ஆந்திரத்தில் ஜெயிக்கப் போவது யாரு?

மக்களை ஈர்ப்பதற்காக நாயுடு வெளியிட்ட இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் கடைசி நேரத்தில்தான் மக்களைச் சென்றடைந்தன.
ஆந்திரத்தில் ஜெயிக்கப் போவது யாரு?

மக்களை ஈர்ப்பதற்காக நாயுடு வெளியிட்ட இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் கடைசி நேரத்தில்தான் மக்களைச் சென்றடைந்தன. மேலும், தனக்கு எதிரான வாக்குகளை காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியும் பிரிக்கும் என்ற நாயுடுவின் நம்பிக்கை பொய்த்துப் போக வாய்ப்புள்ளது

அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மக்களவைக்கு முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற கடந்த 11-ஆம் தேதி, சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற்று முடிந்து விட்டது. மொத்தமுள்ள 175 இடங்களில் குறைந்தபட்சம் 88 இடங்களை வென்றால்தான் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும்.

இத்தேர்தலில் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி நிலவியது. 

அண்மையில் 69 வயதை எட்டிய சந்திரபாபு நாயுடு சுமார் நாற்பது ஆண்டு காலமாக அரசியல் களத்தில் இருக்கிறார். எத்தனையோ தேர்தல் களங்களை அவர் கண்டுள்ளார். 1995-இல் தனது மாமனாரும் அப்போதைய ஆந்திர முதல்வருமான என்.டி.ராம ராவிடம் இருந்து அவர் ஆட்சியைக் கைப்பற்றினார். 

"குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார்' என்ற விமர்சனம் இருந்தாலும் தனது நிர்வாகத் திறமையாலும், அரசியல் சாதுர்யத்தாலும் சந்திரபாபு நாயுடு ஆந்திரத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உயர்ந்தார்.

கடந்த 2004, 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் அவரது கட்சி, மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியிடம் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தபோதிலும், 2014-இல் நாயுடு மீண்டு எழுந்தார். அப்போது ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாணின் ஆதரவு, பாஜக கூட்டணி ஆகியவற்றுடன் களமிறங்கிய நாயுடு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தார்.

எனினும், கடந்த 11-ஆம் தேதி நடந்து முடிந்த ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தல் என்பது நாயுடுவைப் பொருத்தவரை, இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான தேர்தலாகும். கடந்த காலங்களில் தெலுங்கு தேசம் தேர்தல்களில் தோற்றாலும் அக்கட்சியால் மீண்டெழ முடிந்தது. ஆனால் இம்முறை நடந்து முடிந்துள்ள தேர்தல்- அக்கட்சி வென்றே தீர வேண்டிய நிலையில் நடத்தப்படும் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடுவுக்கு மட்டுமின்றி அவரது முக்கிய அரசியல் எதிரியான 46 வயதாகும் ஜெகன்மோகனுக்கும் இத்தேர்தல் அரசியல் ரீதியில் வாழ்வா - சாவா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமைந்து விட்டது. ஏன் அப்படி என்பதைப் புரிந்து கொள்ள ஜெகனின் பத்தாண்டு அரசியல் பயணத்தை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

2009-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. எனினும், அதே ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒய்.எஸ்.ஆர். இறந்தார். அப்போது தந்தை வகித்து வந்த முதல்வர் பதவியை தனக்குத் தருமாறு காங்கிரஸ் மேலிடத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி நெருக்கடி கொடுத்தார்.

எனினும், அதை ஏற்காத காங்கிரஸ் மேலிடம், ரோசய்யாவை முதல்வராக்கியது. ஆனால் அவர் அப்பதவியில் அதிக காலம் நீடிக்கவில்லை. 2010 நவம்பரில் கிரண்குமார் ரெட்டியை புதிய முதல்வராகத் தேர்வு செய்தது காங்கிரஸ். இதனால் ஏமாற்றமடைந்த ஜெகன்மோகன் காங்கிரஸில் இருந்து விலகினார். ஒய்.எஸ்.ஆர் மறைவைத் தாங்கொணாமல் ஆந்திரத்தில் திடீர் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதாகக் கூறி மாநிலம் தழுவிய யாத்திரையை மேற்கொண்டார்.

அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதனால், பாரம்பரியக் கட்சியான இந்திய தேசிய காங்கிரûஸ ஆந்திரத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டார். 

எனினும், காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் ஜெகனுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் 2012-ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 16 மாதங்கள் சிறையில் இருந்த அவர், சிறையைவிட்டு வெளியேறிய பிறகு, தனது ஆதரவாளர்களைத் திரட்டினார். முழு வீச்சில் 2014 சட்டப் பேரவைத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலையும் எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் ஜெகனின் அனுபவமின்மை மற்றும் நாயுடுவின் உத்தி காரணமாக தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், ஜெகன்மோகனுக்கு முதல்வர் பதவியைத் தர மறுத்த காங்கிரஸ் கட்சி அதற்கான விலையை இத்தேர்தலில் கொடுத்தது. அதாவது, 2014-இல் ஆந்திரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கோ ஆந்திர சட்டப் பேரவைக்கோ ஓர் உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்கான அத்தேர்தலில் தெலுங்கு தேசம் 117 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 70 இடங்களிலும், தெலங்கானா ராஷ்டிர சமிதி 63 இடங்களிலும் வெற்றி பெற்றன.பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து புத்தெழுச்சி பெற்றிருந்த சந்திரபாபு நாயுடு, தனது அரசியல் எதிரியான ஜெகனின் கட்சியை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஜெகன் கட்சியைச் சேர்ந்த சுமார் 23 எம்எல்ஏக்களையும், முக்கிய பிரமுகர்களையும் ஈர்த்து, அவர்களைத் தன் கட்சியில் இணைத்துக் கொண்டார் நாயுடு. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை தோன்றியது.

எனினும், ஜெகன்மோகன் மனம் தளரவில்லை. நரேந்திர மோடி மற்றும் நிதீஷ்குமாருக்கு தேர்தல் உத்திகளை வகுத்துத் தந்தவராக அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை நாடினார் ஜெகன்மோகன்.

கிஷோரின் ஆலோசனைப்படி சுதந்திர இந்தியாவிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆந்திரத்தில் 3648 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொண்டார். ஏற்கெனவே 2004-இல் ஆந்திரத்தில் பாத யாத்திரை நடத்திய அவரது தந்தை ஒய்.எஸ்.ஆரின் பாணியை இந்த விஷயத்தில் கடைப்பிடித்தார். இந்த யாத்திரை மூலம் ஆந்திரத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்த ஜெகனுக்கு மக்களிடையே எழுச்சி மிக்க வரவேற்பு கிடைத்தது. இதனால் ஆந்திர மக்களிடையே ஒரு புதிய பிம்பம் அவருக்குக் கிடைத்தது.

அரசியல் தந்திரங்களை அறிந்தவரும், மிகச் சிறந்த நிர்வாகியுமான சந்திரபாபு நாயுடுவையே அசைத்துப் பார்க்கும் வகையில்  ஜெகன்மோகனின் பாத யாத்திரை அமைந்தது.

இம்முறை ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராத பாஜகவையும், அதைப் பெற்றுத் தராத சந்திரபாபு நாயுடுவையும் குறை கூறி அவர் மேற்கொண்ட இந்த யாத்திரை தெலுங்கு தேசம் கட்சியை கதிகலங்க வைத்தது. இந்த விவகாரத்தில் தன் மீது கறை படிந்து விடக் கூடாது என்பதற்காகவே பாஜக கூட்டணியில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இந்தச் சூழலில் அண்மையில் நடந்த ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. இத்தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்களை ஈர்க்கக் கூடிய மணிவாசகங்களையும், பிரசாரப் பாடல்களையும் ஜெகன் கட்சிக்காக உருவாக்கப்பட்டன. 

நாயுடுவுக்கு எதிரான இந்த வாசகங்கள் மக்களிடையே தீவிரமாகப் பரப்பப்பட்டன. அதேபோல் வேட்பாளர் தேர்வு விஷயத்திலும் ஜெகன்மோகனுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்பட்டது. இதனால் தனது முழு பலத்தையும் பிரயோகித்து ஜெகன் களமிறங்கியதால் அவரது கட்சி நிச்சயம் வெற்றி பெற்று விடும் என்ற பிம்பம் ஆந்திர மக்களிடையே உருவாக்கப்பட்டது. இந்தச் சாதகமான சூழலில் ஜெகன் வெற்றி பெறவில்லை என்றால் இனி எப்போதுமே அவரால் வெற்றி பெற முடியாது என்றுதான் கூற வேண்டும்.

இம்முறை ஜெகன் கட்சி தோல்வியைத் தழுவினால், அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் சந்திரபாபு நாயுடு இழுத்து விடுவார் என்பது உறுதி. தவிர, ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளில் அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் நோக்கில் அவ்வழக்குகளைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளையும் நாயடு எடுப்பார். அவ்வாறு நடந்தால் ஜெகன்மோகனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும்.

மறுபுறம், சந்திரபாபு நாயுடுவின் நிலையைப் பார்ப்போம்... அவரைப் பொருத்தவரை, இத்தேர்தலில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏனெனில், ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ஆட்சியைப் பிடித்து, தெலங்கானாவில் கே.சந்திரசேகர் ராவ் ஆட்சி, மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி என்ற நிலை ஏற்பட்டால் அது நாயுடுவுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கும்.

அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், இந்த முக்கோண அரசியல் தாக்குதலை நாயுடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நிலைக்கு ஒரு வகையில் நாயுடுவும் காரணம் என்று கருத வேண்டியிருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி தோற்குமேயானால், அவரது ஆட்சிக்கு எதிரான அலை மட்டும் காரணமாக அல்லாமல், தனது கட்சித் தலைவர்களுக்கு அவர் அளித்த முழுச் சுதந்திரமும்தான் அதற்குக் காரணமாக இருக்கும். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களில் கணிசமானவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், மக்களை ஈர்ப்பதற்காக நாயுடு வெளியிட்ட இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் கடைசி நேரத்தில்தான் மக்களைச் சென்றடைந்தன. மேலும், தனக்கு எதிரான வாக்குகளை காங்கிரஸ் கட்சியும், பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியும் பிரிக்கும் என்ற நாயுடுவின் நம்பிக்கையும் பொய்த்துப் போக வாய்ப்புள்ளது என்றே அரசியல் கள நிலவரம் கூறுகிறது. ஏனெனில், தற்போதைய நிலையில், ஆந்திரத்தில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. 

ஜனசேனை கட்சியைப் பொருத்தவரை, ஆந்திரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் காபு இனத்தவரின் ஆதரவை நம்பியே உள்ளது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 34 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்த மாவட்டங்களில் கிடைத்த வெற்றியே முக்கியக் காரணமாக அமைந்தது. இம்முறை பவன் கல்யாண் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் இந்த மாவட்டங்களில் அக்கட்சி அதிக இடங்களில் வென்றால் அது நாயுடுவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இம்முறை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்தால், நாயுடு மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஊழல் வழக்குகளைத் தொடர சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி தயாராக இருக்கிறார். இது தொடர்பாக அவர் ஏற்கெனவே வாக்குறுதியும் அளித்துள்ளார். அவ்வாறு நடக்கும் என்றும் தங்கள் தலைவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர்ந்த நாயுடுவுக்கு இது சரியான பதிலடியாக இருக்கும் என்றும் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். 

அவ்வாறு நடந்தால் நாயுடுவுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்திச் செல்ல சரியான தலைவர் இல்லை என்ற சூழல் ஏற்படலாம் என்று பாஜக கருதுகிறது. பாஜக தனது ஆதரவை ஆந்திரத்தில் பெருக்கிக் கொள்ள இதுபோன்ற சந்தர்ப்பத்துக்காகவே காத்திருக்கிறது.

இந்தச் சூழலில்தான், பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாயுடு வெளிப்படுத்தியுள்ள கோபத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் தனக்கு பாதகமாக வந்தால் சந்திரபாபு நாயுடு அதை எவ்வாறு எதிர்கொள்வார் - அதனை அவர் ஏற்பாரா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு வேளை, ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கத் தேவையான பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டு, தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தால் அக்கட்சி பவன் கல்யாணின் ஜனசேனையுடன் இணைந்து ஆட்சியமைக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி நடக்குமா அல்லது ஜெகன் கட்சி தனிப்பெரும்பான்மை பெறுமா என்பதை அறிய தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com