
சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர், காவிரி வடிநிலப் பகுதியில் மிக முக்கியமானப் பகுதியாகக் கருதப்படுகிறது. வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழிலை முதன்மையாகக் கொண்ட இந்தத் தொகுதியில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு காலத்தில் தஞ்சையில் அதிக அளவில் நெல் பயிர் விளைந்ததால், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் அழைக்கப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற பெரியகோயில், உலகிலேயே முதல் அணையான 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, சரஸ்வதி மகால் நூலகம் போன்றவை தஞ்சைக்கு பெருமை சேர்க்கின்றன.
சுதந்திரத்துக்குப் பிறகு, 1952-இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில், இத்தொகுதியிலிருந்து ஆர். வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவரானார்.
தொடர்ந்து, 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெங்கட்ராமனே வெற்றி பெற்றார். அதே ஆண்டில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.வி. சேர்வையும், 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி. வைரவ தேவரும் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் வசம் இருந்த இந்தத் தொகுதியை 1967-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக திமுக கைப்பற்றியது. தொடக்கத்தில் திமுகவில் இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் 1967, 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும், பின்னர் அதிமுகவில் இணைந்த அவர் 1977-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். சிங்காரவடிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம், மீண்டும் இத்தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. தொடர்ந்து, சிங்காரவடிவேல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1980, 1984, 1989 ஆகிய தேர்தல்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே. துளசிஅய்யா வாண்டையார் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ் வெற்றி பெற்று வந்த இத்தொகுதியை 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திமுக மீண்டும் கைப்பற்றியது. இதில், வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தொடர்ந்து 1998, 1999, 2004, 2009 ஆகிய தேர்தல்களிலும் இத்தொகுதியைத் தக்க வைத்து கொண்டார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த இத்தொகுதியை, 1977-ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக மீண்டும் 2014 -இல் கைப்பற்றியது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் 9 முறையும், திமுக 7 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
சாதி விவரம்: இந்தத் தொகுதியில் 2004-ஆம் ஆண்டு வரை கள்ளர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால், 2009-ஆம் ஆண்டில் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு கள்ளர், தாழ்த்தப்பட்டோர், அகமுடையார் ஆகியோர் அதிக அளவில் உள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
வாழ்வாதாரப் பிரச்னைகள்: ஒருகாலத்தில் 3 போகம் விளைச்சல் கண்ட இந்தத் தொகுதியில் இப்போது ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியாகிவிட்டது. இத்தொகுதியின் உயிர் நாடியான காவிரி நீர் பிரச்னை நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம். ஒவ்வொரு தேர்தலிலும் காவிரியில் நமது உரிமையை மீட்டெடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளிப்பது தொடர்கிறது. ஆனால், இருக்கும் உரிமையும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருவதால், வருங்காலத்தில் காவிரி நீர் கிடைக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது. என்றாலும், தேர்தலின்போது காவிரி நீர் பிரச்னை தொடர்பாக கட்சிகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொள்வது மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தொகுதியில் பிரதான சாகுபடி நெல் பயிர். ஆனால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே உள்ளது. மேலும், விவசாயம் சார்ந்த பகுதியான இந்தத் தொகுதியில் வேளாண் சார்ந்த தொழில்கள் இல்லை. குறிப்பாக, மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு போன்றவை இல்லாததே இந்தத் தொகுதியின் மிகப் பெரிய குறைபாடாக உள்ளது.
இந்நிலையில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாதுகாக்கப்பட்ட பெட்ரோ கெமிக்கல் போன்ற திட்டங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையிலும், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு முழுவீச்சில் உள்ளது. இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகத் தமிழக அரசு மீது புகார்கள் எழுப்பப்படுகின்றன.
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தென்னை விவசாயம் முதன்மைத் தொழிலாக இருந்தது. இதை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இருந்தனர். இந்த நிலையில், 2018, நவம்பர் 15-ஆம் தேதி வீசிய கஜா புயல் காரணமாக இத்தொகுதிகளில் ஏறத்தாழ 45 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால், இப்பகுதியின் பொருளாதாரம் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் காரணமாக தென்னை விவசாயிகளின் வாழ்க்கை 20 ஆண்டுகாலம் பின்னோக்கி நகர்ந்துவிட்டது.
பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கினாலும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக இல்லை. இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை என்ற புகாரையும் ஏராளமானோர் கூறி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட நேரத்தில் பிரதமர் வரவில்லை என்ற அதிருப்தி குரலும் ஒலிக்கிறது. இவையெல்லாம் இத்தேர்தலில் எதிரொலிக்கும்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கணிசமான அளவில் மீனவர்கள் உள்ள நிலையில் அங்கு மீன் பதப்படுத்தும் மையம், சேமிப்புக் கிடங்கு இல்லை என்பதும் குறையாகவே உள்ளது. கஜா புயலால் மீனவர்கள் படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை இழந்து, மிகப் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கும் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரக்கூடிய அளவுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால், மீனவர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது.
வேட்பாளர்கள்: இத்தொகுதியில் 1984-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கடைசி 5 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இதில், இருமுறை மத்திய இணை அமைச்சராக இருந்தார். ஆனால், 2014-ஆம் ஆண்டில் இத்தொகுதியில் டி.ஆர். பாலு போட்டியிட்டதால், இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்போது, மீண்டும் ஒன்பதாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார் பழனிமாணிக்கம்.
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமாகா மாநிலச் செயற் குழு உறுப்பினர் என்.ஆர். நடராஜன் அறிமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். ஜி.கே. மூப்பனார் காலத்தில் 1999-ஆம் ஆண்டில் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்த தமாகா, தனித்துப் போட்டியிட்டது. அப்போது, இத்தொகுதியில் தமாகா 69,025 வாக்குகளுடன் மூன்றாமிடத்தைப் பெற்றது. இப்போது, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறது. ஆனால், சைக்கிள் சின்னம் கிடைக்காததால், ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிடுகிறார் நடராஜன்.
அமமுகவை சேர்ந்த பொன். முருகேசன் சுயேச்சை வேட்பாளராக பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரும் தேர்தல் களத்தில் புதியவர். இதேபோல, மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையைச் சேர்ந்த சம்பத் இராமதாசும், நாம் தமிழர் கட்சி சார்பில் ந. கிருஷ்ணகுமாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இருவரும் அறிமுக வேட்பாளர்கள்தான். இத்தொகுதியில் மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
யாருக்கு வாய்ப்பு? 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வென்ற அதிமுகவை சேர்ந்த கு. பரசுராமன் 5,10,307 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த டி.ஆர். பாலுவுக்கு 3,66,188 வாக்குகள் கிடைத்தன. அதிமுக 1,44,119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 3 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றன.
இந்தத் தொகுதியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் அதிமுக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமாகாவை பொருத்தவரை அதிமுக, பாஜக வாக்குகளை முழுமையாக நம்பி இருக்கிறது. ஆனால், அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்கும் என்பது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
அதுபோல, இம்முறை இத்தொகுதியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மீதான விவசாயிகளின் எதிர்ப்பலை, அதிமுக வாக்குகளை அமமுக பிரிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை தனக்குச் சாதகமாக திமுக நம்பி இருக்கிறது.
தங்களுக்கு வலுவான அடித்தளம் கொண்ட தொகுதிகளில் தஞ்சாவூரும் ஒன்று என்ற நம்பிக்கையில் அமமுகவினர் உள்ளனர். எனவே இத்தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர்களும் உள்ளனர்.
இதனிடையே, நடுநிலையாளர்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இருக்கின்றனர். எனவே, யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலையே தஞ்சாவூர் தொகுதியில் நிலவுகிறது.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் 7,10,968
பெண்கள் 7,49,201
மூன்றாம் பாலினம் 97
மொத்தம் 14,60,266
- வி.என். ராகவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.