி மறைக்கப்படுகின்றன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல், வரும் 11-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியிட்டார். அன்றைய தினத்தில் இருந்தே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன.
ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும், தேர்தல் விதிகளை மீறியதாக, ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சகஜம். இந்த முறை, பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
கடந்த சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றியடைந்த செய்தியை அறிவித்தார். இந்த வெற்றியின் மூலம், செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்றும் பெருமிதத்துடன் கூறினார். சரியாக 4 நிமிடங்களில் அவர் தனது உரையை முடித்துக் கொண்டார்.


அடுத்த சில மணி நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறி விட்டார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குரல் எழுப்ப தொடங்கி விட்டனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றையும் தேர்தல் ஆணையம் நியமித்தது. அந்தக் குழு, பிரதமர் மோடியின் உரையை ஆய்வு செய்து, அவரது உரையில் தேர்தல் விதி மீறல் எதுவுமில்லை என்று கூறிவிட்டது. அதை ஏற்காத எதிர்க்கட்சிகள் பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி அடைந்ததை டிஆர்டிஓ அமைப்பின் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கலாம். ஆனால், பிரதமரே நேரடியாக அறிவித்ததுதான் இந்த எதிர்ப்புக்குக் காரணம்.

சர்ச்சையில் சிக்கிய கல்யாண் சிங்
அண்மையில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவி வகித்தவர் கல்யாண் சிங். 1999-இல் பாஜகவில் இருந்து விலகிய இவர், பின்னர் 2004-இல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். கடந்த 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது மகன் பாஜக எம்.பி.யாகவும், பேரன் உத்தரப் பிரதேச மாநில அமைச்சராகவும் உள்ளனர்.


அண்மையில், அலிகர் மாவட்ட பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலை கல்யாண் சிங் சமரசம் செய்ய முயன்றார். அப்போது, நாம் அனைவரும் பாஜகவினர்; வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும். இதுதான் நம் அனைவரின் விருப்பம் என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தேர்தல் விதிகள் அமலில் உள்ள நேரத்தில் தனது பதவிக்கு உரிய மரியாதையைத் தராமல், பாஜக நிர்வாகியைப் போல் நடந்து கொண்டதாகக் கூறி தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன.
வழக்கமாக, தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ள நேரத்தில், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஆளுநர் பதவி, அரசமைப்புச் சட்டப் பதவி என்பதால், கல்யாண் சிங் மீதான புகாரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது. அந்த புகாரை பரிசீலித்த குடியரசுத் தலைவர், அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். உள்துறை அமைச்சகம் தெரிவிக்கும் பதிலின் அடிப்படையில், கல்யாண் சிங்கின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

நமோ டிவி
இதேபோல், தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நமோ டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 முதலில் ஹிந்தி தேசிய செய்தித் தொலைக்காட்சி என்று கூறிய டாடா ஸ்கை நிறுவனம், பின்னர் பாஜகவின் விளம்பர சேவை தொலைக்காட்சி என்று விளக்கம் அளித்துள்ளது. புதிதாக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்பட வேண்டுமெனில் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும். இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு அந்த அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பழைய சர்ச்சைகள்
கடந்த 2014-இல் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மோடி, பாஜக தாமரை சின்னத்தை கையில் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2016-இல் குஜராத் பேரவைத் தேர்தலின்போது, கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2017-இல், கோவா சட்டப்பேரவைத் தேர்தலின்போது விதிகளை மீறி பேசியதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம்  எச்சரிக்கை விடுத்தது.
தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் எனற முனைப்போடு ஒவ்வொரு அரசியல் கட்சியும் செயல்பட்டு வருகின்றன. இதனால், தேர்தல் முடிவடையும் வரை தினந்தோறும் விதிமீறல் புகார்கள் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில், இது ஜனநாயகத் திருவிழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com