மத உணர்வு.. ஜாதி அரசியல்.. வாக்கு வங்கி!

நம் அண்டை மாநிலமான கேரளம், நாட்டின் பிற மாநிலங்களை விடவும் வித்தியாசமானது. 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் கல்வியறிவு
மத உணர்வு.. ஜாதி அரசியல்.. வாக்கு வங்கி!

நம் அண்டை மாநிலமான கேரளம், நாட்டின் பிற மாநிலங்களை விடவும் வித்தியாசமானது. 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் கல்வியறிவு பெற்றமாநிலம், ஆண்களை விட பெண்கள் அதிகமாக வசிக்கும் மாநிலம் (ஆயிரம் ஆண்களுக்கு 1,084 பெண்கள்), மனிதவள குறியீட்டில் நாட்டில் முதலிடத்தில் உள்ள மாநிலம் போன்ற பல்வேறு பெருமைகள் கேரளத்துக்கு உண்டு.

உலகிலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக முறையில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது இங்குதான். இன்று நாட்டின் பிற மாநிலங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு பெருமளவு சரிந்து போனாலும், கேரளத்தில் வலிமையோடு கேரளத்தின் ஆட்சியிலும் இருக்கிறார்கள்.
மற்ற இடங்களைப் போலவே கேரளத்திலும் ஏராளமான கட்சிகள் இருந்தாலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும்தான் இடையே தான் நேரடி மோதல். மக்களவைத் தேர்தல்களில் இந்த இரு கூட்டணிகளே வெற்றி பெறும் சூழல் நிலவி வந்தது.

கேரளத்தில் உள்ள 3.33 கோடி பேரில் 54.73 சதவீதம் பேர் ஹிந்துக்கள், 26.76 சதவீதத்தினர் முஸ்லிம்கள், 18.38 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள். மாநிலத்தில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 20 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இது தவிர, கேரளத்துக்கு 9 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இங்கு தேசிய கட்சிகளே ஆதிக்கம் செய்தாலும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலே பிரதிபலிக்கிறது. தேசிய அளவில் தேர்தலை ஒட்டி வீசும் அலை, இங்கே பிரதிபலிப்பதில்லை. கடந்த 2004 தேர்தலின்போது இங்கே இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசிய போதும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 12 இடங்களைக் கைப்பற்றியதும் இதற்கு உதாரணங்கள். அதேபோல, சில மக்களவைத் தேர்தல்களின் முடிவுகள்,அடுத்து வரும் பேரவைத் தேர்தல் முடிவுகளைக் கோடிட்டு காட்டுவதாகவும் அமைந்ததுண்டு.

எனினும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதும், சபரிமலை விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்ததும், வரும் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

கூட்டணி அரசியல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, கேரளத்தின் அரசியல் சூழலை கூட்டணிகளே நிர்ணயித்து வந்துள்ளன. தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் இந்தக் கூட்டணிகளின் மூலமே தேர்தலைச் சந்தித்து வருகிறது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இந்த இரு கூட்டணிகளும் பல ஆண்டுகளாக சுழற்சி முறையில் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன. இவற்றை தவிர, அண்மைக் காலமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கேரளத்தில் வாக்குகளைப் பிரித்து வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் கேரளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக, மாநிலத்தில் பரவலாக அடிப்படைக் கட்டமைப்புகள் பெருமளவில் சிதைந்தன. அப்போது மேற்கொள்ளப்பட்ட அரசு நிவாரணப் பணிகளும், சில இடங்களில் காணப்பட்ட அதிருப்தியும் தேர்தல் களத்திலும் எதிரொலிக்கக்கூடும். அதேபோல, சபரிமலை விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளும் பிரசாரத்தில் பிரதிபலித்து வருகின்றன. கேரளத்தைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர், அரபு நாடுகள் நாடுகளில் வசிக்கின்றனர். அந்த நாடுகளுடன் பேணப்படும் உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் மாறிவரும் சூழல் போன்றவையும் தேர்தலின் போக்கைத் தீர்மானிக்கும்.

பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 14 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர, 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் இந்தக் கூட்டணியை ஆதரிக்கின்றனர். கேரள சட்டப்பேரவையில் 91 எம்எல்ஏக்களுடன் வலுவான கூட்டணியாகத் திகழ்கிறது. 

கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்திருக்கிறது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர். 92 வயதிலும் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக மாநிலம் முழுவதும் சுற்றினார். எனினும், தேர்தலுக்குப் பிறகு மைய அரசியலில் இருந்து அவர் ஒதுங்கியிருப்பது, ஈழவ சமுதாயத்தினரின் வாக்குகளை ஈர்ப்பதில் சிரமத்தை விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், பினராயி விஜயன் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத் திட்டங்களாலும், சீர்திருத்த நடவடிக்கைகளாலும் இளம் வாக்காளர்களின் வாக்குகள் பெருமளவில் விழும் என்று கூறப்படுகிறது. கூட்டணியில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு சில இடங்களில் வாக்குகளைப் பெற்று தரும் என்று கருதப்படுகிறது. 

வரும் தேர்தலில் மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி போட்டியிடுவதால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உற்சாகத்துடன் காணப்படுகிறது. இந்தக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் (மாணி மற்றும் ஜேக்கப் பிரிவுகள்) ஆகிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

சபரிமலை விவகாரத்தை அரசு கையாண்ட விதம் குறித்து காங்கிரஸ் கூட்டணி தனது அதிருப்தியைத் தெரிவித்தது. மேலும், மாநிலத்தில் ஏரத்தாள சரிபாதி அளவில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மனநிலை போன்றவை தேர்தல் அரங்கில் பங்காற்றும் என்று கருதப்படுகிறது. கடந்த தேர்தலை விட இரண்டு அல்லது மூன்று தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்புடன் காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், கேரளத்திலும், தமிழகத்திலும் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் உறவில் காணப்படும் முரண்பாடுகள், இரு தரப்பிலும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்.

பாஜக நிலவரம்: தற்போதைய நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, வாக்குகளை ஈர்ப்பதில் பின்தங்கியே இருக்கிறது. எனினும், கடந்த சில தேர்தல்களாக பாஜக தலைமையிலான கூட்டணியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்து வருகிறது. 2009 மக்களவைத் தேர்தலில் 10 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம், கடந்த மக்களவைத் தேர்தலில் 14 சதவீதமாக அதிகரித்தது. மேலும், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அது 15 சதவீதமாக அதிகரித்ததோடு, பாஜகவின் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால், நேமம் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 

தற்போது பாஜக கூட்டணியில் துஷார் வெள்ளாப்பள்ளியின் பாரத தர்ம ஜன சேனா, கேரள காங்கிரஸ் (தாமஸ் பிரிவு), பிரஜா சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூருக்கு அடுத்து 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஓ.ராஜகோபால் இரண்டாமிடம் பெற்றார். தற்போது அங்கு மணிப்பூர் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மீண்டும் சசி தரூர் போட்டியிடுகிறார். திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபியும், வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து பாரத தர்ம ஜன சேனாவின் துஷார் வெள்ளாப்பள்ளியும் போட்டியிடுகின்றனர். சபரிமலை விவகாரத்தைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் ஹிந்துக்களின் வாக்குகளில், குறிப்பாக நாயர் மற்றும் ஈழவர் சமுதாய வாக்குகளில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. 

மிகுந்த அரசியல் உணர்வுள்ள இம்மாநிலத்தில் யதார்த்தத்தின் அடிப்படையில் விழுந்த வாக்குகளை, தற்போது வாக்கு வங்கிக் கணக்கீடுகள் ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அவை கேரளத்தில் எதிரொலிக்குமா என்பது, வரும் 23-ஆம் தேதி தெரிந்து விடும்.


தொடரும் அரசியல் மோதல்கள்

கடந்த பல ஆண்டுகளாகவே கேரளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மோதி வருகின்றன. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடர்கின்றன. கடந்த 1968 முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ்-பாஜக தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹிந்து அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. கடந்த 2000 முதல் இதுவரை மட்டும் 172 அரசியல் படுகொலைகள் கேரளத்தில் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆர்எஸ்எஸ்-பாஜக தொண்டர்கள் 65 பேரும், மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 85 பேரும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் 11 பேரும் அடங்குவர். இவற்றில் 36 சதவீத கொலைகள் கண்ணனூர் மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, இடதுசாரி முன்னணியின் ஆட்சிகளில் கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 
இந்த கொலைகளுக்கு பெரும்பாலும் ஆர்எஸ்எஸ்-மார்க்சிஸ்ட் மோதல்கள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், பிற கட்சிகளும் அதில் விதிவிலக்கல்ல. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த நஸீருதீன் என்பவரை, கடந்த 2017 ஜூலை மாதம் எஸ்டிபிஐ தொண்டர்கள் படுகொலை செய்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாவட்ட முன்னாள் பிரமுகரும், புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கியவருமான டி.பி.சந்திரசேகரன், 2012 மே 4-ஆம் தேதி 51 இடங்களில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது மார்க்சிஸ்ட் கட்சியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், தங்கள் கட்சியின் அரசியல் எதிரிகளைத் திட்டமிட்டு தீர்த்துக் கட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் எம்.எம்.மாணி கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகப் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

வயநாட்டில் ராகுல்!


அமேதி தொகுதி எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் தேர்தலில் கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். தென் இந்தியாவில் உள்ள மத்திய அரசுக்கு எதிரான வாக்குகளைக் கவரும் முயற்சியாக இது கருதப்படுகிறது. கடந்த 2009-இல் உருவாக்கப்பட்ட வயநாடு தொகுதியில் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் தலா 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து ஒரு தொகுதியும் இடம்பெற்றுள்ளன.

2009 முதல் எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்.ஐ.ஷாநவாஸ், கடந்த நவம்பர் மாதம் காலமானார். கடந்த மக்களவைத் தேர்தலில் இங்கு 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஷாநவாஸ். ராகுல் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதால் தென் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாக்குகளைக் கவர முடியும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது.

எதிரொலிக்குமா சபரிமலை தீர்ப்பு?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய பாரம்பரியமாக இருந்துவந்த தடையை நீக்கி, உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை முதல்வர் பினராயி விஜயன் அரசு நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டியது. இதையடுத்து, ஐயப்ப பக்தர்களும், ஹிந்து அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. ஆலயத்தில் நுழைய திருப்தி தேசாய் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் நடத்திய முயற்சிகளை, பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள். பெண்களின் ஆலய நுழைவைக் கண்டித்து, பந்தனம்திட்டாவிலும், பிற இடங்களிலும் கடையடைப்புகளும், போராட்டங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் காரணமாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். 


அதைத் தொடர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கியதை அடுத்து, சந்நிதானம், பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட மீண்டும் போராட்டம் தொடங்கியது. 
பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தடையுத்தரவு சிறது, சிறிதாக விலக்கப்பட்டது. டிசம்பர் 26-ஆம் தேதி பெண்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களைத் திரட்டி ஐயப்ப ஜோதி ஊர்வலங்களை ஹிந்து அமைப்புகள் நடத்தின. இந்த ஊர்வலங்கள் மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். ஊர்வலம் நடத்திய 1,400 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

ஜனவரி 3-இல் நள்ளிரவில் 40 வயதுடைய இரு பெண்கள் மாறுவேடத்தில் போலீஸார் சந்நிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். அதையடுத்து, மீண்டும் கடையடைப்பும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. 

வரும் மக்களவைத் தேர்தலில், சபரிமலை விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. எனினும், காங்கிரஸ் மற்றும் பாஜக அந்த உத்தரவைப் புறக்கணித்து, தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை குறித்து பேசுவோம் என்று உறுதி கூறியுள்ளன. சில நாள்களுக்கு முன்பு சபரிமலை விவகாரம் குறித்து மதவுணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com