

தேசிய அரசியலில் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்டுவதற்கு வரும் மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதைத் தெளிவாக உணர்ந்து அதற்கு ஏற்ப தேர்தல் உத்திகளை வகுத்து வருகிறார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. அதே நேரத்தில் சிங்கத்தை அதன் குகையிலேயே நேரில் சந்திப்பது என முடிவு செய்து மேற்கு வங்கத்தில் பாஜக களமிறங்கியுள்ளது.
இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை அவர்களிடம் இருந்து கைப்பற்றிய மம்தாவுக்கு, வரும் மக்களவைத் தேர்தல் சவாலானதே. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், முதன்மையான இரு தேசியக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், பிராந்தியக் கட்சிகளில் எதுவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அளவுக்கு அதிகபட்சமாக 42 தொகுதிகளில் போட்டியிடவில்லை. இதுதவிர ஒடிஸா, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் சில தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும் அது மம்தாவின் சோதனை முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு வரை மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையேதான் தேர்தலில் நேரடிப் போட்டி இருந்து வந்தது. ஆனால், இப்போது திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே அங்கு பாஜக தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்போது வரை இழுபறியாகவே உள்ளது. அக்கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு இப்போது வரை ஏற்படவில்லை.
பாஜகவே முக்கிய போட்டியாளர்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுப் பேசிய மம்தா, இந்த தேர்தல் தங்கள் கட்சிக்கு பெரும் சவால். மாயாவதி, அகிலேஷ் அழைப்பு விடுத்தால் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினார். இதன் மூலம் இந்தத் தேர்தலில் பாஜகதான் தங்களுக்கு மிகமுக்கியப் போட்டியாளர் என்பதை மம்தா வெளிப்படுத்தினார்.
மேலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட மாநிலத்தின் வடக்குப் பகுதி, மறைந்த காங்கிரஸ் தலைவரின் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் தொகுதியான ராஜ்கஞ்ச், முர்ஷிதாபாத் ஆகியவை கடந்த தேர்தலில் ஆட்டம் கண்டுவிட்டன. ஏனெனில், கடந்த மக்களவைத் தேர்தலில் ராஜ்கஞ்ச், முர்ஷிதாபாத் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. இந்த முறை இடதுசாரிகள் அத்தொகுதிகளை தக்கவைப்பதே பெரும்பாடு என்று கூறப்படுகிறது. எனவே, மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும்தான் கடும் போட்டி இருக்கும் என்பது தெளிவாகிவிட்டது.
நீயா, நானா போட்டி...: கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்ததும், மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்குடன் நடந்து கொண்டதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் என்றால் அது மிகையாகாது. சொல்லப்போனால் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸைவிட, மம்தா பானர்ஜிதான் மத்திய அரசுக்கு எதிராக பல முக்கியப் போராட்டங்களை முன்னெடுத்தார். முக்கியமாக, நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமாரிடன் விசாரணை மேற்கொள்ளச் சென்ற சிபிஐ அதிகாரிகளை, அந்த மாநில போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர். அதையடுத்து, மத்திய அரசு வேண்டும் என்றே தங்கள் மாநிலத்துக்கு எதிராக சிபிஐ-யை தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டி மம்தா நடத்திய தர்னாவும் அந்த மாநில அரசியிலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் பொதுக் கூட்டத்துக்காக மேற்கு வங்கம் செல்ல முயன்றபோது ஹெலிகாப்டர்களை இறங்க மேற்கு வங்க அரசு அனுமதி அளிக்காதது போன்ற நிகழ்வுகள் அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், பாஜகவின் பிரசார ரத யாத்திரைக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. அதனை எதிர்த்து பாஜக, நீதிமன்றம் வரை சென்றது. சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் தடுப்புக் காவலில் வைத்த விஷயம் உச்சநீதிமன்றம் வரை சென்றது உள்ளிட்டவை, அந்த மாநிலத்தில் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையிலான அரசியல் போட்டியை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதன் மூலம் மாநிலத்தில் இந்த மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு பாஜகதான் போட்டி என்பதை திரிணமூல் காங்கிரஸ் சொல்லாமல் சொன்னது என்றால் மிகையல்ல. அதே நேரத்தில், இந்தத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்துக்கு பாஜக மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. கடந்த மாதத்தில் 8 நாள்களில் 10 பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தியது. இதில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அக்கட்சியின் நட்சத்திர பிரசாரகர்கள் பங்கேற்றனர். இதற்கு முன்பு மிகக்குறுகிய காலத்தில் இத்தனை பாஜக தலைவர்கள் ஒரு மாநிலத்தில் தொடர் பிரசாரம் மேற்கொண்டது இல்லை.
கொலை அரசியல்: மேற்கு வங்கத்தில் அரசியல் படுகொலைகள் என்பது வழக்கமாவிட்டது என்றாலும், அண்மை காலத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும், அதனை மக்கள் மத்தியில் அக்கட்சி எடுத்து சென்ற விதமும் மேற்கு வங்க மக்கள் மத்தியில் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்தியாவிலேயே அரசியல் படுகொலைகள் அதிகம் நிகழும் மாநிலம் மேற்கு வங்கம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தாவிய தலைவர்கள்: திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலக்கப்பட்ட எம்.பி. அனுப் ஹசாரே, 4 முறை எம்எல்ஏவாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் சிங் ஆகியோர் பாஜகவில் இணைந்திருப்பது, அவர்கள் சார்ந்த பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதில் அர்ஜுன் சிங், 1998-ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா தொடங்கியபோதே அவருடன் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நகர்வுகள் நிச்சயமாக தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பாதகமாகவே அமையும். அதே நேரத்தில் அர்ஜுன் சிங், கடந்த இருமுறை திரிணமூல் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்தான். அவரால் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே திரிணமூல் விமர்சித்துள்ளது.
முந்தைய தேர்தல்களில்...: கடந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் திரிணமூல் காங்கிரஸ் 39.05 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. பாஜக 16.80 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், அதற்கு முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வாக்கு 8.13 அதிகரித்தது. அதே நேரத்தில் பாஜகவுக்கு 10.66 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தது. இந்த வாக்கு வங்கி அதிகரிப்புதான், பாஜகவுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது. மேலும் 2004 மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2009-இல் 19 தொகுதிகள், 2014-இல் 34 தொகுதிகளில் வெற்றி என்ற அபார வளர்ச்சியைப் பெற்றது.
எது எப்படியோ மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மம்தா, தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான கட்டத்தை இப்போது எட்டியுள்ளார். இந்தத் தேர்தலில் மேற்கு வங்க மக்கள் அவருக்கு கை கொடுத்தால், அவர் கிங் மேக்கராக கூட உருவெடுக்க முடியும். அதே நேரத்தில் பாஜக மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வென்றால், அந்த மாநிலத்தில் வலுவாகக் காலூன்றுவதற்கான வாய்ப்பாக அமைவதுடன், தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாகவும் இருக்கும்.
பாஜகவின் இலக்கு
கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 23 தொகுதிகளைக் குறிவைத்து களமிறங்கியுள்ளது. இதில் 18 தொகுதிகளில் அக்கட்சி கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த 18 தொகுதிகளையும் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என பிரிவுகளாகப் பிரித்து மாநில பாஜக தலைவர்களுக்கு உத்தி வகுத்துக் கொடுத்துள்ளார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இதில், மேற்கு வங்கத்தின் கூச் பிகார், ஜல்பைகுரி, மால்டா, வடக்கு 24 பர்கானா மாவட்டம், ஹெளரா, ஹூக்ளி, பீர்பூமி, ஜார்க்கிராம், மேற்கு மிதுனபுரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே பாஜக தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பங்குரா, ஜார்க்கிராம், மிதுனபுரி, போல்பூர் ஆகிய இடங்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.
மம்தாவின் வியூகம்
கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் நான்கு இடங்களிலும், பாஜக, இடதுசாரிக் கட்சிகள் தலா இரு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் 34 எம்.பி.க்களில் 8 பேருக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பை மறுத்துள்ளது. மேலும் இரு எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துவிட்டனர். 42 தொகுதிகளுக்கும் மம்தா வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். அதில் 17 பேர் புதுமுகங்கள் ஆவர். அதாவது இப்போதுதான் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் மாநிலத்தில் ஆளும் கட்சியான தங்களுக்கு எதிரான பொதுவான எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியும் என்று மம்தா கருதுகிறார். திரிணமூல் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் மற்றொரு முக்கிய அம்சம் 41 சதவீதம் பெண்களுக்கு இடமளித்திருப்பது. இது பெண் வாக்காளர்களைக் கவர பெருமளவில் உதவும் என்பது மம்தாவின் வியூகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.