543 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஏப்ரல் 11-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 7 கட்டமாக நடைபெறும் 17-ஆவது மக்களவைத் தேர்தல், மே 19-இல் நிறைவடைகிறது. மே 23-இல் வெளியாகும் நம் நாட்டின் வாக்குப்பதிவு விவரங்களையும், தேர்தல் முடிவுகளையும் அறிந்துகொள்ள ஒட்டுமொத்த உலகும் விழிப்போடு காத்திருக்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சர்வதேச சமூகத்தில் இந்தியா என்றாலே, மகளிரைக் கொண்டாடும் தேசம் என்ற ஒரு பார்வை மேலோங்கியிருக்கிறது. ஆயினும், ஜனநாயகத்தை தாங்கும் தூண்களில் ஒன்று என நாம் மார்தட்டி பெருமைப்படக் கூடிய நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு போதிய அளவு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா என வினவினால், பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும்.
முதலில், சர்வதேச அளவில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தை உற்றுநோக்கினால், வெறும் 23.4 சதவீத பெண்கள் மட்டுமே பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பது தெரிய வருகிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில் வரலாற்று ரீதியாக மரபுவழி சமுதாயம் அதாவது ஆணாதிக்க சமூகம் காரணமாக, பெண்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் நியாயமான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுதவிர வகுப்புவாதம், ஜாதி போன்ற கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளும் பாலினம் சார்ந்த பாகுபாட்டிற்கு வழிவகுக்கின்றன.
பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுப்பு, தனிமனித சுதந்திரத்தில் குறுக்கீடு என பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் உலக நாடுகளின் மத்தியில், அவர்களுக்கு மிக விரைவிலேயே வாக்குரிமை அளித்த வெகு சில தேசங்களில் இந்தியாவும் ஒன்று என்பது நாம் பெருமைப்படக் கூடிய விஷயம். இதன் விளைவாக நம்நாட்டின் அடிப்படை கட்டமைப்பான 3 அடுக்கு பஞ்சாயத்து முறையில், பெண்கள் ஏறத்தாழ 46 சதவீத இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனினும், இதே அளவு பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பிரதிபலிக்கவில்லை. பெரும்பாலான தெற்காசிய நாடுகளைக் காட்டிலும், நம் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது.
10-ஆவது மக்களவைத் தேர்தலிலிருந்து மக்களவையில் பெண்களின் பங்களிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 11.8 சதவீதத்தினர் பெண்கள். இதற்கு சற்று குறைவாக மேலவையில் 11 சதவீத பெண்கள் தற்போது பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
இந்தியாவைக் காட்டிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூடான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெண்களுக்கு முறையே 30.5 சதவீதம், 20.6 சதவீதம் பிரதிநிதித்துவம் அளித்துள்ளன. பெண்களுக்கு மத்திய அமைச்சரவையில் அங்கீகாரம் அளித்த உலகின் 181 நாடுகளின் பட்டியலில், இந்தியா ஆறு பெண் அமைச்சர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி, தற்போது 88-ஆவது இடம் வகிக்கிறது. மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் பெண்களின் விகிதம் அதிகரித்த போதிலும், வெற்றிபெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணுமளவுக்குத்தான் இன்னமும் உள்ளது.
நாடாளுமன்றத்துடன் ஒப்பிடுகையில், மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. நம்நாட்டின் மாநில சட்டப் பேரவைகளில் வெறும் 9 சதவீத பெண்கள் மட்டுமே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். மாநில சட்ட மேலவைகளில் இந்த விகிதம் வெறும் 5 சதவீதமாகவே உள்ளது.
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க முற்படும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே நீர்த்துப்போய்விட்டது. தேர்தல் ஆதாயம் பெறும் நோக்கில், இதற்கு மீண்டும் புத்துயிரூட்ட அரசியல் கட்சியினர் தற்போது வரிந்துகட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகுதியும், திறமையும் வாய்ந்த பெண்களுக்கு அரசியலில் சிறப்பான பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமாயின், அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுக்கும் அரசியல் கட்சிகளின் விருப்பமின்மை, சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனோபாவம், ஊழல், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்குத் தீர்வு காண்பது மிக அவசியம். சமத்துவம், சமூக நீதி என்று அறைகூவல் விடும் அரசியல் கட்சிகள், ஆட்சி, அதிகாரம் என்று வரும்போது மட்டும் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க தயங்குவதும், தங்கள் கடமையை இருட்டடிப்பு செய்வதும் ஆணாதிக்கத்தின் உச்சம் என்று கூறுவதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.
இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் கூட, முடிவு எடுத்தலில் பெண்களுக்கு எங்கெல்லாம் சிறப்பான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதோ, அங்கு ஒட்டுமொத்த சமூக- பொருளாதார நிலையும் சிறப்பான உச்சத்தை எட்டியிருக்கிறது என்பதை அனுபவரீதியாக உணர்ந்த தலைமுறையினர் நாம். இதற்கு நடைமுறை உதாரணங்களாக எத்தனையோ ஆளுமைகளைக் கூறலாம்.
மேலும், வாக்களிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, வாக்களிப்போரில் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்புவரை குடும்ப ரீதியாக முடிவெடுத்து வாக்களித்த நிலை மாறி, இன்று மகளிர் சுதந்திரமாகச் சிந்துத்து வாக்களிக்கத் தொடங்கியிருக்கிறனர். இதனால், மகளிர் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் தேர்தல் முடிவுகள் அமையக்கூடும்.
எனவே, ஆட்சி, அதிகாரத்தில் அதிகப்படியான பெண்களை அமர்த்தவும், அரசியலில் நிலவும் பாலின பாகுபாட்டைக் களையவும் இதுதான் சரியான தருணம் என்றால் அது மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


