

பிரெஞ்சு கலாசாரத்தின் இந்திய ஜன்னல், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மாநிலம், பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட குட்டி இந்தியா என பன்முகத்தன்மை கொண்ட தொகுதியாக விளங்குகிறது புதுச்சேரி மக்களவைத் தொகுதி.
முற்றிலும் தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட புதுச்சேரி பிராந்தியம், காரைக்கால் பிராந்தியம், மலையாள மொழி பேசும் மக்களைக் கொண்ட மாஹே, தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட ஏனாம் என 4 பிராந்தியங்களை கொண்டது இந்தத் தொகுதி. தொகுதி முழுவதும் பரவலாக வட இந்திய மக்களும் வசிக்கின்றனர்.
புதுச்சேரியில் 23 சட்டப்பேரவைத் தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும், மாஹே, ஏனாமில் தலா ஒரு தொகுதியும் என மொத்தம் 30 பேரவைத் தொகுதிகள் இந்த மக்களவைத் தொகுதியில் உள்ளன.
100 சதவீத கல்வியறிவு பெற்ற படித்த நடுத்தர மக்கள் புதுவையில் வசிக்கின்றனர்.
இதுவரை 14 முறை மக்களவைத் தேர்தலை புதுச்சேரி தொகுதி சந்தித்திருக்கிறது. இதில் காங்கிரஸ் 10 முறையும், 1974-இல் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் அதிமுக 2 முறையும், திமுக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1980 முதல் 1996 வரை தொடர்ந்து 5 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
தென்னிந்தியா முழுவதும் மாநிலக் கட்சிகள் ஆதிக்கத்தால் காங்கிரஸ் கட்சியினர் ஆதிக்கம் குறைந்தபோதிலும், புதுவையில் இதுவரை காங்கிரஸ் கட்சியினர் ஆதிக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.
2014-இல் தான் முதல்முறையாக என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டு இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. அப்போது என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் 2 லட்சத்து 55 ஆயிரத்து 826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய தற்போதைய முதல்வர் வே.நாராயணசாமி ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 972 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 657 வாக்குகளும், திமுக வேட்பாளர் நாஜீம் 60 ஆயிரத்து 580 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் இரா.விசுவநாதன் 12,709 வாக்குகளும் பெற்றனர்.
இந்த முறையும் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியும், பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸும் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் வேட்பாளராக களம் காணும் வைத்திலிங்கம் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி ஆவார். இவரது தாத்தா வைத்திலிங்கம் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் மேயராகப் பதவி வகித்தவர். தந்தை வெங்கடசுப்ப ரெட்டியார், புதுவை முதல்வராகப் பதவி வகித்தவர். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைத்திலிங்கமும், 1975-ஆம் ஆண்டு முதலே தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.
1980-ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள அவர், 8 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். தனது 41-ஆவது வயதில் 1991-இல் புதுவை முதல்வராகப் பதவியேற்றார்.
பின்னர், 2008-ஆம் ஆண்டில் மீண்டும் 2-ஆவது முறையாகவும் முதல்வராகப் பதவி வகித்தார். பொதுப் பணித் துறை அமைச்சர், பேரவைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்: காங்கிரஸுக்கு நேரடிப் போட்டியாக, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுமுக அரசியல்வாதியான கே.நாராயணசாமி களத்தில் உள்ளார்.
இவரது குடும்பமும் அரசியல் பின்புலம் கொண்டது தான். இவரது தந்தை கேசவன், திமுகவில் முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவர். எம்.எல்.ஏ.வாக இருந்த கேசவன், புதுவை அரசின் கொறடாவாகவும் பதவி வகித்துள்ளார்.
அனுபவம்-இளமை என்ற இரு சொற்களையே இரு கட்சிகளும் மாறி மாறி தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களிடம் முன்வைத்து வருகின்றன.
எதிர்க்கட்சி வேட்பாளர் புதுமுக அரசியல்வாதி, அவர் வெற்றி பெற்றால் மக்களவை நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளவே 5 ஆண்டுகளை ஆகும். எனவே, புதுவை மாநிலப் பிரச்னைகளை மக்களவையில் எதிரொலிக்க முடியாது என்றும், புதுவை பிரச்னைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் அனுபவசாலியான வைத்திலிங்கம் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண வழிபிறக்கும் என்பது காங்கிரஸ் கட்சியின் தீவிர பிரசாரமாக இருந்து வருகிறது.
ஆனால், எதிர்க்கட்சியினரோ, இளம் அரசியல்வாதி தில்லிக்குச் சென்றால் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியும். நீண்ட காலம் புதுவைக்கு சேவை புரியவே இளைஞரை அறிமுகப்படுத்தியுள்ளோம், வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த இருவரைத் தவிர, மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநிலத் தலைவர் மருத்துவர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியனும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 3 முறை திமுகவில் எம்எல்ஏவாக இருந்தவர்.
நிதி நெருக்கடியில் புதுவை: பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்தியாவுடன் புதுவை 1.11.1954-இல் இணைக்கப்பட்டாலும், 1963-இல்தான் இது யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது.
அப்போது முதல் புதுவைக்கு மத்திய அரசு 100 சதவீத மானியத்தை வழங்கி வந்ததால், மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
அதுவரை மத்தியத் தொகுப்பில் இருந்த புதுவைக்கு, 2007-ஆம் ஆண்டு முதல் தனிக் கணக்கு தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, புதுவைக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் மானியத்தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்போது 25 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
மாநிலங்கள் 43 சதவீத மானியத்தொகையை மத்திய அரசிடம் இருந்து பெறும் நிலையில், யூனியன் பிரதேசமான புதுவைக்கு அதைவிடக் குறைவாகவே மானியத்தொகை கிடைக்கிறது.
இந்த நிலையில், புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சுற்றுலா வருவாயைத் தவிர பிற வருவாய் இல்லாத நிலையில், மத்திய அரசின் மானியத்தொகையும் குறைக்கப்பட்டதால் புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
புதுவையில் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 10,000 பேருக்கு கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.
நிதியை அதிகரிக்க சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் பிற வரியினங்களைப் பல மடங்கு புதுவை அரசு உயர்த்தியுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் உள்ளது. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன.
மேலும், புதுச்சேரியில் தொழில் வளத்தை பெருக்க துறைமுகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடம் வலுவாக உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணைநிலை ஆளுநர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டை ஆளும்கட்சி மக்களிடம் கூறி வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளால் புதுவைக்கு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பிற கட்சிகளும் இந்த வாக்குறுதியை அளித்துள்ளன. இந்தியாவில் அதிகளவு பணம் செலவு செய்யும் தொகுதிகளில் ஒன்றாக புதுச்சேரி தொகுதி தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 4,59,504
பெண்கள்: 5,13,810
மூன்றாம் பாலினத்தவர்: 96
மொத்தம்: 9,73,410
இதுவரை வென்றவர்கள்
1967 சிவப்பிரகாசம் காங்கிரஸ்
1967 சேதுராமன் காங்கிரஸ்
1971 மோகன் குமாரமங்கலம் காங்கிரஸ்
1974 அரவிந்த் பாலா பஜனுவர் அதிமுக
1977 அரவிந்த் பாலா பஜனுவர் அதிமுக
1980 ப.சண்முகம் காங்கிரஸ்
1984 ப.சண்முகம் காங்கிரஸ்
1989 ப.சண்முகம் காங்கிரஸ்
1991 பரூக் மரைக்காயர் காங்கிரஸ்
1996 பரூக் மரைக்காயர் காங்கிரஸ்
1998 எஸ்.ஆறுமுகம் திமுக
1999 பரூக் மரைக்காயர் காங்கிரஸ்
2004 மு.ராமதாஸ் பாமக
2009 வே.நாராயணசாமி காங்கிரஸ்
2014 ஆர்.ராதாகிருஷ்ணன் என்.ஆர்.காங்கிரஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.