

குறுகிய காலமே பிரதமர் பதவியை வகித்த சரண் சிங், தனது பதவி காலத்தில் மக்களவை அலுவல்களில் பங்கேற்காத ஒரே பிரதமர் என்ற விசித்திர பெருமைக்கு உரியவர்!
நாட்டின் 5-ஆவது பிரதமராக 1979-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி முதல் 1980ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை பதவி வகித்தார் சௌதரி சரண் சிங்.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் நூர்பூர் என்ற கிராமத்தில் கடந்த 1902-ஆம் ஆண்டு பிறந்தார் சரண் சிங். படிப்பில் சிறந்து விளங்கிய அவர், 1925-இல் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அதைத்தொடர்ந்து, காஜியாபாத் நகர நீதிமன்றத்தில் சிவில் வழக்குரைஞராகத் தொழில்செய்துவந்தார்.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்ட சரண் சிங், 1929-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனைதான் அவரது முதல் சிறைவாசம். பின்னர் சுதந்திரப் போரில் பல பங்களிப்புகளுக்காக பல முறை சிறை சென்றார்.
மீரட் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸிலும் முக்கியத் தலைவராக உருவெடுத்தார்.
அன்றைய ஐக்கிய மாகாணத்தின் (இன்று உத்தரப் பிரதேச மாநிலம்) சட்டப் பேரவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டபோது சரண் சிங்குக்கு வயது 34. விவசாயிகள் பிரச்னைகள் குறித்து அவரது செயல்பாடுகள் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. சட்டப் பேரவையில் 1938-இல் அவர் தாக்கல் செய்த வேளாண் விளைபொருள் சந்தை மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பரவலான பாராட்டைப் பெற்றது. இடைத்தரகர்கள், வியாபாரிகள் ஆகியோரின் பேராசைக்கு இரையாகும் விவசாயிகளின் நலனைக் காக்கும் விதமாகப் பல நடவடிக்கைகளை அதில் சரண் சிங் முன்மொழிந்திருந்தார். அவருடைய மசோதாவைப் பின்பற்றி, பஞ்சாப் உள்பட, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் விவசாயிகள் நலன் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது.
விவசாயிகளின் தோழன்...!
விவசாயிகளை முக்கிய அரசியல் சக்தியாக உருவாக்கும் விதமாக சரண் சிங் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 1950-கள், 1960-கள் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூன்று முக்கியத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த சரண் சிங், நிலச் சீர்திருத்த சட்டங்களை கொண்டு வந்த பிறகு நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.
நேருவின் கொள்கைகளை எதிர்த்தவர்...
காந்திஜியின் அஹிம்சை வழியை முற்றிலுமாகப் பின்பற்றிய சரண் சிங், சுதந்திரத்துக்குப் பிறகு பிரதமர் நேருவின் பொருளாதாரக் கொள்கைகளை வெளிப்படையாக எதிர்த்து வந்தார்.
1959ஆம் ஆண்டில் நாகபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அரசியல், நிலக் கொள்கைகளைப் பொது வெளியில் எதிர்த்தபோது அனைவரின் கவனமும் இவர் பக்கம் திரும்பியது.
காங்கிரஸில் இருந்து விலகல்...
நேருவின் மறைவுக்கு பிறகு காங்கிரஸிலிருந்து வெளியேறி பாரதிய லோக் தளம் கட்சியைத் தொடங்கினார். ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ கட்சியின் துணையுடன் 1967-இலும், பின்னர் 1970-இலும் உத்தரப் பிரதேச முதல்வரானார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதலாவது முதல்வர் சரண் சிங்தான்.
இதே காலகட்டத்தில்தான் காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சிகள் பிற மாநிலங்களில் வலுப் பெற்று வந்தன.
1970 மற்றும் 1975 தேர்தல்களிலும் வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அவருடைய அரசியல் வாழ்வில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனம் முக்கியத் திருப்பமாக அமைந்தது.
அவசரநிலைக் காலம் விலக்கிக் கொள்ளப்பட்ட நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. பல கட்சிகள் இணைந்து உருவான ஜனதாவில் சரண் சிங்கின் கட்சியும் அடங்கும்.
மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த ஜனதா அரசில் துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் வகித்தார்.
மொரார்ஜி தேசாய் அரசில் உள்துறை, நிதித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
5-ஆவது பிரதமர்...
ஜனதா ஆட்சி கவிழ்ந்த பிறகு, நாட்டின் 5-ஆவது பிரதமராகப் பதவியேற்றவர் சரண் சிங்.
ஜனதா அரசில் முக்கிய அங்கம் வகித்தபோதிலும், அவரது பிரதமர் கனவு நிறைவேறாமல் இருந்தது. மொரார்ஜி தேசாயை பிரதமராக்கலாம் என்று ஜெயபிரகாஷ் நாராயண் முன்மொழிந்தது பரவலாக ஏற்கப்பட்டது. எனினும், பதவிக்காக போராடாமல் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதே தனது நோக்கம் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பல்வேறு உட்பூசல்களைத் தொடர்ந்து, மொரார்ஜி அரசு கவிழ்ந்தது. ஜனதா கட்சி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் சரண் சிங் தலைமையில் மத்தியில் அரசு உருவானது.
1979 ஜூலை 28-ஆம் தேதி முதல், 1980-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை சுமார் 170 நாள்களுக்குப் பிரதமராகப் பதவி வகித்தார் சரண்.
அவர் பிரதமர் பதவி வகித்த சமயத்தில், ஒரு நாள் கூட நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்கும் சூழல் இவருக்கு அமையவில்லை. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் சரண் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. இதையடுத்து, சரண் சிங்கின் பிரதமர் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. மிகக் குறைந்த காலம் பிரதமர் பதவியை வகித்ததுடன், ஒருநாள் கூட நாடாளுமன்றத்தை சந்திக்காத பிரதமர் என்ற வினோத சாதனையையும் சரண் சிங் படைத்தார்.
கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த சட்டம் இயற்றுவதில் முனைப்பு காட்டிய சரண் சிங்கின் பிறந்த தினமான டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.